Press "Enter" to skip to content

புதிதாகத் தொழில் துவங்க விரும்புவோருக்குக் கொட்டிக்கிடக்கும் முதலீடுகள்: பெறுவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

புதிதாகத் தொழில் துவங்க விரும்புவோர், அதற்கான முதலீடுகளையும் ஆலோசனையும் பெற விரும்புவோர் என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும் என்பதெல்லாம் குறித்து எச்&எஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர்ராஜனிடம் பேசினார் முரளிதரன் காசி விஸ்வநாதன். அந்தப் பேட்டியிலிருந்து:

கேள்வி: புதிதாகத் தொழில்துவங்க விரும்புவோர் எந்தத் துறையைத் தேர்வு செய்வது என்பதற்கு ஆலோசனை வழங்க ஆலோசனை அமைப்புகள் ஏதும் உள்ளதா?

பதில்: நீங்கள் தொழில்துவங்க விரும்பினால், உங்களுக்கு அல்லது உங்கள் கூட்டாளிகளுக்கு எது சரியாக வருமோ, எந்தத் தொழிலில் ஆர்வம் இருக்கிறதோ, எது சரியாக வருமோ அதில் இறங்குவதுதான் நல்லது. அதற்காக, தெரியாத தொழிலை செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. அப்படிச் செய்தால், அதற்கான திறமையாளர்களை பணிக்கு வைத்துக்கொள்ளலாம். ஆனால், நமக்கு எது சரியாக வருமோ அதில் இறங்குவது நல்லது. இதுதான் அடிப்படையான விஷயம்.

முதலில் நாம் இறங்கப்போவது சேவைத் துறையா, உற்பத்தித் துறையா என்பதை முடிவுசெய்ய வேண்டும். அதேபோல, நாமே துவங்கப்போகிறோமா அல்லது வெளிநாட்டில் உள்ள மற்றொரு நிறுவனத்திற்கு offshore நிறுவனமாக இருக்கப்போகிறோமா என்பதையும் முடிவுசெய்ய வேண்டும்.

அதேபோல, நம்முடைய தனித்துவமான விஷயம் என்பது என்ன என்பதை முடிவுசெய்ய வேண்டும். எல்லோரும் செய்யக்கூடிய விஷயத்தையே நாம் சிறப்பாகச் செய்து தருவதன் மூலம் தனித்துத் தெரியலாம். அல்லது, யாருமே செய்யாத ஒரு விஷயத்தைச் செய்ய ஆரம்பித்து தனித்துத் தெரியலாம். முதலில் இந்த விஷயங்களை முடிவுசெய்துவிட்டு, நிறுவனத்தைத் துவங்கலாம்.

கே: தொழில்முனைவோரைப் பொறுத்தவரை, பலரிடம் பணம் இருக்கும்; ஆனால், என்ன செய்வதெனத் தெரியாது. மற்றொரு பக்கம் திட்டம் இருக்கும் பணம் இருக்காது. பணம் இருந்து, என்ன செய்வதெனத் தெரியாமல் இருப்பவர்களுக்கு தொழில் துவங்குவது தொடர்பான ஆலோசனைகள் எங்கே கிடைக்கும்?

ப: மாநிலத் தொழில் வளர்ச்சி மையங்களும் அகில இந்திய அளவிலான தொழில் அமைப்புகளும் இந்த ஆலோசனைகளைத் தருகின்றன. ஆனால், இதையெல்லாம்விட இணையத்தில் பல ஆலோசனைகள் கொட்டிக்கிடங்கின்றன. விவசாய தொழில்துறைக்கு சில அமைப்புகள் இருக்கின்றன. அதேபோல, தோட்டக்கலைத் துறை, பொறியியல் துறை என பல துறைகளிலும் என்ன தேவை இருக்கிறது, எதிர்காலத்தில் என்ன தேவை ஏற்படும் என்பதெல்லாம் இணையத்திலேயே கிடைக்கும். அதிலிருந்து நாம் விரும்பும் விஷயங்களை தேர்வு செய்ய முடியும்.

தொழில் முனைவோர், தமிழ்நாடு, புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்)

பட மூலாதாரம், Startup TN

கே: அதேபோல, தன்னிடம் ஒரு தொழில் யோசனை இருக்கிறது. ஆனால், போதுமான பணம் இல்லை என்போருக்கு முதலீட்டைப் பெற ஆலோசனைகள் கொடுக்கும் அமைப்புகள் என்னென்ன? அல்லது முதலீடு செய்யக்கூடியவர்களை எப்படி அடையாளம் காண்பது?

ப: 5-10 ஆண்டுகளுக்கு முன்பாக, புதிதாக தொழில்துவங்க முதலீடுகளைப் பெறுவது கடினமாக இருந்தது. எங்கு முதலீடுகளைப் பெறுவது என்ற ஆலோசனை தருவோரும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது எல்லாம் மாறியிருக்கிறது. தமிழ்நாடு அரசே Tamil Nadu Startup and Innovation Mission (TANSIM) என்ற திட்டத்தை வைத்திருக்கிறது. புதிய யோசனைகளைக் கொண்டு சென்றால், இந்த அமைப்பு முதலீடுகளைப் பெறுவது குறித்த ஆலோசனைகளைத் தருகிறது. முதலீடுகளைப் பெற்றுத் தருவதிலும் உதவுகிறது. உங்களிடம் யோசனை இருந்தால் போதும். 10- 25 லட்ச ரூபாய் வரை முதலீடு தருகிறார்கள்.

அதேபோல, Startup India, Startup TN ஆகிய அமைப்புகள் உள்ளன. இதில் பதிவுசெய்வதன் மூலம் வருமான வரிச் சலுகை உள்ளிட்ட பலவற்றில் சலுகைகளைப் பெற முடியும். அதேபோல, முதலீடு செய்து, பங்குகளை வாங்கிக்கொள்கிறார்கள். மானியங்களும் உண்டு.

Tamilandu infrastructure fund management compay என்ற நிறுவனம் இருக்கிறது. தற்போது வளர்ந்துவரும் துறைகளில் நீங்கள் தொழில்துவங்கினால், இந்த நிறுவனம் அதில் முதலீடு செய்யும். கடன் தர TIIC போன்ற அமைப்புகள் இருக்கின்றன. இது தவிர Angel investors எனப்படும் தனியார் முதலீட்டாளர்களும் உள்ளனர். உங்கள் யோசனைகளுக்கே முதலீடு செய்யும் நிறுவனங்களும் உள்ளன. எந்தக் கட்டத்தில் உங்கள் நிறுவனத்திற்கு முதலீடு தேவைப்படுகிறதோ, அந்த கட்டத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் தற்போது நிறைய உள்ளன.

credit guarantee scheme என மத்திய அரசின் திட்டம் ஒன்று உள்ளது. இதில், நம் தொழிலுக்கு கடன் பெறுவதற்கு, உத்தரவாதத்தை அரசு தரும். தொழில் ஒருவேளை தோல்வியடைந்தால், வங்கிகளில் பெற்ற கடனுக்கான பணத்தை அரசு திரும்பச் செலுத்தும்.

TIIC, நபார்ட், சிட்பி, டிட்கோ என பல முதலீட்டு நிறுவனங்கள் அரசின் சார்பில் இயங்குகின்றன. இவர்களை அணுகினால், கடனாகவோ, முதலீடாகவோ பணத்தைப் பெற முடியும். எஸ்சி-எஸ்டியின் தொழில் முனைவோருக்கு தனித் திட்டம் இருக்கிறது. இவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆனால், இம்மாதிரி வெளியில் முதலீடுகளைக் கோரும்போது தொழில் முனைவோர் சில விஷயங்களில் தெளிவாக இருக்க வேண்டும். பல தருணங்களில் புதிதாகத் தொழில்துவங்குவோர் தங்கள் நிறுவனத்தின் மீது தனிப்பட்ட வகையில் பிடிப்புக் கொண்டிருப்பார்கள். வெளியில் இருந்து பெரிய முதலீடுகளைப் பெறும்போது, அந்த முதலீட்டாளரும் உங்கள் நிறுவனத்தின் பங்குதாரராகி, இயக்குநர் கூட்டங்களில் வந்து அமர்வார்கள். அந்தத் தருணத்தில் நாம் நினைத்ததையெல்லாம் செய்ய முடியாது.

முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, தான் முதலீடுசெய்யும் பணம் எத்தனை மடங்காகத் திருப்பிவரும் என்பதில்தான் கவனமாக இருப்பார்கள். அதைப் புரிந்துகொண்டு முதலீடுகளைக் கோர வேண்டும்.

தொழில் முனைவோர், தமிழ்நாடு, புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்)

பட மூலாதாரம், Getty Images

கே: ஒரு புதிய பொருளைத் தயாரிக்கும் திறன் கொண்டவர் அல்லது ஒரு புதிய சேவைக்கான யோசனை கொண்டவருக்கு முதலீடுகளைத் திரட்டும் திறனோ அல்லது சந்தைப்படுத்தும் திறனோ இல்லையென்றால் என்ன செய்வது?

ப: இதுபோன்ற திறன்கள் உள்ளவர்களைத் தங்களோடு இணைத்துக்கொள்ள வேண்டும். இயக்குநர்கள் அல்லது பங்குதாரர்கள் என்ற வகையில் சேர்த்துக்கொள்ளலாம். அல்லது ஆலோசகர்களை அழைத்துவந்து பணியில் அமர்த்திக்கொள்ளலாம். எல்லாத் துறைகளுக்குமான ஆலோசகர்கள் கிடைக்கிறார்கள்.

கே: தொழில் முனைவோராக களம் இறங்கிய பிறகு, அந்தத் தொழிலை வெற்றிகரமாக கொண்டுசெலுத்துவது குறித்த அச்சம் இருந்துகொண்டே இருக்கும். அதை எப்படி எதிர்கொள்வது…

ப: ஒரு தொழில் திட்டம் வெற்றிகரமாக இருக்கலாம். அல்லது தோல்வியடையலாம். இரண்டையுமே எதிர்கொள்ள அந்தத் தொழில்முனைவோர் தயாராக இருக்க வேண்டும். விவசாயத்தில்கூட, சரியான மழை பெய்யும் என நினைத்துத்தான் விதைக்கிறார். ஆனால், சில சமயங்களில் புயலடித்தோ, வறட்சி காரணமாகவோ விளைச்சல் பொய்த்துப்போகலாம். அதுபோலத்தான் தொழில்துறையிலும். தற்போது வெற்றிகரமான தொழில்முனைவோராக இருப்பவர்கள், மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டவர்கள்தான். அதைத் தாண்டியே அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

தொழில் முனைவோர், தமிழ்நாடு, புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்)

பட மூலாதாரம், Getty Images

கே: ஒரு தொழிலைத் துவங்கி அதில் தோல்வியடைந்துவிட்டால், மீண்டும் புதிதாகத் தொழிலைத் துவங்குவது, அதற்கான முதலீட்டைப் பெறவது போன்ற முயற்சிகள் எந்த அளவுக்குக் கடினமாக இருக்கும்? புதிய முதலீட்டை கோரும்போது, முந்தைய தோல்விகள் குறித்து வெளிப்படையாக இருக்க வேண்டுமா?

ப: தொழில்முனைவோரைப் பொறுத்தவரை, வெளிப்படையாக இருக்க வேண்டும். வேறொருவர் முதலீட்டில், வேறொரு தொழில் செய்து, அது தோல்வியடைந்துவிட்டது என்பதை மறைத்தால், அதைக் கண்டுபிடிப்பது மிக சுலபம்.

எங்கள் அனுபவத்திலிருந்து ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். நாங்கள் ஒரு ‘காஃபி வெண்டிங் மிஷின்’ தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தோம். அந்த எந்திரத்தை உருவாக்க எங்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. அதை இந்தியாவின் பெரிய நிறுவனம் ஒன்றிடம் எடுத்துச் சென்று காண்பித்தபோது, அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். இந்தியாவில் அப்போது அது போன்ற எந்திரம் கிடையாது. ஆகவே, எங்களிடமிருந்து வருடத்திற்கு ஆயிரம் மிஷின்களை வாங்கிக் கொள்வதாகச் சொன்னார்கள், Letter of intentம் கொடுத்தார்கள்.

நாங்கள் ஒரு ஐடி நிறுவனம் என்பதால், அந்தத் தருணத்தில் எங்களிடம் எந்திரத்தை உற்பத்தி செய்யும் திறன் கிடையாது. ஆகவே, இந்த மிஷன்களை உற்பத்தி செய்துதர ஒரு பெரிய நிறுவனத்தைத் தேடிப் பிடித்தோம். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டார்கள். இதையெல்லாம் செய்து முடிக்க நான்கைந்து மாதங்களாகின.

அந்த இடைவெளியில், எங்களிடம் காஃபி மெஷினை வாங்குவதாகச் சொன்ன நிறுவனம், வேறு ஒரு பன்னாட்டு நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. அந்த பன்னாட்டு நிறுவனம் ஏற்கனவே இது போன்ற காஃபி எந்திரங்களை ஐரோப்பாவில் தயாரித்துவந்தது. ஆகவே, புதிதாக இந்தியாவில் ஒரு நிறுவனத்திடம் காஃபி மெஷின்களை வாங்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லாமல் போனது. அது எங்களுக்குப் பேரிடியாக இருந்தது. அது பெரிய தோல்விதான். ஆனால், அதற்காக முடங்கிவிடவில்லை.

இப்போதும் புதிதாக ஒரு Startup நிறுவனத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். ஆகவே, தொழில் முனைவோருக்கான ஊக்கம் எப்போதுமே போகக்கூடாது. தோற்றாலும் போகக்கூடாது.

தொழில் முனைவோர், தமிழ்நாடு, புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்)

பட மூலாதாரம், Getty Images

கே: ஒரு தொழில்முனைவோர், தன்னுடைய யோசனையில் பிறந்த தொழிலுடன் எந்த அளவுக்கு உணர்வு ரீதியாக நெருக்கமாக இருக்க வேண்டும். பலர், தொழிலைத் துவங்கியதிலிருந்தே அதனை விற்க நேரம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். சிலர், ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து என்னதான் நல்ல முதலீட்டாளர் கிடைத்தாலும், நிறுவனத்தில் தன் பங்கு குறைந்துவிடக்கூடாது என நினைப்பார்கள். இதில் எந்த அணுகுமுறை சரி?

ப: இதில் எது சரி எனச் சொல்வது முடியாது. அது ஒரு தொழில். நாம் வளர்த்த தொழில்தான். ஆனால், ரொம்பவும் உணர்வுரீதியாக இருந்தால், சரியாக வராது. அப்போதுதான் சரியான முடிவுகளை எடுக்க முடியும். தோல்வி ஏற்பட்டால் ஒப்புக்கொள்ள வேண்டும்.

கே: ஒரு தொழிலுக்கு பணத்தைத் திரட்டும்போது, முதலீடுகளைப் பெறும்போது அதற்கான ஆவணமாக்கல் என்பதை எப்படிச் சரியாகச் செய்வது? அதற்கு ஆலோசனை சொல்ல அமைப்புகள் உண்டா?

ப: பல அமைப்புகள் உள்ளன. TIE என ஒரு அமைப்பு உள்ளது. எத்தனையோ தொழில் குழுக்கள் உள்ளன. தனி நபர்கள் இருக்கிறார்கள். அரசிலும் தனியாரிலும் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். வங்கிகளில்கூட இதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். பேடண்ட் வாங்கித்தர, முதலீடுகளைப் பெற்றுத்தர, கடன்களை வாங்கித்தர என பல அமைப்புகளும் தனி நபர்களும் இருக்கிறார்கள்.

கே: ஒரு தொழில் துவங்கி, அது தோல்வியடைந்துவிட்டால் அதனை எப்படி எதிர்கொள்வது? அதனால் ஏற்படும் பண ரீதியான சிக்கலை எப்படி எதிர்கொள்வது?

ப: இந்தியாவைப் பொறுத்தவரை Private Limited நிறுவனம் என்றால், கடன் அந்த நிறுவனத்தைச் சார்ந்தது. ஆகவே அந்த நிறுவனத்தால் கடன் வாங்கி கொடுக்க முடியாவிட்டால், அது நிறுவனத்தின் பொறுப்பு. அந்த நிறுவனத்தில் இருப்பவர்கள் அதற்குப் பொறுப்பல்ல. ஆனால், ஒரு தொழில்முனைவோரைப் பொறுத்தவரை தோல்வியைக் கண்டு அஞ்சக்கூடாது. தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டு எழ வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »