Press "Enter" to skip to content

உத்தரபிரதேசம் மலியானாவில் 72 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட வழக்கு: ஒருவருக்கும் தண்டனை கிடைக்காதது எப்படி?

பட மூலாதாரம், AFP

1987, மே 23 அன்று தனது ஆறு வயது மகளுடன் மீரட்டில் உள்ள மலியானா கிராமத்தின் புறவழிச்சாலையில் முன்னா ஓடும்போது, ஒரு தோட்டா அவரது மகளின் நெற்றியைத் துளைத்தது. என்ன நடக்கிறது என்று முன்னா புரிந்துகொள்வதற்குள், மற்றொரு தோட்டா அவர் மார்பில் தாக்கியது. தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். “

இதை மீரட்டின் மலியானா கிராமத்தில் வசிக்கும் முகமது யாகூப் விவரிக்கும்போது, கண்முன்னே நடப்பது போல் உள்ளது. இது நடந்த போது அவருக்கு 30 வயது, இன்று அவருக்கு 66 வயது.

1987 ஆம் ஆண்டு மீரட்டின் மலியானா கிராமத்தில் 72 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு அவர்களது வீடுகள் எரிக்கப்பட்டன.

1987 மே 17 அன்று மீரட்டில் இந்து-முஸ்லிம் கலவரம் தொடங்கியது, மூன்று மாதங்கள் கலவரத்தீயில் பற்றி எரிந்து கொண்டிருந்தது மீரட்.

23 மே 1987 பிற்பகல் வரை மீரட்டின் மலியானா அமைதியாக இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால், மதியம் தொழுகை முடிந்ததும் திடீரென முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துப்பாக்கிச் சூடு தொடங்கியது.

கலவரக் கும்பல் முஸ்லிம்களைக் குறிவைத்து அவர்களைக் கொல்லத் தொடங்கியது. முஸ்லிம்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டு தீவைக்கப்பட்டனர், குழந்தைகள் எரியும் நெருப்பில் வீசப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் இந்த வன்முறைக்கு மாகாண ஆயுதக் காவல் படை (ப்ரொவின்ஷியல் ஆர்ம்ட் கான்ஸ்டப்யுலரி – பிஏசி) தான் பொறுப்பு என்று அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

ஆனால், இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டபோது, அதில் காவல்துறையினரோ அல்லது பிஏசியோ இடம்பெறவில்லை.

36 வருட காத்திருப்பு மற்றும் 900 விசாரணைகளுக்குப் பிறகு, மார்ச் 31 அன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சாட்சிகளின் வாக்குமூலங்களில் போதுமான ஆதாரம் இல்லாததாலும், நம்பகத்தன்மை இல்லாததாலும் குற்றம் சாட்டப்பட்ட 38 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது.

குழந்தைகள்

பட மூலாதாரம், BBC/SERAJ ALI

72 இஸ்லாமியர்களைக் கொன்றது யார்?

இந்த வன்முறை பற்றிய விவரம் அறிய, இந்தப் படுகொலை நடந்த மீரட்டில் உள்ள மலியானாவுக்குச் சென்றோம்.

அன்று கிராமமாக இருந்த இந்த இடம் தற்போது நகரமாக மாறியுள்ளது. மாறாதது எது என்றால், இங்குள்ள மக்களிடையே பரவியுள்ள பீதியும் விரக்தியும்தான்.

அவர்கள் எழுப்பும் ஒரு கேள்வி – அனைவரும் நிரபராதிகள் என்றால், எங்கள் உறவினர்களைக் கொன்றது யார்?

ஏன் இப்படி ஒரு முடிவு வந்தது? குற்றம் சாட்டப்பட்ட 38 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது ஏன்?

எரியும் வாகனம்

பட மூலாதாரம், SUPOJ BURANAPRAPAPONG/GETTY IMAGES

ஒரு கொடூரமான படுகொலை வழக்கு, யாரையும் குற்றவாளிகள் என்று நிரூபிக்க முடியாத அளவுக்கு பலவீனமானது எப்படி?

இதைப் புரிந்துகொள்ள, இந்த வழக்கின் 35 ஆண்டுகால வரலாற்றையும் சாட்சிகளின் வாக்குமூலங்களையும் படித்தோம், மார்ச் 31 அன்று செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைப் படித்தோம்.

மே 17 அன்று மீரட்டில் வகுப்புவாத கலவரம் வெடித்தபோது, நிலைமையைக் கட்டுப்படுத்த நிர்வாகத்திற்கு உதவ உத்தரப்பிரதேச அரசாங்கம் 11 பிஏசி குழுவை இங்கு அனுப்பியது.

ஆனால் கலவரத்தின் போது பிஏசி, இஸ்லாமியர்களைக் குறி வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மலியானா படுகொலைக்கு ஒரு நாள் முன்பு, 1987 மே 22 அன்று ஹாஷிம்புரா படுகொலை நடந்தது.

இதில் 42 முஸ்லிம்களை சுட்டுக் கால்வாயில் வீசிய வழக்கில் 16 பிஏசி ஜவான்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அன்றைய தினம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் காவல்துறையும் பிஏசியும் ஈடுபட்டதாக மலியானாவில் பல நேரில் கண்ட சாட்சிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் வழக்கறிஞர் அகமது முதலில் வாக்குமூலம் பதிவு செய்தார். அன்று அவர் இடுப்பில் சுடப்பட்டார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று, அவரது காயங்கள் ஆறியிருந்தாலும், வடு மறையவில்லை.

“இங்கு நடந்த கலவரம் தொடங்கப்பட்டது பிஏசியால் தான். முதலில் காவல்துறையும் பிஏசியும் தாக்குதலைத் தொடங்கினர், பின்னர் கலவரக் கும்பல் வந்தது. யார் என்னைச் சுட்டார்கள் என்று என்னால் பார்க்க முடியவில்லை, ஆனால் நான் தீவைத்தவர்களை நிச்சயம் பார்த்தேன். அவர்கள் அனைவரையும் நான் நீதிமன்றத்தில் அடையாளம் காட்டினேன். ஆனால், காவல்துறை, பிஏசி ஆகியோர் கொலையில் ஈடுபட்டதால், வழக்கு முடிவுக்கு வராமல் இருக்க, தங்களால் இயன்றவரை வழக்கை இழுத்தடித்துக் கெடுத்தனர்.” என்று அவர் கூறுகிறார்.

வழக்க்றிஞர் அகமது இடுப்பில் சுடப்பட்டார்

பட மூலாதாரம், BBC/SERAJ ALI

தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர். ஆனால் எங்களிடம் பேசுகையில் அவர் ஒரு ஸ்டூலில் அமர்ந்து கொண்டு வெள்ளை நிற பைஜாமா தைத்துக்கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, அவர் தனது 36 வயது மருத்துவச் சீட்டை எங்களிடம் காட்டினார். அதில், சம்பவம் நடந்த மே 23 அன்று, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒன்றரை மாதங்கள் சிகிச்சை பெற்று அறுவை சிகிச்சை செய்ததாக எழுதப்பட்டுள்ளது.

ரசீது

பட மூலாதாரம், BBC/SERAJ ALI

அரசு மற்றும் காவல்துறை தரப்பு

பிஏசி மற்றும் காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர்களின் தரப்பை அறிந்து கொள்ள, பிபிசி, பிஏசி அலுவலகம் சென்றது.

இது குறித்து பேச எந்த அதிகாரியும் இல்லை என்று அங்கு எங்களிடம் கூறப்பட்டது.

மீரட் காவல்துறையின் ஏஎஸ்பி ரோஹித் சாஜவானையும் தொடர்பு கொண்டோம், ஆனால் அவரும் எங்களுடன் பேச மறுத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச அரசின் நிலைப்பாட்டை அறிய, மாநில உள்துறை அமைச்சகத்தின் தலைமைச் செயலர் மற்றும் மாநிலக் காவல்துறையை மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டோம், ஆனால் இதுவரை எங்களுக்கு எந்தப் பதிலும் வரவில்லை.

திடீரென்று மாயமான எஃப்ஐஆர்

பிஏசி

மே 24, 1987 அன்று, மலியானாவில் நடந்த படுகொலை தொடர்பாக முகமது யாகூப் என்பவர்தான் முதல் தகவல் அறிக்கைக்கான புகாரை பதிவு செய்தார்.

யாகூப்பிற்கு எழுதத் தெரியாததால், மலியானா கிராமத்தைச் சேர்ந்த சலீம் சித்திக் என்பவர் எழுதியுள்ளார்.

இந்த வழக்கில் 94 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களில் பலர் இறந்துவிட்டனர், பலரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

இந்த வழக்கில், சம்பவத்திற்கு முன்பே இறந்துவிட்ட சிலரது பெயர்களும் இடம்பெற்றிருந்தன என்பது தான் விந்தை. முடிவாக, 38 பேர் மீது தான் வழக்கு விசாரணை நடந்தது.

ஜூலை 23, 1988 அன்று, இந்த வழக்கில் எட்டு பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் இதற்குப் பிறகும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்க முடியவில்லை.

எப்ஐஆர் மர்மமான முறையில் காணாமல் போனதே இதற்குக் காரணம்.

முதன்மை எப்ஐஆர் காணாமல் போன வழக்கில், ஒரிஜினல் எப்ஐஆர் இல்லாத விவகாரத்தில் எப்படி விசாரணை நடத்தப்படும் என்று கூறி நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

2009-ம் ஆண்டு முதல் சாட்சியான வழக்கறிஞர் அகமதுவின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

புகாரை பதிவு செய்த யாகூப், “அன்று (மே 23, 1987) நான் வெளியே வந்தபோது, சுற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது, தீப் பற்றி எரிந்தது. வீடுகளுக்குள் ஆட்கள் இருக்கும்போது வெளியிலிருந்து தாழிட்டு அந்த வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. ஆனால் இப்போது தீர்ப்புக்குப் பிறகு, நான் ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்க விரும்புகிறேன். அவர்கள் யாரும் கொல்லவில்லை என்றால், காவல்துறையும் பிஏசியும் எதுவும் செய்யவில்லை என்றால், எங்கள் மக்கள் எப்படி இறந்தார்கள்? நாங்களே எங்களுக்குத் தீ வைத்துக்கொண்டோமா?” என்று கேட்கிறார்.

யாகூப், தான் காவல் நிலையம் சென்றது எப்படி என்பது குறித்த விரிவான தகவல்களையும் தருகிறார்.

“பிஏசி ஆட்கள் என்னை என் ஆடைகளை கழற்ற வைத்து, கைகளை கட்டி, கிராமத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றார்கள். நானும் இறந்திருப்பேன், ஆனால் ஒரு காவலர், என்னை காரில் உட்கார வைத்து டிபி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். நான் இரவு முழுவதும் அங்கேயே இருந்தேன். நான் சுயநினைவின்றி இருந்தேன், ஆனால் மறுநாள் காலையில் நான் காவல் நிலையத்தில் எனது புகாரை சலீம் பாய் மூலமாக எழுதச் சொன்னேன். ஆனால் இந்த எஃப்ஐஆர் எப்படி காணாமல் போனது என்று எனக்குத் தெரியவில்லை. பல ஆண்டுகளாக, நீதிமன்றம் காவல் நிலையத்தைக் கோரியும் அந்த எஃப்ஐஆர் பெறப்படவில்லை.”

பிபிசி செய்தியாளர் கீர்த்தி தூபே மலியானா தொடர்பான ஆவணங்களை வாசித்தபோது

மருத்துவ அறிக்கையோ சாட்சியங்களோ சரியான ஆதாரங்களைத் தரவில்லை

இந்த வழக்கில் 35 சாட்சிகளின் பெயர்கள் இருந்தன, ஆனால் 14 சாட்சிகள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஆனால் இந்த சாட்சிகளில் பலரின் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் இந்திய தண்டனைச் சட்டம் 161வது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

அதாவது, பிரிவு 161 இன் கீழ் பல சாட்சிகளின் வாக்குமூலங்கள் காவல்துறையால் எடுக்கப்படவில்லை.

இபிகோவின் கீழ் பதிவு செய்யப்பட்ட அறிக்கை என்பது காவல்துறை அதிகாரியின் முன் பதிவு செய்யப்படும் அறிக்கை என்று பொருள்.

இந்த அறிக்கைகள் எப்படியும் நீதிமன்றத்தில் சட்டப்படி செல்லுபடியாகாது.

ஆனால், 161வது பிரிவின் கீழ் பல சாட்சிகள் பதிவுசெய்யப்படாததால், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற பழைய வழக்கில் வாக்குமூலம் பதிவு செய்யத் தொடங்கியபோது, அந்த நேரத்தில் அந்த சாட்சி, காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தை இப்போது புரிந்துகொள்வது கடினமாகிவிட்டது என்று செஷன்ஸ் நீதிபதி லக்விந்தர் சிங் சூட் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

மலியானா படுகொலை வழக்கு குற்றம் சாட்டப்பட்ட 38 பேருக்கு எதிராக மாநில அரசு என்று இருந்ததால், இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் முஸ்லிம்களுக்குச் சாதகமாக வாதாடினார்.

இந்த வழக்கில், காயமடைந்தவர்கள் மற்றும் சாட்சியம் அளித்தவர்களின் அசல் மருத்துவ அறிக்கைகள் கூட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்த வழக்கின் முதல் நேரில் கண்ட சாட்சியான வக்கீல் அகமது, துப்பாக்கியால் சுடப்பட்டார், ஆனால் அரசு தரப்பு எந்த மருத்துவ ஆவணங்களையும் காட்டவில்லை.

இதுமட்டுமின்றி, தங்கள் காயம் குறித்து கூறிய சாட்சிகளுக்கு ஆதரவாக மருத்துவ அறிக்கை எதுவும் வழங்கப்படவில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் சாட்சியமும் இல்லை.

மீரட் செஷன்ஸ் நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் சச்சின் மோகன் பிபிசியிடம், “இந்த வழக்கு பல வருடங்கள் பழமையானது, எனவே காவல் துறையினர் அப்போது செய்யத் தவறிய சில செயல்களால் இந்த வழக்கு பலவீனமடைந்தது. இந்த வழக்கில் மருத்துவர் உயிருடனே இல்லை எனும்போது அவர் எப்படி சாட்சியாக இருக்க முடியும்? விசாரணை நடத்துவோர் இந்த ஆவணங்களையெல்லாம் அந்த நேரத்திலேயே சேகரித்திருக்க வேண்டும்.” என்றார்.

துப்பாக்கி குண்டுகளால் உயிரிழந்தோரைப் பொருத்தவரையில், கொலை ஆயுதம் மீட்கப்படவேயில்லை. எனவே குற்றவாளிகளை நிரூபிக்க முடியவில்லை.

உத்தரப்பிரதேச காவல்துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் விபூதி நாராயண் ராய் 1987 ஆம் ஆண்டு மீரட் கலவரத்தின் போது காசியாபாத் எஸ்பியாக இருந்தார்.

ஹாஷிம்புரா வழக்கில் முதற்கட்ட விசாரணை நடத்தி எப்ஐஆர் பதிவு செய்த காவல் துறை அதிகாரி விபூதி நாராயண். இந்த வழக்கில், 16 பிஏசி நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர், “மலியானா படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் எண்ணமே காவல்துறைக்கும் அரசுக்கும் இல்லை, ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தால், துப்பாக்கிகளின் பாலிஸ்டிக் சோதனை நடத்தப்பட்டிருக்கும். எந்தத் துப்பாக்கிகளில் இருந்து தோட்டாக்கள் வந்தன என்பது தெரிந்திருக்கும். ஆனால் இது நடக்கவில்லை. மலியானா படுகொலை பட்டப்பகலில் நடந்தது. ஹாஷிம்புரா இரவின் அமைதியில் அரங்கேறியது. ஆனாலும், நாங்கள் நடவடிக்கை எடுத்து உயிர் பிழைத்த ஒருவரைக் கண்டுபிடித்தோம், அவருடைய அறிக்கையால் 42 இஸ்லாமியர்களுக்கு நீதி கிடைத்தது. ஆனால் மலியானாவில் ஆதாரங்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும், விசாரணை முதல் நீதிமன்றப் போராட்டம் வரை காட்டப்பட்ட மெத்தனத்தின் விளைவு இன்று அந்த முஸ்லிம்களைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட யாரையும் குற்றவாளிகளாக நீதிமன்றம் கருதவில்லை.” என்றார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சச்சின் மோகன் பிபிசியிடம் கூறியதில் இருந்தே இந்த வழக்கில் காவல்துறை மற்றும் வழக்குப்பதிவின் மெத்தனப் போக்கை அறிந்து கொள்ளலாம். எஃப் ஐ ஆர் எழுதிய சலீம் சித்திகிக்கு, நீதிமன்றத்தால் மூன்று முறை அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பப்பட்டது, ஆனால் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை, அவரைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை.

ஆனால் நாங்கள் மலியானா கிராமத்தை அடைந்தபோது, சலீமின் வீட்டை எளிதாகக் கண்டுபிடித்தோம், அங்கு அவர் தனது குடும்பத்துடன் தான் வசிக்கிறார்.

நீதிமன்றத்தால் தனக்கு அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பப்படவில்லை என்று சலீம் கூறினார்.

சலீம் சிதிக்

மே 23, 1987 பற்றிக் கூறிய அவர், “பலர் காயமடைந்து டிபி நகர் காவல் நிலையத்தில் இருந்தனர். எனக்கு அப்போது 35 வயது. அப்போது தான் வழக்கறிஞர் பயிற்சி முடித்திருந்தேன். கிராமத்தில் ஹிந்தி படிக்கவும் எழுதவும் தெரிந்த, ஒரு சிலரில் நானும் ஒருவன். அதனால்தான் நான் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டேன். காயமடைந்து காவல் நிலையத்தில் இருந்தவர்கள் கூறிய பெயர்களைத் தான் நான் எழுதினேன். அந்த 93 பேரும் அப்படி எழுதப்பட்டது தான். அவர்கள் அனைவரையும் சேர்த்து ஒரு அறிக்கை தயார் செய்யப்பட்டது.” என்று நினைவு கூர்கிறார்.

வெளிவராத நீதி விசாரணை அறிக்கை

மே 27, 1987 அன்று, அப்போதைய உ.பி முதல்வர் வீர் பகதூர் சிங், மலியானா படுகொலை குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டார் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எல்.ஸ்ரீவஸ்தவாவுக்கு அறிக்கை தயாரிக்கும் பணி வழங்கப்பட்டது.

நீதிபதி ஸ்ரீவஸ்தவா, 84 நேரில் கண்ட சாட்சிகளின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு அறிக்கையைத் தயாரித்தார், ஆனால் அந்த அறிக்கை ஒருபோதும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேவில்லை, பகிரங்கமாக வெளியிடப்படவும் இல்லை.

வழக்கறிஞர் அலாவுதீன் சித்திக், மலியானா வழக்கில் அரசு வழக்கறிஞருடன் பணியாற்றி வந்தார்.

மலியானா வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பலவீனமாக இருப்பதால், அலாவுதீன் அவர்கள் சார்பாக பணம் இல்லாமல் வாதிட்டார்.

அலாவுதீன் சித்திக், நீதிபதி ஸ்ரீவஸ்தவாவுடன் அறிக்கை தயாரிக்கும் போது பணியாற்றினார்.

“நீதிபதி ஸ்ரீவத்சவாவின் அறிக்கையில் உள்ளவை இன்றுவரை நீதிமன்றத்தில் சொல்லப்படவில்லை அல்லது நிர்வாகத்தின் மூலம் முன்வைக்கப்படவில்லை” என்று அவர் கூறுகிறார்.

தற்போது நீதிபதி ஸ்ரீவஸ்தவா காலமாகிவிட்டதால் அப்போது நீதி விசாரணையில் அவர் கண்டறிந்தது என்ன என்பதை என்பதை யாராலும் வெளியிட முடியாது என்றும் சித்திக் கூறுகிறார். இப்போது,

மார்ச் 31 அன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, அலாவுதீன் சித்திக் நீதிமன்றத்தில் இல்லை. பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்து அரசு வழக்கறிஞர் மட்டும் ஆஜரானார்.

1987ஆம் ஆண்டு டெலிகிராஃபில் வெளியான செய்தி

இந்த முடிவு குறித்து சித்திக் கூறும்போது, “சாட்சிகளின் வாக்குமூலம் இன்னும் நிறைவடையவில்லை. ஆனால் நீதிமன்றம் திடீரெனத் தீர்ப்பு வழங்கியது. குற்றவியல் தண்டனைச் சட்டம் 313ன் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகக் கிடைத்த ஆதாரங்கள் குறித்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். அது இங்கு நடக்கவில்லை. இன்று தீர்ப்பை வழங்கும்போது, நீதிபதி அறிக்கைகள் மீது சந்தேகம் எழுப்பினார், ஆனால் அறிக்கைகள் வெளியிடப்பட்டபோது, கேள்வி எழுப்பப்படவில்லை” என்றார்.

“இதை எப்படி நிரூபிக்க முடியும் என்று அப்போது மட்டும் நீதிபதி வழக்கறிஞரிடம் ஏன் கேட்கவில்லை? நீதிமன்றத்தில் சாட்சியங்களை வைத்து ஆதாரங்களை நிரூபிக்க முடியவில்லை என்றால், அது யாருடைய தவறு என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்காகப் போராடும் அரசு வழக்கறிஞருக்கு, நீதிமன்றத்தில் தனது சாட்சிகளின் உண்மையை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இந்த வழக்கில் யாரும் தண்டிக்கப்படுவதை யாரும் விரும்பவில்லை.”

கொல்லப்பட்டவர்களின் கல்லறைகள்

பட மூலாதாரம், BBC/SERAJ ALI

அடையாள அணிவகுப்பு கூட நடக்கவில்லை

இவ்வாறான வழக்குகளில், குற்றச் செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளை, சாட்சிகள் முன்னிலையில் காவல் துறையினர் ஆஜர்படுத்துகின்றனர். பல நேரங்களில் சாட்சி, குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் தெரியாவிட்டால், அவரைப் பார்த்து அடையாளம் கண்டுகொள்கிறார்.

ஆனால் மலியானா படுகொலையை விசாரணை செய்யும் போது, அடையாள அணிவகுப்பு கூட நடத்தவில்லை காவல்துறை. முதன்முறையாக, சாட்சிகள் முன்னிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்தார். சாட்சிகளின் பலவீனத்திற்கு இதுவே காரணம் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

70 முஸ்லீம்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் 36 வருட கடினமான காலங்களுக்குப் பிறகு தங்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்று கைலாஷ் பாரதி நம்புகிறார்.

இந்த வழக்கில் கைலாஷ் பார்தி முக்கிய குற்றவாளி.

தொழிலில் வழக்கறிஞரான கைலாஷ் பார்தி தனது அறையில் கட்டிலில் அமர்ந்திருந்தார். எதிரில் சில பத்திரிக்கையாளர்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். வீட்டில் நிம்மதியான சூழல் நிலவியது.

கைலாஷ் பார்தி, “36 ஆண்டுகளாக நான் ஒரு கலவரக்காரன் என்று முத்திரை குத்தப்பட்டேன். என் மீது வழக்கு தொடரப்பட்டபோது எனக்கு 35 வயது. இடைப்பட்ட ஆண்டுகளில், என் பெண்ணின் திருமணத்துக்கு வரன் தேடும் போது, எங்கு சென்றாலும் அவமானத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுக்கு நீதி கிடைத்துள்ளது. யாருக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று எனக்குத் தெரியாது. ஆனால் எங்களுக்கு நீதி கிடைத்துள்ளது.” என்று மகிழ்ச்சியடைகிறார்.

கைலாஷ் பார்தி – முதன்மை குற்றவாளி என கூறப்பட்டவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், BBC/SERAJ ALI

கைலாஷ் பார்தியின் வழக்கறிஞர் சோட் லால் பன்சால் தனது கட்சிக்காரருக்கு நீதி கிடைத்ததாக நம்புகிறார், ஆனால் மலியானா முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் அவர் கருதுகிறார்.

“பி.ஏ.சி மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தால், பலன் ஏற்பட்டிருக்கலாம். காவல் துறையினர், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை எடுத்து எப்.ஐ.ஆரில் சேர்த்துள்ளனர். பிறகு எதை நிருபிக்க முடியும்? பலரின் 36 ஆண்டு வாழ்க்கை வீணானது. ” என்கிறார் அவர்.

எத்தனை பயங்கரமான காட்சி

மலியானாவில் பணியமர்த்தப்பட்ட பிஏசி நிறுவனம் ஆர்டி திரிபாதியின் தலைமையிலான 44வது பட்டாலியன் ஆகும்.

மே 29, 1987 அன்று, உ.பி.யின் அப்போதைய காங்கிரஸ் அரசு, ஆர்.டி. திரிபாதியை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது. ஆனால் ஆர்.டி. திரிபாதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதற்குப் பதில் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறும் வரை பல்வேறு பதவிகளில் இருந்தார்.

குர்பான் அலி என்ற ஒரு பத்திரிகையாளர், 1987 இல், மீரட்டில் மூன்று மாதங்கள் நீடித்த வகுப்புவாதக் கலவரங்களை விவரித்தார்.

தன் கண்ணால் கண்ட காட்சியை விவரிக்கும் அவர், “மலியானாவில் நடந்த படுகொலைகளுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு நான் அங்கு சென்றேன், நான் அந்த நாட்களில் ஒரு பத்திரிகையில் வேலை செய்தேன். கிராமம் முழுவதும் சுடுகாடு போல் இருந்தது. வீடுகள் எரிக்கப்பட்டு, விசித்திரமான அமைதி நிலவியது. அங்கங்கே ஓரிரு குழந்தைகள் வீடுகளுக்கு வெளியே அழுதுகொண்டிருந்தன. கல்லறை மணலின் ஈரம் கூடக் காயவில்லை. அங்கிருந்து திரும்பி வந்த பிறகும் பல மாதங்கள் மன உளைச்சலில் இருந்தேன். கண்களிலும் இதயத்திலும் இன்றும் பாரமாக அந்த நினைவுகள் அழுத்துகின்றன. இன்றும் பல முயற்சிகளுக்குப் பிறகும் அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியவில்லை.” என்று கூறுகிறார்.

“2021 ஆம் ஆண்டில், ஹாஷிம்புரா படுகொலை வழக்கில் பிஏசி ஜவான்கள் தண்டிக்கப்பட்டபோது, குர்பான் அலி, விபூதி நாராயண் ராய் மற்றும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான இஸ்மாயில் ஆகியோர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தனர். அதில், மலியானா படுகொலை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு(எஸ்ஐடி) அமைத்து விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்”

மலியானா படுகொலையில் இஸ்மாயில் தனது குடும்பத்தில் 11 பேரை இழந்தார்.

குர்பான் அலி, “இந்த மனுவுக்கு எதிராக உ.பி அரசு 800 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது, இது தொடர்பான எஃப்.ஐ.ஆர் காணாமல் போயிருந்ததாகவும் இப்போது அது கிடைத்து விசாரணை நடந்து வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தது” என்கிறார்.

ஆனால் தற்போது இந்த முடிவிற்கு பிறகு 36 வருடங்கள் பழமையான இந்த வழக்கில் மீண்டும் விசாரணையைத் தொடங்க முடியுமா? இப்போது மலியானா படுகொலைக்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படுமா?

குர்பான் அலி கூறுகிறார், “எல்லாவற்றுக்கும் மேலாக, அன்றைய தினம் எந்தெந்த அதிகாரிகள் பணியில் இருந்தார்கள் என்ற பதிவேடு பிஏசியிடம் இருக்கும். நீதி கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இதையெல்லாம் பதிவேட்டில் இருந்து எடுக்கலாம்.”

மறுபுறம், உ.பி காவல்துறையில் உயர் அதிகாரியாக இருந்த விபூதி நாராயண், இப்போது இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டாலும், இப்போதிருக்கும் சாட்சியங்களின் அடிப்படையில் மாறுபட்ட முடிவை வழங்குவது கடினம் என்றே கருதுகிறார்.

இஸ்லாமிய பெரியவர்

பட மூலாதாரம், BBC/SERAJ ALI

“36 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதாரங்களை சேகரிப்பது மிகவும் கடினம், மாநில அரசு தனது பொறுப்பை ஏற்று மக்களுக்கு சிறந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்பது என் கருத்து. “ என்று அவர் கூறுகிறார்.

வன்முறைக்குப் பிறகு, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து ரூ.20,000 இழப்பீடு வழங்கப்பட்டது.

இருப்பினும், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை விபூதி நாராயண் முழுமையாக நிராகரிக்கவில்லை.

அவர் ஜேர்மனியின் நியூரம்பெர்க் வழக்கின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, “நியூரம்பெர்க் வழக்கில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு யூதர்களைக் கொலை செய்த நாஜிக்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதைப் பார்த்தோம். ஆனால் கேள்வி நோக்கம் இருக்கிறதா என்பதே.” என்கிறார்.

ஆனால் இவர்கள், இந்த வன்முறையின் தாக்குதலுக்கு உள்ளாகி, தங்கள் கண்முன்னே தங்கள் அன்புக்குரியவர்கள் இறந்து கிடப்பதைப் பார்த்தார்கள், இப்போது அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எந்த அளவுக்கு இருக்கும்?

மே 23 அன்று பிற்பகலில் ரயீஸ் அகமது முகத்தின் இடது பக்கத்தில் சுடப்பட்டார்.

தாமதமானாலும் சரியான சிகிச்சை அவரைக் காப்பாற்றியது, ஆனால் கான்பூரிலிருந்து மீரட்டுக்கு 23 மே 1987 அன்று வந்து கொண்டிருந்த அவரது தந்தை வழியில் கலவரக்காரர்களால் அடித்துக்கொல்லப்பட்டார். இன்று வரை ரயீஸ் தனது தந்தையின் சடலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

“என் தந்தையின் இறுதி ஊர்வலம் நடக்கவில்லை. எல்லாருக்கும் இல்லை என்றாலும் ஒரு சிலருக்காவது தண்டனை கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால் எல்லாரையும் விடுவித்துவிட்டார்கள். இப்போது அரசும் நமக்கு ஆதரவாக இல்லை. இதில் எங்கிருந்து நீதியை எதிர்பார்க்க முடியும்?”

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »