Press "Enter" to skip to content

நிகத் ஜரீன், லவ்லினா: உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 4வது தங்கம்

பட மூலாதாரம், Getty Images

உலக பெண்கள் குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

சனிக்கிழமை இந்தப் போட்டியில் இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்றிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 50 கிலோ எடைப்பிரிவில் நிகத் ஜரீன், 75 கிலோ எடைப் பிரிவில் லவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோர் தங்கம் வென்றனர். இதன் மூலம் இந்தப் போட்டியில் இந்தியா வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

நிகத் ஜரீன்

இந்திய வீராங்கனையும், பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை 2022 விருதுக்கு இறுதிச் சுற்றுக்குத் தேர்வானவருமான நிகத் ஜரீன் வியட்நாம் நாட்டின் நியூயன் தி டாம் என்பவரை ஞாயிற்றுக்கிழமை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 50 கிலோ எடைப் பிரிவுக்கான போட்டி இது.

இந்தியத் தலைநகர் புது தில்லியில் நடந்து வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நீத்து கங்காஸ், ஸ்வீட்டி பூரா ஆகிய இரண்டு இந்திய வீராங்கனைகள் தத்தமது பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றனர். நிகத் ஜரீனுக்கு கிடைத்த தங்கப் பதக்கம் மூன்றாவது தங்கப் பதக்கமாக வந்துள்ளது. தவிர, நிகத் வெல்லும் இரண்டாவது உலக சாம்பியன் தங்கப் பதக்கம் இது.

நிகத் ஜரீன்

பட மூலாதாரம், Getty Images

யார் இந்த நிகத் ஜரீன்?

தெலங்கானாவின் நிஜாமாபாத்தைச் சேர்ந்தவர் நிகத் ஜரீன். நிகத் ஜரீனின் தந்தை முகமது ஜமீல் அகமது தனது மகளுக்கு குத்துச்சண்டையில் ஊக்கம் அளித்து ஒரு வருடம் பயிற்சியளித்தார். பின்னர் 2009 இல் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த துரோணாச்சார்யா விருது பெற்ற ஐவி ராவிடம் பயிற்சி பெற்றார்.

2011 ஆம் ஆண்டு துருக்கியின் அன்டலியாவில் நடந்த சர்வதேச பெண்கள் இளைஞர் மற்றும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றது அவரது வாழ்க்கையில் முதல் பெரிய படியாகும்.

2011இல் ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை வென்ற நிகத் ஜரீன், 2022ல் பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியனாக உயர்ந்தார். பர்மிங்ஹாம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஃப்ளைவெயிட் பிரிவில் குத்துச்சண்டையில் தங்கப் பதக்கத்தையும் நிகத் ஜரீன் வென்றார்.

அவர் இந்தியாவில் நடந்த தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்துடன் 2022ஆம் ஆண்டை முடித்தார். தனது ஆற்றல் மிக்க மகள், அவருடைய ஆற்றல் முழுவதையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிக்க வேண்டும் என்பதற்காக, ஜரீனின் தந்தைதான் அவரை விளையாட்டில் அறிமுகப்படுத்தினார்.

12 வயதில் சண்டையின்போது கண்களில் கருவளையம் ஏற்பட்டது, திருமண வாய்ப்பு குறித்து உறவினர்கள் முன்வைத்த மோசமான கருத்துகள் ஆகியவற்றால் அவரது தாய் அடைந்த ஆரம்ப கால கவலைகளை ஒதுக்கிவிட்டு, அவருடைய கனவுகளைப் பின்பற்றுமாறு அவரை ஊக்குவித்தார் அவரது தந்தை. அதன் பிறகு நிகத் தயக்கமின்றி ஓடிக் கொண்டிருக்கிறார்.

லவ்லினா

பட மூலாதாரம், Getty Images

லவ்லினா போர்கோஹெய்ன்

உலகப் பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 75 கிலோ எடைப்பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்ட்லின் பார்க்கரை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தினார் லவ்லினா போர்கோஹெய்ன். இது இந்தியாவின் 4வது தங்கப் பதக்கம் ஆனது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த லவ்லினா போர்கோஹெய்ன் டோக்கியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது மூலம் ஒலிம்பிக்கில் பாக்ஸிங்கில் பதக்கம் வென்ற மூன்றாவது நபர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார். பாக்ஸிங் ஜாம்பவான் முகமது அலியின் சண்டைகள் மூலம்தான் தனக்கு பாக்ஸிங் குறித்து தெரியவந்தது என்றும் அவரது பாக்ஸிங் மேட்ச்கள் தான் தான் பதக்கம் வெல்ல ஊக்கமாக இருந்தன என்றும் பிபிசிக்கு அளித்திருந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பெண்களுக்கு பாக்ஸிங் விளையாட்டு பாதுகாப்பானது அல்ல என்று ஊரில் அனைவரும் கூறியபோது தனது பெற்றோர்கள்தான் தன்னை நம்பினார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஒலிம்பிக் போட்டியில் அவர் கலந்துகொள்வதற்கு முன்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டும் வந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »