Press "Enter" to skip to content

“இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன், என்ன விலையையும் கொடுக்கத் தயார்”

பட மூலாதாரம், EPA-EFE/REX/SHUTTERSTOCK

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அச்சமின்றி பேசி வருவதால் அவரது குரலை அரசு ஒடுக்குகிறது என்றும் எம்.பி பதவி பறிப்பு விவகாரத்தை சட்டபூர்வமாக சந்திப்போம் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, ராகுல் காந்தி தெரிவித்த சர்ச்சை கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராகுல் காந்தியை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம்.

இந்த தீர்ப்பையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் வெள்ளிக்கிழமை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே எம்.பி தகுதி நீக்க அறிவிப்புக்கு பின்னர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் குரலுக்காக நான் போராடுகிறேன். இதற்காக என்ன விலையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர்கள் அபிஷேக் மனு சிங்வி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அபிஷேக் மனு சிங்வி பேசுகையில், “நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ராகுல் காந்தி அச்சமின்றி பேசி வருகிறார். சமூக பிரச்னை, பொருளாதார பிரச்னை, அரசியல் பிரச்னைகள் குறித்து அவர் வெளிப்படையாக பேசி வருகிறார். அதற்கான விலையை ராகுல் கொடுத்து வருகிறார். பணமதிப்பிழப்பு, சீனா விவகாரம் போன்றவை தொடர்பாக ராகுல் காந்தி ஆதாரத்துடன் பேசி வருவதால் அவரை கண்டு அச்சம் கொண்டுள்ள மத்திய அரசாங்கம் அவரை வதைக்கிறது. ராகுலின் குரலை ஒடுக்க புதிய உத்திகளை அரசு தேடி வருகிறது,” என்றார்.

ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்பு

பட மூலாதாரம், Indian National Congress

ராகுல் காந்தி மீது கடந்த ஏப்ரல்16, 2019ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது தவே என்பவர் நீதிபதியாக இருந்தார். 2021ல் ராகுல் காந்தி தனது வாக்குமூலத்தை அளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். மார்ச் 2022ல் புகார்தாரர் ஒருவர் ராகுல் காந்திக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மனுதாரர் உடனடியாக உயர் நீதிமன்றத்தை நாடி தனது மனு மீதான விசாரணையை நிறுத்தி வைக்க அனுமதி பெறுகிறார். அதாவது மனு தாக்கல் செய்தவரே தனது மனுவுக்கு எதிராக தடை உத்தரவை பெறுகிறார்.

அதே மனுதாரர் 11 மாதங்கள் கழித்து 16 பிப்ரவரி 2023 அன்று தனது மனுவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோருகிறார். விசாரணை நீதிமன்றத்தில் போதிய ஆதாரங்கள் உள்ள நிலையில், நிலுவை காரணமாக வழக்கு விசாரணை பாதிக்கப்படுகிறது என்று அவர் தெரிவிக்கிறார்.

இதையடுத்து தடையை உயர் நீதிமன்றம் விலக்கிக் கொள்கிறது.

மனுதாரர் உடனடியாக விசாரணை நீதிமன்றத்தை நாடுகிறார், பின்னர் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி மாறிவிடுகிறார்.

நீதிமன்றம் தண்டனை வழங்கியிருந்தாலும் அரசியலமைப்பின் 103ஆம் விதியின்படி குடியரசு தலைவர் தான் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய முடியும். தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பாக தேர்தல் ஆணையத்திடம் கருத்து கேட்க வேண்டும். ஆனால், அது செய்யப்படவில்லை.

இந்த தகுதி நீக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த தண்டனையை நிறுத்தி வைக்கும் உத்தரவு மேல்மறையீட்டில் கிடைக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சட்டத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எதிர்காலத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்” என்கிறார் அபிஷேக் மனு சிங்வி.

இந்த சட்டப்போராட்டங்கள் ராகுல் காந்தி அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு சவாலாக இருக்குமா என்று செய்தியாளர்கள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அபிஷேக் மனு சிங்வி, “2024க்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளன. இன்னும் ஒருசில நாட்களில் நீதிமன்றத்தை நாடி தண்டனையை நிறுத்தி வைக்கக் கோருவோம். இதில் எதேனும் தாமதம் ஏற்பட்டால் உயர் நீதிமன்றத்தையோ உச்ச நீதிமன்றத்தையோ நாடுவோம்” என்று பதிலளித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »