Press "Enter" to skip to content

கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு தீர்மானம்: பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images

கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார். பட்டியலினத்தோருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்த அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்துவதாக அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தீர்மானம் குறித்து முதலமைச்சர் பேசியது என்ன?

இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு முன்பாக இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கான பின்னணி குறித்துப் பேசினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். “ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடரவே செய்கிறது. நமது நாட்டின் அரசியல் சட்டப்படி இந்து, சீக்கியர், பௌத்த மத்தைத் தவிர்த்த பிற மதங்களைச் சேர்ந்த யாரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராகக் கருதப்பட முடியாது. வரலாற்று ரீதியாகவே அவர்கள் ஆதி திராவிட வகுப்பினராக இருக்கும்போது, அவர்களுக்குப் பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரியானதாக இருக்கும். அதன் மூலமாகத்தான் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும்.

அதன் மூலமாக சமூகத்தில் அவர்களுக்கான உயர்வும் மேம்பாடும் கிடைக்கும். மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூகரீதியாக அவர்களுக்குத் தரப்பட்டு வந்த, அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அனுபவித்து வரும் உரிமைகளை இவர்களுக்குத் தர மறுப்பது சரியல்ல என்பதுதான் நமது நிலைப்பாடு.

மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் சாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல. இத்தகைய சாதி என்பது நீ வேறு; நான் வேறு என்பதாக இல்லாமல், நான் உயர்ந்தவன்; நீ தாழ்ந்தவன் என்ற முறையில் இருக்கிறது. அதாவது படுக்கைக் கோடாக இல்லாமல், செங்குத்துக் கோடாக இருக்கிறது. சாதிய ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம்.

அந்த வகையில் கிறித்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், அரசியல் சட்ட சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு. மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதெல்லாம், 1996, 2006, 2010, 2011 ஆகிய காலக்கட்டங்களில் இதே கோரிக்கையினை நிறைவேற்ற பிரதமருக்கு கடிதம் எழுதி தொடர்ந்து இதனை வலியுறுத்தியிருக்கிறார்.

“இடஒதுக்கீட்டை வழங்குவதே சரியான முறையாகும்”

stalin

பட மூலாதாரம், CMO Tamilnadu

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில். பட்டியலின மக்களுக்கு இணையாக கிறித்துவ ஆதிதிராவிடர்களும் சலுகைகள் பெறும் வகையில் அரசாணைகள் வெளியிட்டு உரிய பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இடஒதுக்கீடு நீங்கலாக மற்ற உரிமைகள் தரப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசால் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் அனைத்துக் கல்வி உதவித் தொகைத் திட்டங்களும் கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் இடஒதுக்கீட்டையும் வழங்குவதே சரியானதாகவும் முறையானதாகவும் இருக்கும் என்று நினைக்கிறோம்.

அரசியலமைப்பு (பட்டியலின சாதிகள்) திருத்த ஆணை 1950ன்படி, இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தைச் சேர்ந்த எவரும் அட்டவணை சாதிகளின் உறுப்பினராக ஆக முடியாது. ஆனால், 1956ஆம் ஆண்டு சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களையும் 1990ஆம் ஆண்டு பெளத்த மதத்தைப் பின்பற்றுபவர்களையும், பட்டியல் சாதியினராகச் சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. இதே போன்ற திருத்தத்தைத்தான் கிறித்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக ஆதி திராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறிவிடுகிறார்கள் என்றும் மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதிச் சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என்றும் மதம் மாறியவர்களுக்கு ஆதி திராவிடர் வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலிச் சான்றிதழ் என்றும் தேசிய ஆதி திராவிடர் ஆணையத் துணைத் தலைவர் கடந்த ஆண்டு சொல்லி இருந்தார்.

அப்போது பல்வேறு தரப்பினரும் இதற்குக் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆணையம் ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இந்தியா முழுமையும் சுற்றுப்பயணம் செய்து, அனைத்து மாநிலங்களின் கருத்தையும் பெற்ற பிறகே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள செய்தி என்ன?

இதற்குப் பிறகு தீர்மானத்தை முதலமைச்சர் வாசித்தார். “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைக் கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற, அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானம் குறித்து பெரும்பாலான கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தே பேசினார். பா.ஜ.கவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீநிவாஸன் பேசும்போது, இந்த விவகாரம் நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், அது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று கூறினார். பிறகு அவர் பேசிய சில வாசகங்கள் சட்டப்பேரவையின் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. இதையடுத்து அவர் வெளிநடப்புச் செய்தார்.

அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் பேசிய பிறகு, தீர்மானம் ஒரு மனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமா?

christian

பட மூலாதாரம், Getty Images

மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமா என்ற சர்ச்சை நீண்ட காலமாகவே இருக்கிறது. பல்வேறு தரப்பினர், மதம் மாறுவதால் ஒருவரது ஜாதி மாறிவிடுவதில்லை, ஆகவே இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பதுதான் பரவலான கருத்தாக இருக்கிறது.

“ஒருவர் மதம் மாறிய பிறகு, மூன்று விஷயங்கள் நடந்தால் அவர் அதே ஜாதியில்தான் இருக்கிறார். 1. மதம் மாறியவரின் ஜாதியைச் சேர்ந்தவர்கள், மதம் மாறினாலும் அந்த நபர் தன்னுடைய ஜாதிதான் என்று கருதவேண்டும். 2. மதம் மாறியவர், தான் அதே ஜாதியில் இருப்பதாகக் கருத வேண்டும். 3. ஒருவர் எந்த மதத்திற்கு மாறுகிறாரோ, அந்த மதம் அவர் அதே ஜாதியில் இருப்பதை அனுமதிக்க வேண்டும் (தென்னிந்தியாவிலும் வடகிழக்குப் பகுதியிலும் இது நடக்கிறது).

மற்றொரு பக்கம், ஒருவர் தான் மதம் மாறியதையே தெரிவிக்காமல் இருப்பதன் மூலமும் தனது ஜாதியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்” என தனது ‘தீஸ் சீட்ஸ் ஆர் முன்பதிவுட்’ (These Seats are Reserved) புத்தகத்தில் சுட்டிக்காட்டுகிறார் அபினவ் சந்திரசூத்.

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாக, கிறிஸ்தவர்களுக்கு என சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு அமலில் இருந்தது. ஆகவே, கிறிஸ்தவ மதத்திற்கு மாறும் பட்டியலினத்தவரும் அந்த இட ஒதுக்கீட்டைப் பெற முடிந்தது. இதன் காரணமாக, பட்டியலினத்தருக்கு மட்டும் எனத் தரப்பட்ட Depressed class இட ஒதுக்கீடு மதம் மாறிய பட்டியலினத்தவருக்கு கொடுக்கப்படவில்லை. பூனா ஒப்பந்தத்தின் போது, தங்களுக்கு சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு வேண்டாம்; தலித் கிறிஸ்தவர் இட ஒதுக்கீடு வேண்டும் என்றார்கள் கிறிஸ்தவர்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஒரு குடியரசுத் தலைவர் ஆணையின் மூலம் பட்டியலினத்தவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று வரையறுக்கப்பட்டது. இந்த ஆணை 1956ஆம் ஆண்டில் திருத்தப்பட்டு சீக்கிய மதமும் இணைக்கப்பட்டது. 1990ல் மீண்டும் திருத்தப்பட்டு பௌத்தமும் இணைக்கப்பட்டது.

எட்டப்படாத முடிவு

“1950களிலேயே கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. அதற்கு பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒப்புக்கொண்டார். ஆனால், குடியரசுத் தலைவர் ஆணை வரவில்லை. நீண்ட காலமாக கோரிக்கை வைத்தும் நடக்காததால், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென 2004ல் பிரசாந்த் பூஷண் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இணை மனுதாரராக பலரும் இணைந்தார்கள்.

இந்த வழக்கு நடந்துகொண்டிருந்தபோது, இந்த விவகாரத்தை ஆய்வுசெய்ய ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஆணையம் கூறியது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது.

இதற்குப் பிறகு உடனடியாக இது தொடர்பாக ஆணை வெளியிடப்பட வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதனைச் செய்யவில்லை. இதற்குப் பிறகு வந்த பா.ஜ.க. அரசு, ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க மாட்டோம் என்று கூறி, கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது. இதுவரை இந்த விவகாரத்தில் முடிவெடுக்கவில்லை.

தமிழ்நாட்டைப் போலவே தெலங்கானா, ஆந்திராவும் இதுபோல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. ஆகவே மத்திய அரசு உடனடியாக ஆதிதிராவிட கிறிஸ்தவர்களையும் ஆதிதிராவிடர்களாகக் கருத வேண்டும்” என்கிறார் இந்திய கத்தோலிக்க பிஷப் மாநாடு அமைப்பின் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான அலுவலகத்தின் முன்னாள் செயலர் தேவசகாயராஜ்.

மத்திய அரசு இப்போதைக்கு இது தொடர்பாக எதுவும் செய்யாது. மாநில அரசு ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிப்பதுதான் ஒரே தீர்வு என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.

“இப்போது அமைக்கப்பட்டுள்ள கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆணையத்தின் நோக்கமே, கிறிஸ்தவர்களைச் சேர்த்தால் ஏற்கனவே இருப்பவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை ஆராய்வதுதான். ஆகவே மத்திய அரசு இது விஷயமாக எதுவுமே செய்யப்போவதில்லை.

முதலில் கிறிஸ்தவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களில் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது நடைமுறைக்கு வந்தபோது, கிறிஸ்தவர்கள் ஒன்று சேர்ந்து உள் ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

இப்போது தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். கிறிஸ்தவ மக்கள் தொகையில் அவர்கள் குறைந்தது 30 சதவீதமாவது இருப்பார்கள். அதற்கேற்றபடி உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதனைச் சட்டமாக இயற்றாமல் அரசாணை மூலமே செய்யலாம்” என்கிறார் ரவிக்குமார்.

ஆனால், இதனைக் கடுமையாக எதிர்க்கிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி. “ஆதி திராவிட கிறிஸ்தவர்களில் தேவேந்திர குல வேளாளர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறோம். நாங்கள் எங்களுக்கு பட்டியலின இட ஒதுக்கீடே வேண்டாம் என்கிறோம். அப்படியிருக்கும்போது இதெல்லாம் தேவையில்லாத தீர்மானம். ஏற்கனவே முன்னேறியவர்களை பின்னிழுக்கும் தீர்மானம் இது. இதைக் கடுமையாக எதிர்க்கிறோம்” என்கிறார் கிருஷ்ணசாமி.

இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். தமிழ்நாட்டில் 6.12 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »