Press "Enter" to skip to content

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு: அவர் வெற்றி பெற்ற வயநாடு நகரில் ஒலித்த முழக்கம் என்ன?

பட மூலாதாரம், IMRAN QURESHI

பிரதமர் நரேந்திர மோதி குறித்து என்ன பேசியதற்காக ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதோ அந்தப் பேச்சு, அவரை எம்.பி.யாக தேர்வு செய்த கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் கல்பெட்டா நகர வீதியெங்கும் ஒலித்தது.

பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளில் சிக்கி வெளிநாடு தப்பிச் சென்ற நீரவ் மோதி, லலித் மோதி ஆகியோரை இணைத்து தனது தேர்தல் பிரசார உரைகளில் திரும்பத் திரும்ப ராகுல் காந்தி கூறிய அதே முழக்கங்களை, நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டிருந்த திரளான காங்கிரஸ் தொண்டர்கள் மீண்டும் எழுப்பினர்.

“ராகுல் காந்தி எந்த முழக்கத்துக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டாரோ அதே முழக்கங்களை நாங்கள் மீண்டும் எழுப்புவோம்,” என்று வயநாடு மாவட்ட காங்கிரஸ் குழுயின் பொதுச் செயலாளர் கே.ஏ.ஆபிரகாம், மத்திய அரசு அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக, வயநாடு எம்எல்ஏ டி சித்திக் பிபிசி ஹிந்தியிடம் கூறியதாவது, “உண்மையைப் பேசுவதன் மூலம் காந்தியின் விழுமியங்களை மீண்டும் வலியுறுத்தும் ராகுல் காந்தியின் வாயை அடைக்க நரேந்திர மோதி முயற்சிக்கிறார். வயநாடு முழுவதும் ராகுல் காந்திக்கு பின்னால் இருக்கிறது. நரேந்திர மோதியால் ஒன்றும் செய்ய முடியாது ” என்றார்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் - வயநாடு மக்கள் ரியக்‌ஷன்

பட மூலாதாரம், IMRAN QURESHI

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்பெட்டாவின் பிரதான சாலை வழியாகச் சென்று, கோஷங்களை எழுப்பினர், பின்னர் உள்ளூர் தொலைபேசி நிலையத்திற்கு முன்பு பிரதமர் மோதியின் உருவ பொம்மையை எரித்து அவர்கள் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

சமூக வலைத் தளங்களிலும், மற்ற இடங்களிலும் ராகுல் காந்தியை கொச்சைப்படுத்தி பேசப்படும் நிலையில், நமக்கு பேட்டியளித்த பலரும், பேட்டியை தவிர்த்த பலரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு ஆதரவாகவே பேசினர்.

”ராகுல் ஒரு இளம் தலைவர். அடுத்த பிரதமராக வரப்போகிறார். இதனால் தான், பாஜக அவரது பாதையில் முட்டுக்கட்டை போடுகிறது,” என முதியவர் முரளீதரன் கூறுகிறார்.

மற்றொரு முதியவர் அப்துர் ரஹ்மான் நம்மிடம் பேசும்போது, “மோதியை அம்பலப்படுத்தியதால் ராகுல் காந்தி குறிவைக்கப்படுகிறார். அரசியல் வேறுபாடு வேறு, பழிவாங்கும் நடவடிக்கை வேறு, ”என்று கூறினார்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் - வயநாடு மக்கள் ரியக்‌ஷன்

பட மூலாதாரம், IMRAN QURESHI

“எங்களுக்கு கிடைத்த சிறந்த எம்பி ராகுல் காந்தி. அவர் மீண்டும் தேர்தலில் நின்றாலும் வெற்றி பெறுவார்” என்று ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுனர் ஷிஜு தெரிவித்தார்.

ஷிஜுவின் கருத்தையே மெடிக்கல் கடை நடத்தி வரும் ஸ்ரீலட்சுமியும் எதிரொலித்தார். ஆனால் “ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் திணிக்கப்பட்டது என்றும், இந்தியாவை ஜனநாயக நாடு என்று முடியாது” என்றும் ரியாஸ் கூறுகிறார்.

அப்பகுதியில் கடை வைத்திருக்கும் நம்மிடம் பேசும்போது, “ராகுல் காந்திக்கு நடந்தது சரியல்ல. இந்தியா மோதியுடையது அல்ல. அது அனைவருக்கும் சொந்தமானது” என்றார்.

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? என்ற கேள்விக்கு “காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும். இது ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தொகுதி,” என்று அமீர் பதிலளித்தார்.

இந்தியாவில் உள்ள உயர் நீதித்துறை சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றியமைக்கும் என்று சித்திக் நம்புகிறார். “ஒட்டுமொத்த வயநாடும் ராகுல் காந்திக்கு பின்னால் இருக்கிறது. அவரால் மட்டுமே வயநாட்டை பிரதிநிதித்துவப்படுத்த முடியும்” என்றார் சித்திக்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »