Press "Enter" to skip to content

காவல் துறை ஏ.எஸ்.பி. கைதிகளின் பல்லை பிடுங்கிய குற்றச்சாட்டு: எங்கே தவறு நடந்தது? எப்படி இந்த நிலை மாறும்?

குற்ற வழக்குகளில் புகாருக்கு உள்ளாகி, விசாரணைக்காக அழைத்துவரப்படும் நபர்களின் பற்களை கொடூரமான முறையில் பிடுங்கியதாக அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர்சிங் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார். இதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விசாரணைக் கைதிகள் துன்புறுத்தப்படுவது தொடர்பான, காவல் துறை காவலில் கைதிகள் மரணம் தொடர்பான நீண்ட வரலாறு உள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவரும் 2020ம் ஆண்டு காவல் துறை காவலில் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் உயிரிழந்த சம்பவம் கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மனசாட்சியை உலுக்கிய சம்பவம். அப்போது நடந்த அதிமுக ஆட்சிக்கு அது மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது. அது தவிர, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் காவல் நிலைய கழிப்பறையில் வழுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி கட்டோடு காட்சியளித்த நூற்றுக்கணக்கான சம்பவங்கள் கடந்த 5-6 ஆண்டுகளில் நடந்தன.

2022 ஏப்ரலில் சென்னையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்பவர் காவல் துறை காவலில் மரணமடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம் தட்டாரணை கிராமத்தை சேர்ந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்த தங்கமணி சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது போன்ற சம்பவங்களில் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களைத் திரட்டியும், சட்ட ரீதியாகவும் போராடுகின்றனர். ஆனால், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

அம்பாசமுத்திரம் விஷயத்தில் எங்கே தவறு நடந்தது? இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடக்க காரணம் என்ன? என்ற கேள்விகளை, பல மனித உரிமை வழக்குகளை ஏற்று நடத்தும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் செயல் இயக்குநர் ஹென்றி டிஃபேனிடம் கேட்டோம்.

கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டவர்களின் பற்களை அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. கட்டிங் பிளையரை வைத்து பிடுங்கியதாக கூறப்படும் சம்பவம் குறிப்பிட்ட ஹென்றி, பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை தாங்கள் பெற்றுவருவதாகவும், நடந்த விவகாரம் என்ன என்பது தெளிவாகத் தெரிவதாகவும் கூறினார்.

ஹென்றி டிஃபேன்

பட மூலாதாரம், ISHR

“சாத்தான்குளம் போல ரத்தக்கறையை சுத்தம் செய்தார்கள்”

“இதில் பல்பீர் சிங் மட்டுமே பிரச்சனை அல்ல. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகிய அனைவருமே கவனக்குறைவாக இருந்துள்ளனர். இது மார்ச் 10ம் தேதி நடந்தது. 26-ம் தேதி அவர்கள் பெயிலில் வந்து பேசும்வரை ஏதும் எங்களுக்குத் தெரியாது என்று சொல்வதை எப்படி நம்ப முடியும்? அவர்கள் அனைவரும் சேர்ந்து நடந்ததை மூடிமறைத்தார்கள். ஊடகம்வில் வந்துவிட்டது. நாங்கள் எல்லாம் தலையிடுகிறோம் என்று தெரிந்தவுடன், தற்போது தங்கள் நிலையை மாற்றிக்கொள்கிறார்கள்.

சாத்தான்குளத்தில் ரத்தக் கறையை சுத்தம் செய்ததைப்போல இங்கேயும் ரத்தக்கறையை சுத்தம் செய்திருக்கிறார்கள். ஆனால், மேஜிஸ்திரேட் என்ன செய்தார்? இரவு 11.30க்கு பாதிக்கப்பட்ட நபர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கு காவல் துறை அழைத்துவந்தபோது, அவர்கள் வாயில் ரத்தம் ஒழுகுவது, காயம் இருப்பது இதையெல்லாம் பார்த்திருக்கமாட்டாரா? ரிமாண்ட் வழக்குரைஞர் ஒருவர் இருப்பார் அவர் பார்த்திருக்கமாட்டாரா?

எல்லா காவல் நிலையத்திலும் கண்காணிப்பு தொலைக்காட்சி ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) 24 மணி நேரமும் இருக்கவேண்டும். அதில் பதிவாகும் ஒலிநாடா, காணொளி இரண்டும் 18 மாதத்துக்குப் பாதுகாக்கப்படவேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளது. அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தின் கண்காணிப்பு தொலைக்காட்சி கேமிராவை மாவட்ட ஆட்சியரால் பார்க்க முடியவில்லையா? மாவட்ட காவல் துறை புகார் அத்தாரிட்டியின் தலைவர் என்ற முறையில் அவர் என்ன செய்தார்? காவல் கண்காணிப்பாளருக்கு அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் தனிப்பிரிவு கான்ஸ்டபிளே இல்லையா. காவல் நிலையத்தில் இவ்வளவும் நடப்பதை காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை அளிக்கவேண்டியது அவரது வேலைதானே. அவர் தரவில்லையா? எனவே, இது முழு அமைப்பும் சம்பந்தப்பட்டது” என்றார் ஹென்றி டிஃபேன்.

‘குடிமைச் சமூகம் செயல்படுவதே தீர்வு’

ஹரிபரந்தாமன்

பட மூலாதாரம், FACEBOOK/JUSTICEHARIPARANTHAMAN

காவல் துறை காவலில் குற்றம்சாட்டப்பட்ட இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுப்பதற்கு அமைப்பு சார்ந்த சட்டரீதியான என்ன ஏற்பாடுகள் உள்ளன என்று ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமனிடம் கேட்டோம்.

“குடிமைச் சமூகத்துக்கு இதில் அக்கறை வரவேண்டும். குடிமைச் சமூகம் இவற்றைத் தடுப்பதற்கு செயல்படவேண்டும். அது ஒன்றுதான் வழி என்றார் அவர். இந்தியா வந்திருந்த அமெரிக்க வரலாற்று அறிஞரும், சமூக செயற்பாட்டாளருமான நோம் சோம்ஸ்கி இந்தியா வந்திருந்தபோது அமெரிக்காவில் முதல் பயங்கரவாதி அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்தான் என்றார். இப்படிக் கூறிவிட்டு நீங்கள் உங்கள் நாட்டுக்குள் செல்ல முடியுமா என்று கேட்டபோது எங்கள் ஊரில் உள்ள குடிமைச் சமூகம் வலுவாக உள்ளது. அதுதான் பாதுகாப்பு என்றார்.

மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது இந்த விஷயத்தில் இந்தியா 100-200 ஆண்டுகள் பின்னால் உள்ளது. அங்கே பிளாக் லைவஸ் மேட்டர் இயக்கத்தில் வெள்ளையர்கள் முன்னாள் வந்து நிற்கிறார்கள். எஸ்.சி.எஸ்.சி. வன்கொடுமை வழக்குகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு தரவேண்டும் என்று சட்டத்தில் இருக்கிறது. அதுகூட செயல்படுத்தப்படுவதில்லை. நான் நீதிபதியாக இருந்தபோது இப்படி வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளேன். தொழிலாளர் நலச்சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், தொழிற்சங்கங்கள் இருந்தால்தான் அந்த சட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு உரிமை கிடைக்கும். அதைப்போலத்தான் சட்டம் மட்டும் போதாது. மனித உரிமைகளை உறுதி செய்ய குடிமை சமூகம் இதற்கு எதிர்வினையாற்றவேண்டும்” என்றார் ஹரிபரந்தாமன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »