Press "Enter" to skip to content

ராகுலின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் – இனி என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி மீது 2019ஆம் ஆண்டில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கீழமை (மாஜிஸ்திரேட்) நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்திவைக்கக் கோரி அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சூரத் செஷன்ஸ் (அமர்வு) நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி விசாரித்தபோது இரு தரப்பு வாதங்களை கேட்ட செஷன்ஸ் நீதிமன்றம் அதன் தீர்ப்பை ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கூறியிருந்தது.

அதன்படி இன்று செஷன்ஸ் நீதிபதி ராபின் மொகேரா அளித்த தீர்ப்பில், ராகுலின் மனுவை தள்ளுபடி செய்வதற்கான பல்வேறு காரணங்களை விவரித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அடுத்து தங்களுக்குள்ள சட்ட வாய்ப்புகளை பயன்படுத்துவோம் என்று காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

“இன்றைய செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் தவறானது,” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

“மாஜிஸ்திரேட்டின் மிகவும் துரதிருஷ்டவசமான மற்றும் நீடிக்க முடியாத முடிவை அப்படியே செஷன்ஸ் நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது. சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மாறாக கீழமை நீதிமன்றத்தின் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

சூரத் செஷன்ஸ் நீதிமன்ற தீர்ப்பு குறித்து பிபிசியிடம் பேசிய ராகுலின் வழக்கறிஞர் கிரிட் பன்வாலா, ‘’தண்டனை மீதான மேல்முறையீடு முடிவடையும் வரை, ராகுல் காந்தி ஜாமீனில் இருப்பார், இந்த அவதூறு வழக்கில் அவர் கைது செய்யப்பட மாட்டார்’’ என்று கூறினார்.

இனி என்ன நடக்கலாம்?

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து ராகுல் காந்தி உடனடியாக கைது செய்யப்பட மாட்டார். அவருக்கான மேல்முறையீட்டு வாய்ப்பு அல்லது உரிமையை அவர் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

இரண்டு வருட தண்டனையைத் தொடர்ந்து ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கீழமை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு செஷன்ஸ் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் இனி அவர் அடுத்து நாட வேண்டியது குஜராத் உயர் நீதிமன்றத்தைத்தான். அவரால் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுக முடியாது.

அப்படியென்றால் உயர் நீதிமன்றம் அவரது மனுவை பரிசீலித்து விசாரணைக்கு ஏற்று தீர்ப்பு வழங்கும்வரை ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஆக இருக்க முடியாது. அவர் தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.பி ஆகவே கருதப்படுவார்.

அதே சமயம், முன்னாள் எம்.பி என்ற அந்தஸ்துடன் அவர் நாடாளுமன்ற வளாகத்துக்கு வரலாம், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தொடர் நடைபெறாத நாட்களில் மைய மண்டபத்துக்கும் நூலகத்துக்கும் சென்று வரலாம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் அவருக்கான எம்.பி சலுகைகளோ சம்பளமோ ராகுலுக்கு வழங்கப்படாது. மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தால் இந்த சலுகைகள், சம்பளம் போன்றவை அவருக்கு முன்தேதியிட்டு வழங்கப்படும்.

ஏப்ரல் 3ஆம் தேதி ராகுல் காந்தி சார்பில் அவரது வழக்கறிஞர் இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தார். ஒன்று கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது. மற்றொன்று தமது பிணை மனு மற்றும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பாக தண்டனையை நிறுத்தி வைக்கக் கோருவது. இதில் தண்டனை நிறுத்தி வைக்கக் கோரிய அவரது மனு தற்போது செஷன்ஸ் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதேசமயம், கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான ராகுலின் பிரதான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மே 20ஆம் தேதி தொடங்கும் என்று செஷன்ஸ் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய தனது மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக ராகுல் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் அல்லது கீழமை நீதிமன்ற தண்டனைக்கு எதிரான பிரதான மேல்முறையீட்டு மனு மீதான செஷன்ஸ் நீதிமன்ற விசாரணையில் தீவிரம் காட்டலாம். இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் ராகுல் கவனிக்கவும் வாய்ப்புள்ளது.

செஷன்ஸ் நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

“மேல்முறையீடு செய்தவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், இரண்டாவது பெரிய அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்தார். அத்தகைய நிலையைப் பார்க்கும்போது, அவர் தனது வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இது மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவரது வாயில் இருந்து வரும் எந்த அவதூறான வார்த்தைகளும், பாதிக்கப்பட்ட நபருக்கு மனவேதனையை ஏற்படுத்த போதுமானது என்ற புகார்தாரரின் வாதம் ஏற்கும்படியாக உள்ளது,” என்று நீதிபதி ராபின் மொகேரா தீர்ப்பில் கூறியுள்ளார்.

‘மோதி’ என்ற துணைப்பெயரை ஏன் எல்லா திருடர்களும் வைத்திருக்கிறார்கள் என்றவாறு ராகுல் பேசியிருப்பது, சமூக பணியில் ஈடுபடும் புகார்தாரருக்கு மன வேதனையையும், அவரது நற்பெயருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கும்,” என்றும் செஷன்ஸ் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தண்டனைக்கு எதிரான தடையை விதிப்பதற்கு அரிதான மற்றும் விதிவிலக்கான வழக்காக அது இருக்க வேண்டும். பொதுவாழ்வில் ஈடுபடும் நபர் அதில் ஏதேனும் தவறு செய்தால் அது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். வயநாடு தொகுதியில் நான்கு லட்சத்து முப்பத்துயோராயிரத்து எழுநூற்று எழுபது வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் தோல்வியுற்றிருக்கிறார். எனவே, வரலாற்றுபூர்வ வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வது, அவருக்கு சாதகமான சிறப்பு சூழலை உருவாக்காது என்று நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராகுல் காந்தி தமது மேல்முறையீட்டு உரிமையை பயன்படுத்தி தண்டனையை நிறுத்தி வைக்கக் கோர முடியாது. மாறாக, அது அத்தகைய முடிவை எடுப்பது, இந்த நீதிமன்றத்தின் அதிகார உரிமைக்கு உட்பட்டதாகும்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள ராகுல் காந்தி மீது இதேபோன்ற 12 குற்றங்கள் மேலும் நிலுவையில் உள்ளது. அதனால் அவர் அவதூறாக பேசுவதையும் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பவர் என்று புகார்தாரர் சார்பில் வாதிடப்பட்டுள்ளதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது.

இந்த வழக்கில் தனது தரப்பு வாதத்துக்கு ஆதரவாக நவ்ஜோத் சிங் சித்து வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மேற்கோள்காட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த வழக்கில் நவ்ஜோத் சித்து தமது பதவியை தார்மீக அடிப்படையில் ராஜிநாமா செய்து ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தினார். ராகுலின் வழக்கில் உள்ள தன்மைகள் வெவ்வேறானவை என்று நீதிபதி ராபின் மொகேரா குறிப்பிட்டார்.

இவற்றின் அடிப்படையில் ராகுலின் மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக நீதிபதி ராபின் மொகேரா கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »