Press "Enter" to skip to content

“சென்னையில் சூப்பர்; டெல்லியில் மோசம்” – விரக்தியில் கஜகஸ்தான் செஸ் வீராங்கனை

பட மூலாதாரம், FACEBOOK/ZHANSAYA ABDUMALIK

சர்வதேச செஸ் கூட்டமைப்பான ’FIDE’ (World Chess Federation) ஒருங்கிணைக்கும் பெண்கள் செஸ் கிராண்ட் பிரிக்ஸ் தொடர், டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கஜகஸ்தான் வீராங்கனை அந்தத் தொடரில் பங்கெடுக்க டெல்லி வந்தபோது தான் சரியாக நடத்தப்படவில்லை என விமர்சித்து செஸ் கிராண்ட் பிரிக்ஸ் தொடரைப் புறக்கணித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவரான ஆர்கடி டிவோர்கோவிச் பகிரங்கமாகத் தனது மன்னிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், இதில் எங்கே தவறு நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் பாரத் சிங்கை பிபிசி தமிழ் தொடர்புகொண்டது. ஆனால், அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

உலக அளவில் நடைபெறும், செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்களுக்கான கிராண்ட் பிரிக்ஸ் தொடர் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இது இந்தியாவில் நடைபெறும் முதல் கிராண்ட்பிரிக்ஸ் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக உலகின் பல நாடுகளில் இருந்து செஸ் வீராங்கனைகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இந்தப் போட்டியின் துவக்கவிழா, கடந்த மார்ச் 23ஆம் தேதி நடைபெற்றது.

மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் தொடர் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரின் முதல் இரண்டு கட்ட போட்டிகள் முன்னதாக கஜகஸ்தான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடைபெற்றன. இந்தத் தொடரின் மூன்றாவது கட்ட போட்டி தற்போது டெல்லியில், மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடக்கிறது.

கிராண்ட்பிரிக்ஸ் தொடர் இந்தியாவில் நடைபெறுவது, விளையாட்டு வீரர்கள் மத்தியில் மிகப்பெரும் வாய்ப்பாகக் கருதப்பட்டு வரும் சூழலில், இந்த செஸ் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்த கஜகஸ்தான் வீராங்கனை ஸான்சியா அப்துல்மாலிக், தனக்கு முறையான வரவேற்பு அளிக்கப்படவில்லை என்று கூறி போட்டியிலிருந்து விலகியுள்ளார். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிருப்தியை வெளிப்படுத்திய வீராங்கனை

விளையாட்டு, இந்தியா

பட மூலாதாரம், FACEBOOK/ZHANSAYA ABDUMALIK

இந்தச் சம்பவம் குறித்துத் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்துள்ள கஜகஸ்தான் வீராங்கனை ஸான்சியா மாலிக், ”போதுமான அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருந்ததால், நான் இந்த செஸ் தொடரைவிட்டு வெளியேறிவிட்டேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நான் டெல்லி விமான நிலையத்திற்கு மதியம் 1.30மணிக்கு வந்தடைந்தேன். ஆனால் விளையாட்டுத் தொடரை ஒருங்கிணைப்பவர்கள் என்னை மறந்துவிட்டார்கள். என்னை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவரை நான் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன்.

அவருக்கு நான் அனுப்பிய குறுஞ்செய்தியை, அவர் ஒன்றரை மணி நேரம் கழித்துதான் பார்த்தார். இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து எனக்கு வந்த மெயிலில் சொல்லப்பட்டிருந்தது. அந்த விஷயங்கள் அனைத்தையும் நான் முறையாகக் கடைபிடித்தபோதும், நான் விமான நிலையம் வந்தபோது என்னை அழைத்துச் செல்வதற்கு அங்கே யாரும் இல்லை.

கடந்த ஆண்டு ஒலிம்பியாட் தொடருக்காக இந்தியா வந்திருந்த ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்தத் தொடருக்காக வந்திருக்கும் வெறும் 12 பேருக்கு ஏற்பாடுகள் செய்வது அவ்வளவு கடினமான காரியமல்ல என்று நினைக்கிறேன்.

இதுவே ஒரு சிறந்த ஆண் போட்டியாளர், தொடரில் பங்கேற்க வந்து, இதேபோன்ற நிலைமை ஏற்பட்டிருந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலும் அவ்வளவு வசதியான இடத்தில் அமைந்திருக்கவில்லை,” என்று கூறியுள்ளார்.

அவரின் இந்தப் பதிவு, ட்விட்டரில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக கிராண்ட் பிரிக்ஸ் தொடர் ஏற்பாட்டை அவர் சென்னையில் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒலிம்பியாட் செஸ் தொடருக்கான ஏற்பாட்டோடு ஒப்பிட்டு கூறியிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சென்னை ஒலிம்பியாட் போட்டியுடன் ஒப்பிட்டு விமர்சனம்

”டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை இருக்கிறது என்பது சர்வதேச செஸ் கூட்டமைப்பிற்குத் தெரியும். நான் விமானத்தில் வந்துகொண்டிருந்தபோது, கீழே பெரும் அளவிலான நிலபரப்பில் நெருப்பிட்டு எரித்துக் கொண்டிருந்தனர்.

தங்கியிருந்த ஹோட்டலை சேர்ந்தவர்கள், என்னை வெளியே போக வேண்டாம் எனக் கூறியிருந்தனர். அது பாதுகாப்பனதாக இருக்காது எனவும் அவர்கள் அறிவுறுத்தினர்.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். சென்னையில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றது, எனக்குச் சிறந்த அனுபவமாக இருந்தது. அதுகுறித்த நிறைய நல்ல நினைவுகள் எனக்கு இருக்கின்றன. ஆனால் இந்த முறை ஏதோ தவறாகப் போய்விட்டது. இத்தகைய நிலையில், என்னால் இங்கே தொடர்ந்து இரண்டு வாரங்கள் தங்கியிருந்து விளையாட முடியும் என்று தோன்றவில்லை,” என்று ஸான்சயா அப்துல்மாலிக் தனது பதிவில் கவலையுடன் குறிப்பிட்டுருந்தார்.

மேலும், “உலகளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் பெண்களுக்காக நடைபெறும் இந்த கிராண்ட் பிரிக்ஸ் தொடர் மிகவும் முக்கியமானது. பெண்களுக்காக நடத்தப்படும் இதுபோன்ற தொடர்களை ஒருங்கிணைக்கும்போது சர்வதேச செஸ் கூட்டமைப்பு கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் விளையாட்டுகளில் விளையாடுவதற்கு நாங்கள் தகுதியானவர்கள். எனவே எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால், நான் விளையாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முடிவு செய்தேன். நான் ஒரு சிறந்த வீராங்கனை என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே காரணமில்லாமல் நான் எந்தவொரு போட்டியிலிருந்தும் வெளியேற மாட்டேன்,” என்றும் அவர் குறிப்பிட்டுருந்தார்.

அவரது பதிவுக்கு, பலரும் பதில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“சர்வதேச செஸ் கூட்டமைப்பும் ,அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் (AICE) என்ன செய்கின்றன,” என்று ட்விட்டர் பயனாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், “சென்னையில் செஸ் ஒலிம்பியாட் வெற்றிகரமாக நடைபெற்றதற்கு தமிழ்நாடு அரசின் ஏற்பாடுகள்தான் காரணம்.

இந்திய அரசாங்கத்தின் நிர்வாகம் எப்படியிருக்கிறது என்பதன் வெளிப்பாடே, தற்போது இந்த செஸ் தொடரில் பிரதிபலித்திருக்கிறது” என்ற குற்றச்சாட்டையும் ட்விட்டர் பயனாளர் ஒருவர் முன்வைத்துள்ளார்.

”கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை,” எனவும் சிலர் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடரைவிட்டு வெளியேறிய மற்றுமொரு வீராங்கனை

ஸான்சயா அப்துல்மாலிக்கை போலவே, எலிசபத் பார்ட்ஸ் என்ற ஜெர்மன் வீராங்கனையும் தொடரைவிட்டு வெளியேறியுள்ளார். கிராண்ட் பிரிக்ஸ் தொடங்குவதற்கு சரியாக ஒரு மணி நேரத்திற்கு முன்னால், தான் இந்த போட்டியில் பங்கேற்கப் போவதில்லை எனக் குறிப்பிட்ட கடிததத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் ஒப்படைத்தார் எலிசபத்.

கிராண்ட் பிரிக்ஸ் தொடர் தொடங்குவதற்கு முந்தைய இரண்டு நாட்களில், நடந்த சில நிகழ்வுகள் தன்னை வெகுவாகப் பாதித்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும், “அதனால் தனக்குள் ஏற்பட்ட தாக்கங்கள், விளையாடுவதற்கு இடையூறாக இருக்கும்” என்று குறிப்பிட்டு, கிராண்ட் பிரிக்ஸ் தொடரிலிருந்து வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடரிலிருந்து மற்றொரு வீராங்கனையும் வெளியேறிருப்பது, கிராண்ட் பிரிக்ஸ் தொடர் குறித்த சர்ச்சை அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

மன்னிப்பு கேட்ட செஸ் கூட்டமைப்பு

விளையாட்டு, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

இந்தச் சம்பவம் குறித்து, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவரான ஆர்கடி டிவோர்கோவிச் பகிரங்கமாகத் தனது மன்னிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கசப்பான அனுபவங்கள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அதிருப்திகள் குறித்து நாங்கள் புரிந்து கொள்கிறோம். இந்தப் பிரச்னைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியதற்கு நன்றி. விளையாட்டில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரர்களும் எங்களுக்கு முக்கியம்.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, கூடுதல் பொறுப்பாளர் நியமிக்கப்படுவார். இந்தப் போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் மற்ற போட்டியாளர்களின் நிலை கருதி இந்த கிராண்ட் பிரிக்ஸ் தொடர், தொடர்ந்து நடத்தப்படும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஸான்சயாவின் இன்ஸ்டாகிராம் பதிவில் மன்னிப்பு தெரிவித்திருந்த ஆர்கடி டிவோர்கோவிச், பின்னர் இந்த முழுமையான அறிக்கையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேச மறுத்த இந்திய செஸ் கூட்டமைப்பு செயலாளர்

பெண்களுக்கான இந்த கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடர் ஒருங்கிணைப்பில் எங்கே தவறு நடந்தது என்பது குறித்துக் கேட்பதற்காக அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் பாரத் சிங்கை பிபிசி தமிழ் தொடர்புகொண்டது.

அப்போது பேசிய அவர் “போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. எனவே இதுகுறித்து நான் எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை,” என்று கூறி தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »