Press "Enter" to skip to content

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்கும்? – மு.க.ஸ்டாலின் விளக்கம்

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், மீனவ மகளிர், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகளில் பணி புரியும் மகளிர் உள்ளிட்டோர் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டத்தால் பயன்பெறுவார்கள் என்றும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று பேசிய பா.ம.கவின் ஜி.கே. மணி, மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தில், அந்தத் தொகை கிடைக்காதவர்களின் நிலை என்ன என்றும் இந்தத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்றும் கேள்வியெழுப்பினார்.

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவான விளக்கமொன்றை அளித்தார்.

அதில், “இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ‘மகளிர் உரிமைத் தொகை’ குறித்த அறிவிப்பு வெளியாகி, பொருளாதார வல்லுநர்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மாபெரும் திட்டத்தைச் செயல்படுத்தும் விதம் குறித்தும் அதில் பயன்பெறக் கூடிய குடும்பத் தலைவிகளின் தேர்வு குறித்தும் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கருத்துகளை முன்வைத்து விளக்கமளிக்கிறேன்.

பொருள் ஈட்டும் ஒவ்வோர் ஆணுக்குப் பின்னாலும், தன் தாய், சகோதரி, மனைவி என அந்த ஆணின் வீட்டுப் பெண்களுடைய பல மணிநேர உழைப்பு மறைந்திருக்கிறது. ஆண் ஒருவரின் வெற்றிக்காகவும் தங்கள் குழந்தைகளின் கல்வி, உடல்நலம் காக்கவும் இந்த சமூகத்திற்காகவும் வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் அவர்கள் உழைத்திருப்பார்கள்?

அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டிருந்தால், இந்நேரம் நம் நாட்டில் குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும் சட்டம் இயற்றாமலேயே இடம்பெற்றிருக்கும்.

இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு அங்கீகரித்தால் ஆண்களை உள்ளடக்கிய இந்தச் சமூகமும் பெண்களுக்கான சமஉரிமையை வழங்கிடும் நிலை விரைவில் உருவாகிவிடும் என்று அரசு உறுதியாக நம்புகிறது. எனவேதான், இந்தத் திட்டத்திற்கு ‘மகளிருக்கான உதவித் தொகை’ என்று இல்லாமல் ‘மகளிர் உரிமைத் தொகை’ என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது.

Universal Basic Income என்ற பெயரில் உலகில் பல நாடுகளில் சோதனை முறையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு சில சமூகப் பிரிவினரிடம் மட்டும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அப்படி பரிசோதனை அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தின் மூலமாகவே, பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம், வறுமை பாதியாகக் குறைந்திட வாய்ப்பு உண்டு என்றும் கிடைக்கும் நிதியை பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கும் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவச் செலவு செய்திடவும் முன்னுரிமை தருகிறார்கள் எனவும் சிறு சிறு தொழில்களைச் செய்ய முன்வருகிறார்கள் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்திற்கும் மேலாக, தன்னம்பிக்கை பெற்றுள்ளார்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டம்

பட மூலாதாரம், Getty Images

பரிசோதனை முயற்சியாக உலகில் சில நாடுகளில் ஆங்காங்கே நடைமுறைப்படுத்திய திட்டத்திற்கே இவ்வளவு பயன்கள் கிடைக்கின்றன என்றால் தமிழ்நாட்டில் செயல்படுத்தப் போகும் இந்த மாபெரும் முயற்சி, எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கப் போகும் பயன்களை உறுப்பினர்கள் ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தத் திட்டத்திற்காக, இந்த நிதிநிலை அறிக்கையில் ஏழாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதையொட்டி, எவ்வளவு பேர் பயன்பெறுவார்கள் என்று பலர் மனக் கணக்குப் போட்டு வருகிறார்கள்.

‘அனைவருக்கும் வீடு’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டால், வீடு இல்லாதவர்களுக்கு ஓர் இல்லம் அமைத்துத் தருவது என்று பொருள். ‘அனைவருக்கும் நிலம்’ என்றொரு திட்டம் என்றால், நிலமற்ற கூலித் தொழிலாளர்கள், உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என்பதுதான் அடிப்படை நோக்கம். ‘முதியோர் ஓய்வூதியம்’ என்றால், ஆதரவற்ற முதியோரின் நலன் காக்க முனையும் திட்டம் என்று பொருள். அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் என்றால், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு முன்னுரிமை என்று பொருள்.

அந்த வகையில், இந்த ‘மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது.

அடுத்ததாக ஆண்டுக்கு 12,000 ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டம்

பட மூலாதாரம், TNDIPR

மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

இந்த ‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும்.

மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வைச் சிறிதேனும் மாற்றிவிடும் என நம்பும் எந்தக் குடும்பத் தலைவியையும் மனிதநேய அடிப்படையிலான பெண் உரிமை காக்கக்கூடிய எனது தலைமையிலான அரசு கைவிட்டுவிடாது” என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய தகுதி வாய்ந்த மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் சட்டமன்ற வரவு செலவுத் திட்டம் உரையின்போது அறிவித்திருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »