Press "Enter" to skip to content

ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம்: எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்குமா?

பட மூலாதாரம், Getty Images

1975ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை தகுதி நீக்கம் செய்து, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யும் உத்தரவை வெளியிட்டார்.

இந்த முடிவிற்கு பிறகுதான் நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்த இந்திரா காந்தி முடிவு செய்ததாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்திரா காந்தி மீதான வழக்கு ராகுல் காந்தியின் விவகாரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அது தேர்தலில் போட்டியிடுவது தொடர்பானது. ஆனால் மக்களவை செயலகத்தால் ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டது.

தேர்தலில் முறைகேடு செய்ததாக அவரது போட்டியாளரான ராஜ் நாராயண் இந்திரா காந்திக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார். ராஜ் நாராயணின் மனுவில், ‘ராய்பரேலி தேர்தலில் இந்திரா காந்தியின் தேர்தல் முகவர் யஷ்பால் கபூர் முறைகேடு செய்ததாக’ கூறப்பட்டிருந்தது.

இந்திரா காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரண்டு முறை ரத்து செய்யப்பட்டதாலும் இந்த விஷயம் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஒருமுறை ராய்பரேலியில் போட்டியிட்டபோது மற்றும் இரண்டாவது முறை சிக்மங்களூரில் வெற்றி பெற்ற பிறகு அவரது பதவி ரத்து செய்யப்பட்டது.

1977-78ல் இந்திரா காந்தி எம்.பி.யாக இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிறகு 1980ல் நடந்த பொதுத் தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்

ராகுல், இந்தியா, காங்கிரஸ்

பட மூலாதாரம், MALLIKARJUNKARKE/TWITTER

பிபிசியிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ஜெய்சங்கர் குப்தா, ‘இந்திரா காந்தியின் உறுப்பினர் பதவி இரண்டு முறை ரத்து செய்யப்பட்டாலும், அது ராகுல் காந்தி விவகாரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆனால் ராகுல் காந்தி விஷயத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அழுத்தத்தில் இருப்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது,” என்று குறிப்பிட்டார்.

அரசின் எல்லா அமைச்சர்களும், பெரிய தலைவர்களும் அறிக்கை விடுவதைப் பார்க்கும்போது, அதானி விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறி தெளிவாக தெரிகிறது என்று அவர் கூறுகிறார்.

ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்ட விதம் மற்றும் அந்த முழு சம்பவமும், காங்கிரசில் இருந்து விலகி இருந்த எதிர்கட்சிகளையும் காங்கிரஸுடன் நிற்க வைத்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உதாரணமாக, திரிணாமுல் காங்கிரஸ், பாரத் ராஷ்டிர சமிதி, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியவை நாடாளுமன்றத்தில் அதானி பற்றிய கேள்வியில் ஒற்றுமையை காட்டின.

ஆனால் நாடாளுமன்றத்தில் பேசுவது தொடர்பான விஷயத்தில் ராகுல் காந்தி தனது கட்சியினருடன் அரசை சுற்றிவளைத்தபோது, காங்கிரஸிடமிருந்து விலகி இருப்பது நல்லது என்று இந்தக் கட்சிகள் நினைத்தன.

ராகுல் காந்தி விவகாரத்தையடுத்து சிந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட எதிர்கட்சிகள்

டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதையடுத்து ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக டெல்லி தெருக்களில் காங்கிரஸ் கட்சியினர் விளம்பர ஒட்டிகளை ஒட்டத் தொடங்கினர்.

ஆனால் ராகுல் காந்தியை விமர்சித்த கட்சிகளும்கூட, அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பு விஷயம் தொடர்பாக அவருக்கு ஆதரவளித்தன.

திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கியது. சனிக்கிழமை காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ராகுல் காந்தி ‘நான் சாவர்க்கர் அல்ல’ என்று கூறியிருந்தார். இது அவரது கூட்டணி கட்சியான சிவசேனைக்கு பிடிக்கவில்லை.

ராகுல் காந்தியின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்த சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, ‘ஆத்திரமூட்டலுக்கு அடிபணிய வேண்டாம்’ என்றும், தான் சாவர்க்கரை ‘ஆதர்சமாக’ கருதுவதால், இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்றும் அவருக்கு (ராகுல் காந்தி) அறிவுறுத்தினார். இதையும் மீறி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனை, ராகுல் காந்தியுடன் நிற்பதைக் காண முடிந்தது.

ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்ட விவகாரம், மற்ற கட்சிகளையும் சிந்திக்க வைத்துள்ளது என்று ஜெய்சங்கர் குப்தா குறிப்பிட்டார்.

“முன்பு எதிர்க்கட்சிகள் தனித்தனியாக தங்கள் நிலைப்பாட்டை எடுத்தன. ஆனால் ராகுல் காந்தி அத்தியாயத்திற்குப் பிறகு, இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அவைகளும் உணரத் தொடங்கிவிட்டன,” என்று அவர் கூறினார்.

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த கீழ்நீதிமன்றம் தனது உத்தரவை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்க முடிவு செய்தது.

ஆனால் அடுத்த நாளே ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டது. அரசியல் போட்டியாளர்களுக்கு எதுவும் சாத்தியம் என்பதற்கு இது ஒரு தெளிவான அறிகுறியாகும்.

‘எதிர்க்கட்சிகளுக்கு உயிரூட்டும் முயற்சி’

ராகுல், இந்தியா, காங்கிரஸ்

பட மூலாதாரம், MALLIKARJUN KARKE/TWITTER

ஐக்கிய ஜனதா தளமும், ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காமல் ஒதுங்கியே இருந்தது.

பிகார் முதல்வர் நிதிஷ்குமாரும் வெளிப்படையாக எதையும் கூறவில்லை. ஆனால் எதிர்ப்பு தெரிவிக்க திங்களன்று, ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர்களின் அழைப்பின் பேரில் கட்சியின் மக்களவை உறுப்பினர் அனில் ஹெக்டே கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்திருந்தனர்.

ஆனால் ராகுல் காந்தி விவகாரத்தில் இருந்து இதுவரை ஒதுங்கி இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்களில் மாயாவதி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் அடங்குவர்.

ராகுல் காந்தி விவகாரம், ‘எதிர்க்கட்சிகளுக்கு உயிரூட்டும்’ வேலையை செய்திருப்பதாக டெல்லியைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயலாளர் நீரஜ், பிபிசியிடம் பேசுகையில் ஒப்புக்கொண்டார்.

”அதனால்தான் எதிர்க்கட்சிகள் கருத்து வேறுபாடுகளை மீறி காங்கிரஸுடன் ஒன்று சேர்ந்துள்ளன. ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது மற்றும் ஜனநாயக அமைப்புகளை நசுக்குகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் நிலைப்பாடு

ராகுல், இந்தியா, காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images

ராகுல் காந்தி விஷயத்தில் பாரதிய ஜனதா கட்சி அவசரப்பட்டு செயல்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கூறினார்.ஏதோ தவறு நடந்துள்ளது என்று சாதாரண மக்களுக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது என்கிறார் அவர்.

பிபிசியிடம் பேசிய சஞ்சய் நிருபம், “ஒன்று, இந்த உத்தரவு எதிர்பாராதது. அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவது நாட்டின் வரலாற்றில் இதுவே முதல்முறை. இதுபோன்ற வழக்குகளில் இரண்டு அல்லது மூன்று மாத சிறை தண்டனை அல்லது கண்டிப்பதன் மூலம் விவகாரம் தீர்க்கப்படுவது வழக்கம். ஆனால் நிகழ்வுகள் நடந்த விதத்தை பார்க்கும்போது, சட்டத்தின் போர்வையில் ராகுல் காந்திக்கு எதிராக செய்யப்பட்டது இது என்பது மக்களுக்கு தெளிவாகத் தெரிகிறது,” என்று குறிப்பிட்டார்.

ஆனால் காங்கிரஸால் எந்த வேலையில் பெரிய வெற்றியைப் பெறமுடியவில்லையோ, அந்த வேலையை பாஜக செய்துவிட்டது என்று நிருபம் கூறினார்.

”ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க எங்களால் முடியவில்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் இப்போது நடந்திருக்கும் விஷயம் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்துள்ளது. மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் அல்லது கே.சி.ஆர் போன்ற, காங்கிரஸிடமிருந்து விலகி இருந்த தலைவர்கள் தற்போது ராகுல் காந்திக்கு ஆதரவாக நிற்கின்றனர்.” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சூரத்தில் உள்ள கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று கூறிய நிருபம், நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவியை ரத்து செய்த உத்தரவை மக்களவைச் செயலகம் திரும்பப்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஆக்ரோஷமான அணுகுமுறையால் காங்கிரஸ் தன்னை மீட்டெடுக்குமா?

ராகுல், இந்தியா, காங்கிரஸ்

பட மூலாதாரம், ANI

‘ஜெயிலுக்குப் போக பயமில்லை’ என்றும், ‘வாழ்நாள் முழுவதும் பார்லிமென்ட்டில் இருந்து தகுதி நீக்கம்’ செய்யப்பட்டாலும், ‘ஜனநாயகத்தை காப்பாற்ற’ பேசுவேன் என்றும் அரசிடம் கேள்வி கேட்பேன் என்றும் ராகுல் காந்தி கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த அறிக்கை குறித்து வெவ்வேறு வழிகளில் விளக்கமளிக்கப்படுகிறது. ராகுலின் இந்த பேச்சு அவரது ஆக்ரோஷமான போக்கை காட்டுவதாக சிலர் கருதுகின்றனர்.

ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்ட பிறகான அவரது ஆக்ரோஷமான அணுகுமுறையானது, இத்தகைய ஆவேசமான அணுகுமுறையின் மூலம் காங்கிரஸ் தன்னை மீட்டெடுக்க முயற்சிக்கும் என்பதைக்காட்டுவதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இன்று பாஜக செய்ததை ஒரு காலத்தில் காங்கிரஸும் செய்து வந்ததாக அரசியல் விமர்சகர் வித்யா பூஷண் ராவத் கருதுகிறார்.

“ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது பதவிக்காலத்தில் அமைச்சர்கள் தன்னிச்சையாக செயல்பட்டனர். நிறுவன மட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நஷ்டம் ஏற்பட்டதற்கும், மக்கள் மத்தியில் அதன் மதிப்பு குறைந்ததற்கும் இதுவே காரணம். காங்கிரஸுக்கு உயிரூட்ட ராகுல் காந்தி முயற்சி செய்கிறார் என்பதிலும், அதில் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது என்பதிலும் சந்தேகமில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘பாரத் ஜோடோ யாத்திரை’யில் இருந்து தான், அரசை சுற்றி வளைக்கும் பணியை ராகுல் காந்தி தொடங்கினார்,”என்று ராவத், பிபிசியிடம் தெரிவித்தார்.

“நாடாளுமன்றத்தில் அவர் தொடர்ந்து பேசிய விதமும், அதானி விவகாரத்தில் அரசை முற்றுகையிடும் விதமும் ஆளுங்கட்சியினரின் அசௌகரியத்தை அதிகரித்துக் கொண்டே சென்றது,” என்று அவர் குறிப்பிட்டார்.

எந்த தியாகத்தையும் செய்ய அவர் தயங்க மாட்டார் என்பதும் சிறைக்கு செல்லவும் அவர் துணிந்துவிட்டார் என்பதும் ராகுலின் அறிக்கையில் இருந்து தெளிவாகிறது. இதனால் காங்கிரசுக்கு நன்மை ஏற்படுவது போலவே தெரிகிறது.

தன்னை காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸுக்கு இருக்கும் ஒரே வழி இதுதான். அந்த வழியை பாஜக காங்கிரஸுக்கு சுலபமாக்கியுள்ளது. அதை காங்கிரஸ் எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ளும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »