Press "Enter" to skip to content

யானைகளை காவு வாங்கும் மின்சார வேலிகள் – தொடரும் துர்மரணங்களை தவிர்க்க என்ன வழி?

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களுக்குள் மட்டும் வெவ்வேறு மின்சார விபத்துகளால் ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளன.

யானை – மனித மோதல், யானைகள் இறப்பு பற்றிய விவாதங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த நிலையில் சமீபத்திய துர்மரணங்கள் இதை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

மின்வேலிகளால் தொடரும் யானை மரணங்கள்

பட மூலாதாரம், Getty Images

யானை மரணங்கள்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மாரண்டஹள்ளி அருகேசக்தி என்பவருக்குச் சொந்தமான 22 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இதை முருகேசன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். வனப்பகுதியை ஒட்டிய இடம் என்பதால் தோப்பைச் சுற்றி மின்வேலி அமைத்துள்ளனர்.

கடந்த மார்ச் 7 ஆம் தேதி இவருடைய தோட்டம் அருகே வந்த மூன்று காட்டு யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தன. இந்த விபத்தில் இரண்டு பெண் யானைகள், ஒரு மக்னா யானை பலியாகின. இரண்டு குட்டி யானைகள் தனித்துவிடப்பட்ட நிலையில் அவற்றை வனத்துறையினர் மீட்டனர்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து 10 நாட்கள் கழித்து அதே பகுதியில் மேலும் ஒரு யானையின் மரணம் பதிவாகியிருந்தது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகம் பிக்கிலி கிராமப் பகுதியில் ஆண் யானை ஒன்று விளை நிலங்களில் நடமாடி வந்தது. அந்த யானையை வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குள் திருப்பி அனுப்ப முயன்று வந்தனர்.

மார்ச் 18ஆம் தேதி அன்று காலை கம்பைநல்லூர் அடுத்த கெலவள்ளி அருகே உள்ள ஏரிக்கரையில் ஏற முயன்ற இந்த யானை அங்கு தாழ்வாக இருந்த உயர் அழுத்த மின்பாதையில் மோதியுள்ளது. இதில், யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அந்த யானை உயிரிழந்தது. யானை மின்சாரம் தாக்கி சரிந்து விழும் காணொளி இணையத்தில் பரவியது.

இந்த நிலையில் யானைகளின் தொடர் மரணங்கள் தொடர்பாகக் கவலை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பாக தலைமை வனப் பாதுகாவலர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்து ஒரு வாரத்திற்குள்ளாக கோவையில் மேலும் ஒரு யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது.

மார்ச் 25ஆம் தேதி அன்று கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூச்சியூர் அருகே ஆண் யானை ஒன்று மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது. தனியார் நிலத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதி மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்துள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மின்வேலிகளால் தொடரும் யானை மரணங்கள்

பட மூலாதாரம், TN FOREST DEPARTMENT

கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், “கோவையில் உயிரிழந்த யானை மின்வேலியில் மோதி இறக்கவில்லை.

வனப்பகுதியிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் தனியார் தரிசு நிலத்தில் அமைந்துள்ள மின் கம்பத்தில் யானை மோதியுள்ளது. அதில் சரிந்த மின் கம்பம் யானை மீதே விழுந்ததில் உயிரிழந்துள்ளது. இது யாரும் எதிர்பார்க்காத துர்திருஷ்டவசமான சம்பவம்,” எனக் கூறினார்.

மின் வேலிகள் சட்டப்பூர்வமானதா?

கோவை வனக்கோட்டத்தில் சமீப மாதங்களில் மின்வேலியால் அடிபட்டு யானை உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழவில்லை. மின் கம்பமே சரிந்து உயிரிழப்பது இதுதான் முதல்முறை. மின்வேலிகள் அமைப்பதற்கு அனுமதி கிடையாது. ஆனால் சிலர் யானை மீது உள்ள அச்சத்தால் மின்வேலிகள் அமைக்கின்றனர்.

அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. அதிகபட்சம் 12 வாட் திறன் கொண்ட சூரிய மின்சார வேலிகள் மட்டுமே அமைக்க வேண்டும். சட்டவிரோத மின்வேலிகள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை வனத்துறையினரும் மின்சாரத் துறையினரும் இணைந்து கண்காணித்து வருகிறோம்.

யானை நடமாட்டம், யானை வழித்தடம் அமைந்துள்ள பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்,” என்றார்.

மின்வேலிகளால் தொடரும் யானை மரணங்கள்

பட மூலாதாரம், Getty Images

கோவையில் யானை இறப்பைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் துறை மற்றும் வனத்துறை, மின்சாரத் துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், “காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் தாழ்வான, பழுதடைந்த மின் கம்பங்களைச் சரி செய்யவும், உயர் மின் கம்பங்களை அமைக்கவும் மின் கம்பங்களைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மின்வேலிகள் மற்றும் மின்கம்பங்களை ஆய்வு செய்ய மேற்கொள்ளப்படும் கூட்டுப்புலத்தணிக்கை தொடர்ந்து நடத்தப்படும். மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறை வருவாய் வட்ட அளவில் அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,” என கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வன ஆர்வலர் பாண்டியராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “காட்டுயிர்கள் உயிரிழக்கும் செய்திகள் வருகின்றபோது அல்லது நீதிமன்றம் தலையிட்டு விசாரிக்கும்போது காட்டப்படும் தீவிரம் அதன் பிறகு இருப்பதில்லை.

தென்காசியில் விவசாயி ஒருவர் காட்டுப்பன்றியைத் தடுக்க மின்கம்பத்திலிருந்து நேரடியாக மின்சாரத்தை இழுத்துள்ளார். ஆனால் துர்திருஷ்டவசமாக அதில் அவரே அடிபட்டு உயிரிழந்துள்ளார். இது குறிப்பிட்ட ஒரு துறையின் தவறு என்று கூறிவிட முடியாது.

மின்வேலிகளால் தொடரும் யானை மரணங்கள்

பட மூலாதாரம், TN FOREST DEPARTMENT

அரசு என்ன செய்ய வேண்டும்?

காட்டுயிர்களை எதிர்கொள்வதில் மக்களுக்கும் போதிய விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட வேண்டும். இத்தகைய சூழ்நிலைகளில் வனத்துறையால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை.

வனச் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். மின்சாரத் துறை, வனத் துறை என எந்தத் துறையாக இருந்தாலும் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தால் அரசு அதிகாரிகள் அதற்கு பொறுப்பாக்கப்பட வேண்டும்.

யானைகளின் போக்கை நாம் கட்டுப்படுத்த முடியாது. எனவே யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். காட்டை ஒட்டிய இடங்களில் அமைந்துள்ள மின் அமைப்பு போன்ற கட்டுமானங்கள் விபத்துகளைத் தவிர்க்கும் வண்ணம் பலப்படுத்தப்பட வேண்டும்.

காட்டை ஒட்டியுள்ள நிலங்களில் யானைகளை ஈர்க்கும் பயிர்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட துறையின் பொறுப்பு என இதைத் தவிர்த்துவிட முடியாது. இதில் சம்மந்தப்பட்ட அனைத்துத் தரப்பும் இணைந்து பணி செய்தால்தான் எதிர்பாராத யானைகளின் மரணங்களைக் குறைக்க முடியும்,” என்றார்.

தமிழ்நாடு முதன்மை வனப் பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி பிபிசி தமிழிடம் பேசுகையில், “யானைகள் இறப்பைத் தடுக்க பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கோவையில் யானை மின் கம்பத்தில் மோதி உயிரிழந்தது. தர்மபுரியில் வனப்பகுதியிலிருந்து 60 கிமீ தொலைவில் ஓர் இடத்தில் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்தது. இவை இரண்டுமே விபத்துகள் தான். மின்வேலியில் யானை அடிபட்டு உயிரிழந்த சம்பவம்தான் குற்றம்.

மின்வேலிகளால் தொடரும் யானை மரணங்கள்

பட மூலாதாரம், Getty Images

சட்டவிரோதமாக மின்வேலியை அமைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது. மின் கம்பங்களில் இருந்து சட்டவிரோதமாக மின் இணைப்பை எடுத்துப் பயன்படுத்துகின்றனர்.

இது மின்சார சட்டம் மற்றும் வனப் பாதுகாப்பு சட்டங்களின்படி குற்றம். பெரும்பாலான சம்பவங்களில் காட்டுப் பன்றிகளைத் தடுப்பதற்காக இதை வைக்கிறார்கள், அதனால்தான் உயரம் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தாழ்வான மின்வேலிகள், கம்பங்களில் எதிர்பாராத விதமாக யானைகள் சிக்கிக் கொள்கின்றன.

வனத்துறையின் நடவடிக்கைகள் என்ன?

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மின்சாரத் துறை, வனத்துறை இணைந்து தொடர் கண்காணிப்பு மேற்கொண்டோம்.

அதில் பல இடங்களில் சட்ட விரோத மின்வேலிகள், தடுப்புகள் இருப்பது அறியப்பட்டு அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் யானை நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மின்வேலிகளால் தொடரும் யானை மரணங்கள்

பட மூலாதாரம், TN FOREST DEPARTMENT

யானையின் வழித்தடங்களில் மின் விபத்துகளால் பாதிக்கப்பட சாத்தியமுள்ள இடங்களைக் கண்டறிந்துள்ளோம். அந்த இடங்களில் மின் கசிவை தடுக்கவும் அரண் அமைக்கவும் தேவைப்படும் இடங்களில் மின் கம்பங்களை நிலத்திற்கு அடியில் அல்லது உயர்மட்டத்தில் அமைப்பதற்கும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

தலைமை செயலாளர் தலைமையில் மின்சாரத் துறை, வனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வருகின்ற செவ்வாய்க்கிழமை அடுத்த கூட்டம் நடைபெற உள்ளது. மின் பரிமாற்றக் கோடுகளை மாற்றியமைப்பது அதிக பொருட்செலவு கொண்டது மற்றும் நீண்ட காலம் செய்யக்கூடியது. அதற்கான முன்மொழிவை வனத்துறை தரப்பிலிருந்து வழங்கியுள்ளோம்.

அதை நிறைவேற்றும் பொறுப்பு மின்சாரத் துறையிடம் உள்ளது. அதற்கான ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு கிடைத்த பிறகு அவை நிறைவேற்றப்படும்,” என்றார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் யானைகள் மரணம் தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை வருகின்ற ஏப்ரல் 17ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »