Press "Enter" to skip to content

பிரதமருக்கு எதிராக வீதிகளில் திரளும் மக்கள் – வரலாறு காணாத நெருக்கடியில் இஸ்ரேல் சிக்க என்ன காரணம்?

பட மூலாதாரம், Reuters

வரலாறு காணாத வகையில் மிகப்பெரும் உள்நாட்டு நெருக்கடிகளின் பிடியில் தற்போது சிக்கித் தவித்து வருகிறது இஸ்ரேல்.

தன் நாட்டின் நீதி அமைப்புகள் செயல்படும் திட்ட வடிவமைப்புகளில் இஸ்ரேல் அரசாங்கம் மேற்கொண்ட சில மாற்றங்களே, நாட்டில் இத்தகைய சலசலப்புகள் அதிகரிப்பதற்குக் காரணமாய் அமைந்தன.

இஸ்ரேலில் என்னதான் நடக்கிறது, வரலாறு காணாத உள்நாட்டு நெருக்கடி நிலவ என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவலாம்.

இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே, அடுத்தடுத்த வாரங்களில் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து மக்களால் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.

இஸ்ரேலின் முக்கியப் பகுதியான டெல் அவிவ் தெருக்களில், நூற்றுக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தபோது, பிரச்னை பூதாகரமானது. வணிகரீதியாக இது இஸ்ரேலின் முக்கியப் பகுதியாகக் கருதப்படுகிறது. பிற நகரங்களும் மற்ற சிறுநகரப் பகுதிகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவதற்கும் இதுவே மையப்புள்ளியாக இருந்து செயல்படுகிறது.

அரசாங்கத்தின் இந்த மறுசீரமைப்பு மசோதா அகற்றப்பட வேண்டுமெனவும் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டுமெனவும் அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் மறுசீரமைப்பு மசோதாக்கள், மக்களிடையே மிகப் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் சூழலில், அவரது அரசியல் எதிரிகளும் இதை ஆயுதமாகப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

இது அனைத்தையும்விட, மிகப் பெரும் எண்ணிக்கையில் வளர்ந்து வரும் இஸ்ரேலின் ராணுவம் அந்நாட்டின் பெரும் பலமாகவும் முதுகெலும்பாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவத்தினரும் பணியில் சேர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அந்நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இஸ்ரேல், போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

மக்களின் எதிர்ப்பிற்கு காரணம் என்ன?

நெதன்யாகுவின் இந்த மறுசீரமைப்பு மசோதா நாட்டின் ஜனநாயகத்தை பாதிக்கிறது என அவரது எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

“அவரது இந்த மறுசீரமைப்பு மசோதாக்கள், நீதித்துறையை நலிவடையச் செய்கிறது. வரலாற்றுரீதியாகப் பார்க்கும்போது, அரசாங்கம் தனது அதிகாரத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் செயல்பட்டு வருவதாகவே நாம் இதைப் பார்க்கவேண்டும்,” என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன் காரணமாகவே மக்கள் கடுமையான எதிர்ப்புகளை தற்போது பதிவு செய்து வருகின்றனர். இஸ்ரேலில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு எதிராக இதுவரை நடத்தப்பட்ட எதிர்ப்புகளிலேயே, தற்போது நிகழ்ந்து வரும் போராட்டங்கள்தான் கடுமையானதாகப் பார்க்கப்படுகிறது. பிரதமர் நெதன்யாகுவும் தன்னுடைய அரசியல் வாழ்வில் இதுவரை சந்தித்திராத மோசமான எதிர்வினைகளை எதிர்கொண்டு வருகிறார்.

“தற்போது அவர் சீரமைத்திருக்கும் மசோதாக்கள், அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னைத் தானே அவர் காத்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கும். அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை நெதன்யாகு மறுத்து வரும் நிலையில், இஸ்ரேலில் சில குறிப்பிட்ட மறுசீரமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன,” என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

மறுசீரமைக்கப்பட்ட மசோதாக்கள் என்னென்ன?

இஸ்ரேல், போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

மறுசீரமைக்கப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக அரசாங்கம் தரப்பில் கூறப்பட்டு வந்தாலும், உண்மையில் இந்த மறுசீரமைப்புத் திட்டங்கள் புழக்கத்திற்கு வரும் எல்லைகளைத் தொட்டுவிட்டதாகவே கூறப்படுகிறது.

குறிப்பாக இஸ்ரேல் அரசாங்கத்தின் அதிகாரங்களை அந்நாட்டின் நீதித்துறையின் அதிகாரங்களுக்கு நிகராக மாற்றியமைக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

அரசாங்கத்தின் தற்போதைய திட்ட வடிவங்களின் படி

  • உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மறுபரிசீலனை செய்வதற்கோ அல்லது அதை நீக்குவதற்கோ, அரசாங்கம் நெசட்டில் (பாராளுமன்றத்தில்) வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் அதை எளிதாகச் சாத்தியப்படுத்த முடிகிறது.
  • யார் நீதிபதிகளாக உருவாக வேண்டும் என்பதை முடிவெடுக்கும் குழுவில், அரசு தன்னுடைய பிரதிநிதிகளை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம்கூட மறைமுகமாக அரசாங்கத்தின் கைகளுக்கு செல்கிறது.
  • அட்டர்னி ஜெனரலின் (அரசு தலைமை வழக்கறிஞர்) கீழ் செயல்பட்டு வரும், சட்ட ஆலோசகர்கள் வழங்கும் ஆலோசனையை அமைச்சர்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் விதிகளின்படி அவர்கள் சட்ட ஆலோசகர்களின் ஆலோசனையைக் கேட்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே இதில் ஒரு மறுசீரமைப்பு மசோதா, சட்டமாக அமலுக்கு வந்துவிட்டது. பிரதமரையே தகுதி நீக்கம் செய்யும் அதிகாரமுடைய அட்டர்னி ஜெனரலின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு விட்டன.

தன்நிலையிலிருந்து அரசாங்கம் பின்வாங்குமா?

இஸ்ரேல், போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

நாட்டில் நடந்து வரும் போராட்டங்களுக்கு நெதன்யாகு தன்னுடைய எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகிறார். போராட்டங்களை வழிநடத்தி வரும் போராட்டக்குழு தலைவர்களை, ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு சதி செய்து வரும் சதிகாரர்களாகச் சித்தரித்து குற்றம் சுமத்தி வருகிறார்.

அதேநேரம் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் மறுசீரமைப்புத் திட்டங்களில் மாற்றம் செய்வதற்கு, அரசாங்கத்தின் சார்பில் முன்மொழியப்பட்ட விவகாரங்களை எதிர்கட்சிகள் நிராகரித்துள்ளன.

பேச்சுவார்த்தைக்குள் நுழைவதற்கு முன்பாகவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர். முன்னதாக சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்த குடியரசுத் தலைவரின் அழைப்பை அரசாங்கம் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நீதித்துறை சீர்திருத்தங்களை வாக்குறுதிகளின் அடிப்படையில் வாக்காளர்களே தேர்ந்தெடுத்ததாகவும், தற்போது அவர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும் இஸ்ரேல் அரசாங்கம் கூறி வருகிறது.

அதேபோல் நீதித்துறை இதுவரை மிகவும் தாராளமான அளவிற்கு சுதந்திரமாகச் செயல்பட்டு வந்தது எனவும், பிரதிநிதிகளின் முக்கியத்துவம் இல்லாமல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வந்தனர் எனவும் அரசாங்கம் வாதிடுகிறது.

இத்தகைய நிலையில், இஸ்ரேல் அரசாங்கத்தின் மீதான அழுத்தம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நெதன்யாகுவின் சொந்த பாதுகாப்புத்துறை அமைச்சரே, தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் மறுசீரமைப்பு மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

இதுபோன்ற செயல்கள், இஸ்ரேலின் குடியரசு தலைவர் அவரைத் தகுதி நீக்கம் செய்வதற்கான முடிவை எடுப்பதற்குத் தூண்டுதலாக அமைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »