Press "Enter" to skip to content

டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வு முடிவுகள்: ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்ற சர்ச்சை – நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் குரூப் – 4 முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. முடிவுகள் வெளியானதிலிருந்தே, பல்வேறு குற்றச்சாட்டுகள் தேர்வர்களாலும் அரசியல் கட்சித் தலைவர்களாலும் சுமத்தப்பட்டுவருகின்றன. இதில் உண்மையில் என்ன நடந்தது?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – டிஎன்பிஎஸ்சி – தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியடங்களை நிரப்புவதற்கான குரூப் – 4 தேர்வை கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடத்தியது. 9,870 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இந்தத் தேர்வை மொத்தம் 18 லட்சத்து 36,534 பேர் எழுதினர்.

தேர்வுத் தாள்களைத் திருத்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டு விதிகளை சரியாக பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த கூடுதல் அவகாசம் தேவைப்பட்டதால், குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

பிறகு ஒரு வழியாக பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், பிப்ரவரியில் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. பிறகு, மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்வர்களும் அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் குரூப் – 4 தேர்வு முடிவை உடனடியாக வெளியிட வேண்டுமென வலியுறுத்தினர்.

இந்த நிலையில் குரூப் – 4 தேர்வின் முடிவுகள் மார்ச் 24ஆம் தேதி வெளியிடப்பட்டன. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது தேர்வர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், சில மணி நேரங்களிலேயே தேர்வு முடிவுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

முதலாவதாக, தட்டச்சர்களுக்கான பணியிடத்தில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றவர்கள் கூடுதல் ரேங்குகளைப் பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது. அடுத்ததாக, ஒரே பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் அதிகம் தேர்ச்சிபெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானதுமே, இது தொடர்பாக சிலர் எழுப்பிய குற்றச்சாட்டுகளை சில தொலைக்காட்சி ஊடகங்கள் பெரிதாக வெளியிட்டன. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இது குறித்து விளக்கமளிக்கும்படி கோரினர். தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.

முதலாவதாக, நில அளவையர்களுக்கான தேர்வில், ஒரே மையத்தில் பயிற்சி பெற்றவர்களே பாதிக்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்திருப்பது குறித்து பலரும் கேள்வியெழுப்பினர். இவர்கள் சுட்டிக்காட்டிய பயிற்சி மையம், காரைக்குடியில் இயங்கி வருகிறது. நில அளவையர் பணிக்கு காலியாக இருந்த 1,338 பணி இடங்களில், இந்தப் பயிற்சி மையத்தில் படித்த 742 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட பயிற்சி மையத்தின் இயக்குநர் கற்பகத்திடம் பிபிசி பேசியபோது, தங்கள் மையத்தில் படித்தவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக விளக்கமளித்தார்.

“நில அளவையாளர் மற்றும் வரைவாளர் பணிக்கு எங்களது பயிற்சி மையத்தில் படித்த 742 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர் என்று சர்ச்சையை ஏற்படுத்துகிறார்கள். ஆனால், எங்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை.

கடந்த பத்து ஆண்டுகளாகவே, எங்கள் பயிற்சி மையத்தில் பயின்ற 60 முதல் 70 சதவீத மாணவர்கள் அரசு பணியில் தேர்வாகி உள்ளனர். ஆனால், இந்த முறை இது சர்ச்சையாகியிருப்பதற்குக் காரணம், 1,338 பணி இடங்களில் எங்கள் பயிற்சி மையத்தில் படித்த 742 மாணவர்கள் தேர்வாகியுள்ளதுதான்.

தற்போது தேர்வாகி உள்ள 742 பேரும் தமிழகத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள். காரைக்குடியில் உள்ள 13 தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 32 மாணவர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.

மேலும், நில அளவையாளர் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 742 மாணவர்களில் 440 மாணவர்கள் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். எஞ்சியுள்ள 302 பேர் ஏற்கனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் நடத்தும் உதவிப் பொறியாளருக்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டார்கள். அந்த 302 பேரும் நில அளவையாளர் பணியில் சேர மாட்டார்கள்.

நில அளவையாளர் தேர்வு எழுதிய பலரும் உதவி பொறியாளர் தேர்வுக்கும் படித்தவர்கள் என்பதால் நில அளவையாளர் தேர்வில் அவர்களால் மிக எளிதில் வெற்றி பெற முடிந்தது. நில அளவையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 100 பேர் மட்டுமே இந்த ஆண்டு முதல் முறையாக பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க தொடங்கியவர்கள். மற்ற அனைவரும் 2015ஆம் ஆண்டு முதல் இங்கே பயிற்சி பெற்று வருபவர்கள்.

இதில் எந்த சர்ச்சையும் இல்லை. தேவையில்லாத இந்த சர்ச்சையால் எங்கள் பயிற்சி மையத்திற்கு இலவசமாக விளம்பரம் கிடைத்ததாக கருதுகிறோம்” என்கிறார் அவர்.

அதேபோல, தென்காசியில் இருந்து செயல்படும் ஒரு மையம், தங்கள் மையத்தில் படித்த இரண்டாயிரம் பேர் தேர்வு ஆனதாக விளம்பரம் செய்ததும் சிக்கலை ஏற்படுத்தியது.

மேலும், இளநிலை உதவியாளர் பணிக்கும் தட்டச்சர் பணிக்கும் தேர்வு எழுதியவர்கள் வெவ்வேறு முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திங்கட்கிழமையன்று சட்டமன்றத்தில் இது தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி,

‘காரைக்குடியில் ஒரே மையத்தில் பயின்ற அனைவரும் தேர்ச்சி பெற்றது எப்படி? அடுத்தடுத்த பதிவெண் கொண்ட தேர்வர்கள் தேர்ச்சி பெற்றது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று கோரினார்.

இந்த நிலையில்தான் இதற்கு நிதியமைச்சரும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்திருக்கிறார்.

writing

பட மூலாதாரம், Getty Images

அதாவது, தென்காசியில் மொத்தமே எட்டு டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையங்கள்தான் உள்ளன. பத்தாயிரம் காலிப் பணியடங்களில், இந்த எட்டு பயிற்சி மையங்களிலும் படித்தவர்கள் மொத்தமே 397 பேர்தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், அந்த பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர் விளம்பரம் அளிக்கும்போது, தங்கள் மையங்களில் படித்தவர்கள் இரண்டாயிரம் பேர் தேர்ச்சியடைந்ததாகக் கூறியதுதான் சிக்கலை ஏற்படுத்தியது. அவர் வேறு மாவட்டங்களில் பயிற்சி மையங்களை நடத்திவருவதாகவும் அதில் படித்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அதேபோல, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணிக்கும் தேர்வு எழுதியவர்கள் வெவ்வேறு முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் விவகாரம். அதாவது, இளநிலை உதவியாளர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு எந்தத் தொழில்நுட்பத் தகுதியும் தேவையில்லை. அவர்கள் குரூப் – 4 தேர்வில் தேர்ச்சியடைந்த மதிப்பெண்களின் படியே முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்படும்.

ஆனால், தட்டச்சர் பணியிடங்களைப் பொறுத்தவரை, தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ‘Senior Grade’ தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமைப் பட்டியலில் முதலிடமும் இரு மொழிகளில் ஏதாவது ஒன்றில் ‘Senior Grade’ பெற்றவர்களுக்கு அதற்கு அடுத்த இடமும் இரு மொழிகளிலும் ‘Junior Grade’ மட்டுமே பயிற்சி பெற்றவர்களுக்கு அதற்கு அடுத்த இடமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவேதான், ஒரே தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள், வெவ்வேறு பணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளனர்.

TWITTER/@PTRMADURAI

பட மூலாதாரம், TWITTER/@PTRMADURAI

மேலும், காரைக்குடி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் விவகாரத்தைப் பொறுத்தவரை, கடந்த 7 ஆண்டுகளில் ஒரே மையத்தில் எழுதியவர்கள் பெரிய எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்களா, அது காரைக்குடி மையமா அல்லது வேறு மையமா, குரூப் 4, குரூப் 2 ஆகிய இரண்டிலும் இதற்கு முன்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ச்சிபெற்றவர்கள் விகிதத்திற்கும் தற்போதுள்ள விகிதத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதா என்பது ஆராயப்படும் என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார்.

மொத்தம் பதினெட்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதிய தேர்வில், தென்காசியைச் சேர்ந்த பயிற்சி மையம், தங்கள் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் இரண்டாயிரம் பேர் தேர்ச்சிபெற்றதாக அளித்த விளம்பரமே இந்த சர்ச்சைக்கு துவக்கப் புள்ளியாக அமைந்துவிட்டது. ஏற்கனவே, தேர்வு முடிவுகள் வெளியாக ஏற்பட்ட தாமதம் தொடர்ந்து செய்தியாக இருந்துவந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான தினத்தன்று எழுந்த சிறு சர்ச்சை, மிகப் பெரிய புயலாக உருவெடுத்துவிட்டது.

“பிரச்சனையே டிஎன்பிஎஸ்சியிடம்தான். சிறியதாக பிரச்னை எழும்போதே விளக்கமளித்திருந்தால் அது இவ்வளவு பெரியதாக உருவெடுத்திருக்காது. அவர்கள் எதற்கும் பதில் சொல்வதில்லை என்பதால்தான், அமைச்சர் விளக்கமளிக்க வேண்டியிருக்கிறது. இது தவிர இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது, டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவித்ததும் பல்வேறு பயிற்சி மையங்கள் பயிற்சித் தேர்வுகளை நடத்துவார்கள். எல்லா மையங்களிலும் படித்தவர்கள் அந்தத் தேர்வைப் போய் எழுதுவார்கள். ஆகவே, அந்தத் தேர்வை நடத்தும் பயிற்சி மையம், பல சமயங்களில் அந்தத் தேர்வை எழுதியவர்கள் எல்லாம் எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள்தான் என்று சொல்லிக்கொள்வார்கள். இது விளம்பரத்திற்காகச் செய்வது. அது கடைசியில் இவ்வளவு பெரிய சர்ச்சையாகிவிடுகிறது” என்கிறார் போட்டித் தேர்வு பயிற்சியாளரான அய்யாசாமி.

பயிற்சி மையங்களுக்குள் இருக்கும் போட்டியும் இந்த விவகாரம் மிகப் பெரியதாக எழ முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக விளக்கமளிக்க டிஎன்பிஎஸ்சியைச் சேர்ந்த யாரும் முன்வரவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »