Press "Enter" to skip to content

தற்காலிகமாக முடங்கிய பிபிசி பஞ்சாபி சேவையின் ட்விட்டர் பக்கம் மீண்டும் இயக்கம் : அரசு என்ன சொல்கிறது?

பிபிசி பஞ்சாபி சேவையின் ட்விட்டர் பக்கம், சில மணி நேர முடக்கத்திற்கு பிறகு தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் கோரிக்கை குறித்து பேசி வரும் ’வாரிஸ் பஞ்சாப் தீ’ இயக்கத்தின் தலைவர் அம்ரித்பால் சிங்கிற்கு எதிராக, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பஞ்சாப்பில் சில ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டு வருகின்றன. இந்த பட்டியலில் தற்போது பிபிசி பஞ்சாபி சேவையின் ட்விட்டர் பக்கமும் இணைந்துள்ளது.

ஆங்கிலத்தில் இது போன்ற நடவடிக்கைகளை `Account withholding’ (கணக்கு நிறுத்திவைப்பு) என்று தொழில்நுட்பரீதியாக குறிப்பிடுகின்றனர்.

சில மணி நேரங்களுக்கு முன்னால் பிபிசி பஞ்சாபி சேவையின் ட்விட்டர் பக்கத்தை பார்த்தபோது, `Account withheld’ என்பதை மட்டுமே காண முடிந்தது. ஆனால் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டிருக்கும் பிபிசி பஞ்சாபி சேவையின் ட்விட்டர் கணக்கில், அனைத்து தகவல்களையும் காண முடிகிறது. இந்தியளவில் தற்போது அனைவராலும் இந்த ட்விட்டர் பக்கத்தை காண முடிகிறது.

அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவிக்கிறது. எனவே பிபிசி பஞ்சாபி சேவையின் ட்விட்டர் முடக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கேள்வியெழுப்பி, இந்திய அரசாங்கத்திற்கு பிபிசி நிர்வாகம் மின்னஞ்சல் அனுப்பியது. இதற்கு பதிலளித்திருக்கும் அரசு, இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தாங்கள் ட்விட்டர் நிறுவனத்திற்கு எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக, காவல்துறையினர் மார்ச் 18ஆம் தேதி நடவடிக்கை எடுக்கத் துவங்கினர். இதற்கு மறுநாளே, பஞ்சாப்பில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் போன்ற பலரின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டன.

ட்விட்டர் பக்கங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள்

சண்டிகரில், கணினி மயமான ஊடக நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ககன்தீப் சிங் என்பவரின் ட்விட்டர் பக்கம் கடந்த மார்ச் 19ஆம் தேதி முடக்கப்பட்டது.

இதுகுறித்து பிபிசி செய்தியாளர் அர்ஷ்தீப் கௌரிடம் பேசிய ககன்தீப்சிங், ”மார்ச் 19 ஆம் தேதி எனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் சார்பில் எனக்கு அனுப்பப்பட்ட தகவலில், இந்திய அரசாங்கம்தான் எனது ட்விட்டர் கணக்கை முடக்குவதற்கு கோரிக்கை விடுத்திருந்ததாக கூறப்பட்டிருந்தது” என்று தெரிவித்தார்.

”மார்ச் 18ஆம் தேதி சமூக ஊடகங்களில் ஏற்கனவே மிகுதியாக பகிரப்பட்டுி வந்த ஒரு காணொளியை நான் எனது பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். அதில் அம்ரித்பால் சிங்கும், அவரது கூட்டாளிகளும் காரில் அமர்ந்திருப்பார்கள். அந்த காணொளி மார்ச் 18ஆம் தேதி பகிரப்பட்ட வந்த பரவலான காணொளிதான்.” என்று குறிப்பிடுகிறார்.

ககன்தீப் சிங்கை போலவே மற்றொரு ஊடகவியலாளர் சந்தீப் சிங் என்பவரின் ட்விட்டர் பக்கமும் முடக்கப்பட்டது. இவர் சில தேசிய ஊடகங்களுக்கும், சில உள்ளூர் ஊடகங்களுக்கும் சூயாதீன பத்திரிக்கையாளராக (freelance) பணியாற்றி வருகிறார்.

பிபிசி செய்தியாளர் அவதார் சிங்கிடம் பேசிய சந்தீப் சிங், ”சில பத்திரிக்கையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. அதுகுறித்த ஸ்கிரீன் ஷாட்களை மார்ச் 20ஆம் தேதி நான் எனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். அன்று மாலையே நண்பர் ஒருவர் என்னை தொடர்புகொண்டு எனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்”

“அம்ரித்பால் சிங்கிற்கும் அவரது கூட்டாளிகளுக்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட துவங்கியதிலிருந்தே , நாங்கள் அதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். அதேபோலதான் அன்றைய தினமும் நான் ஒரு தகவலை பகிர்ந்திருந்தேன். அது ஒன்றும் பிரத்யேகமான செய்திகள் அல்ல” என்று தெரிவித்தார்.

”அரசுக்கு சார்பாக இயங்கிவரும் சில ஊடக நிறுவனங்களின் ட்விட்டர் பக்கங்கள் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இயங்கி வருகின்றன. ஆனால் மாற்று கருத்தினை தெரிவித்து வரும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

யார் இந்த அம்ரித்பால் சிங்?

பஞ்சாப், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

அம்ரித் பால் சிங் ’வாரிஸ் பாஞ்சாப் தீ’ என்ற சீக்கிய இயக்கத்திற்கு தலைவராக இருக்கிறார். சீக்கியர்களுக்கு என தனி நாடு வேண்டும் என்ற முழக்கத்தை அவர்கள் தொடர்ச்சியாக எழுப்பி வருகின்றனர்.

துபாயில் சில காலம் வசித்து வந்த அம்ரித்பால் சிங், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவிற்கு திரும்பினார். அம்ரித் சஞ்சார் என்ற பெயரில் போதைப் பொருட்கள் ஒழிப்பு இயக்கம் ஒன்றை துவங்கி, இளைஞர்களை ஒன்றுதிரட்டி செயல்பட்டு வருகிறார்.

ஆனால் அதன்பின் அவருடைய சர்ச்சைக்குரிய பேச்சுகளால் சமூகத்தில் கவனம் பெறத் துவங்கினார். இறுதியாக பஞ்சாப்பின் அஜ்னலா காவல்நிலையத்தில் நடந்த கலவரம் காரணமாக தேசியளவில் பேசுபொருள் ஆனார் அம்ரித்பால் சிங்.

கடந்த மார்18ஆம் தேதியிலிருந்து அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பெரும் அளவிலான எண்ணிக்கையில் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிபிசி பஞ்சாபி சேவையின் ட்விட்டர் முடக்கம்

பஞ்சாப், இந்தியா

பட மூலாதாரம், TWITTER

இந்தியளவில் பிபிசி பஞ்சாபி சேவையின் ட்விட்டர் பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டது. இதுகுறித்த தகவலை பிபிசிக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தது ட்விட்டர் நிறுவனம்.

”வெளிப்படைத்தன்மையின் காரணமாக நாங்கள் இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். உங்கள் சேவையின் ட்விட்டர் கணக்கை முடக்குமாறு இந்திய அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு அலுவல்பூர்வமாக கோரிக்கை வந்திருந்தது” என்று அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிபிசி பாஞ்சாபி சேவையில் வெளியிடப்பட்டிருந்த இரண்டு செய்திகளில், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி(2000), விதிகளை மீறப்பட்டிருந்ததாக ட்விட்டர் தெரிவிக்கிறது.

அதில் அம்ரித்பால் சிங் குறித்து வெளியிடப்பட்டிருந்த ஒரு காணொளியும் அடக்கம். அதில் அமிரித்பால் சிங்கின் வழக்கறிஞர் சிங் காரா மற்றும் அம்ரித்பால் சிங்கின் தந்தை டார்செம் சிங் இந்த விவகாரம் தொடர்பாக கருத்துகளை பகிர்ந்திருந்தனர். ஆனால் அதேசமயம் அந்த காணொளியில் பஞ்சாப் அரசுக்கு ஆதரவான கருத்துகளும் பதிவுசெய்யப்பட்டிருந்தன.

மற்றொரு செய்தியில், அம்ரித்பால் சிங்கிற்கு எதிராக காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து கூறப்பட்டிருந்தது. இந்த தகவல்கள் காவல்துறையினரிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.

அம்ரித்பால் சிங் விவகாரம் தொடர்பாக இந்தியாவில் தகவல்கள் பகிர்வதை நிறுத்துமாறு இந்தியா கேட்டுகொண்டுள்ளதாக ட்விட்டர் தெரிவிக்கிறது.

தற்காலிக முடக்கம் என்றால் என்ன?

பஞ்சாப், இந்தியா

ட்விட்டர் உதவி மையத்தின் தகவலின்படி, “தகவல்கள் பகிரப்படுவது குறித்து பெரும்பாலான நாடுகளில் சில விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட சில துறைகளிடமிருந்து எங்களுக்கு ஏதேனும் புகார்கள் தெரிவிக்கப்பட்டால், அந்த குறிப்பிட்ட ட்விட்டர் கணக்கு முடக்கப்படும்” என்று கூறப்படுகிறது.

அத்தகைய நடவடிக்கைகள் அந்த குறிப்பிட்ட நாடு அல்லது மாநிலத்திற்குள் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”வெளிப்படைத்தன்மை எங்களுக்கு மிக முக்கியம். எனவே புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் அதே வேளையில் சம்பந்தப்பட்ட கணக்குகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்” என்று ட்விட்டர் கூறுகிறது.

பிபிசி பஞ்சாபி சேவையின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டவுடன், பலரும் இதுகுறித்த தகவல்களை தங்களது சமூக வலைதளங்களில் பகிர தொடங்கினர்.

“வெளிப்படைத்தன்மைக்கு பயந்து நடவடிக்கை எடுப்பது சர்வாதிகாரத்தின் முட்டாள்தனம்” என்று மூத்த ஊடகவியலாளர் ஹர்தோஷ் சிங் பால் கூறுகிறார். மேலும் பல்வேறு ஊடக நிறுவனங்களும் இதுகுறித்த தகவல்களை செய்தியாக வெளியிட்டு வருகின்றனர்.

மறுப்பு தெரிவிக்கும் அரசாங்கம்

இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளித்திருக்கும் இந்திய அரசு, மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிபிசி பஞ்சாபி சேவைக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்திருக்கும் இந்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், “ உங்களது ட்விட்டர் கணக்கை முடக்குவது குறித்து நாங்கள் ட்விட்டர் நிறுவனத்திற்கு எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம்” என்று கூறியுள்ளது.

“உங்களது பிரச்னை தொடர்பாக நீங்கள் ட்விட்டர் நிர்வாகத்தை நேரடியாக தொடர்புகொண்டு விளக்கம் கேளுங்கள். ஒருவேளை உங்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் அரசுடைய இந்த இணையதளத்தை https://gac.gov.in தொடர்புகொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »