Press "Enter" to skip to content

“காஷ்மீர் பூஞ்சில் ராணுவ டிரக்கை இலக்கு வைத்த தீவிரவாதிகள்” – தாமதமாக ஒப்புக் கொண்ட இந்திய ராணுவம்

பட மூலாதாரம், ANI

ஜம்மு காஷ்மீரின்பூஞ்ச் மாவட்டத்தில் வியாழக்கிழமை ராணுவ டிரக் தீ பற்றிய எரிந்த சம்பவத்தை, சில மணி நேர தாமதத்துக்குப் பிறகு ‘தீவிரவாத தாக்குதல்’ என்று அறிவித்திருக்கிறது இந்திய ராணுவம்.

இந்த சம்பவத்தில் 5 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ள தகவலையும் ராணுவம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் காலியில் இருந்து சாங்கியோட் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ராணுவ டிரக் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் ராணுவ வாகனம் தீ பற்றி எரிந்ததாகவே கூறப்பட்டது. அதை தீவிரவாத தாக்குதல் சம்பவம் ஆக ராணுவமோ காவல்துறையோ தெரிவிக்கவில்லை.

இதனால் ஊடகங்களிலும் இந்த செய்தி பெரிதாக வெளிவரவில்லை.

இந்நிலையில், சம்பவ பகுதியை இந்திய ராணுவத்தினரும் உள்ளூர் போலீஸாரும் முத்திரை வைத்து நடத்திய விசாரணையில் ராணுவ வாகனம் தீக்கிரையானதற்கு தீவிரவாதிகளே காரணம் என்றும் அவர்கள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தின் ஆர்ஆர் எனப்படும் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் கொல்லப்பட்டதும் தெரிய வந்தது.

இதன் பிறகே நடந்த சம்பவம் தொடர்பான தகவலை ராணுவ தலைமையகம் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் மற்றொரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளார். சம்பவ பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ள அவர் ரஜெளரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ராணுவத்தின் வடக்கு கட்டளைப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று பிற்பகல் 3 மணியளவில் ரஜெளரி செக்டாரில் பிம்பர் காலி மற்றும் பூஞ்ச் இடையே சென்று கொண்டிருந்த ராணுவ டிரக் ஒன்று அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் சுடப்பட்டது. பலத்த அடைமழை (கனமழை) மற்றும் குறைவாக தென்படும் பாதை சூழலை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். வாகனம் பற்றி எரிய, தீவிரவாதள் கையெறி குண்டுகள் பயன்படுத்தியது காரணமாக இருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜெய்ஷ் ஆதரவு பயங்கரவாத குழுவான மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ நேரத்தில் ராணுவ வாகனத்தின் மீது 50 ரவுண்டுகள் சுடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இத்தகவலை பிபிசி தன்னிச்சையாக உறுதிப்படுத்தவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »