Press "Enter" to skip to content

சத்யபால் மாலிக்குக்கு சிபிஐ அறிவிப்பு – “சிலரது பாவங்களை அம்பலப்படுத்தினேன், பயப்பட மாட்டேன்”

பட மூலாதாரம், Getty Images

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காப்பீடு ஊழல் தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் குறித்து விளக்கம் தேவைப்படுவதால் அது தொடர்பான விசாரணைக்கு வரும்படி அவருக்கு இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ அறிவிப்பு அனுப்பியுள்ளது.

சமீபத்தில் அவர் த வயர் செய்தி இணையதளத்துக்கு அளித்த நேர்காணலில் பல்வேறு தகவல்களை பகிர்ந்திருந்தார். அதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தனியார் நிறுவன ஊழல் முறைகேடு தொடர்பான தகவல்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், “சில தெளிவுபடுத்தல்களுக்காக” அக்பர் சாலையில் உள்ள சிபிஐ விருந்தினர் மாளிகைக்கு வரும்படி தன்னை சிபிஐ கேட்டுக் கொண்டுள்ளது என்று சத்யபால் மாலிக் பிடிஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து சில சத்யபால் மாலிக் த வயர் செய்தி இணையதளத்துக்கு அளித்த நேர்காணல் காரணமாக அவர் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். காரணம், அந்த தாக்குதல் விவகாரத்தில் அவரை அமைதி காக்கும்படி பிரதமர் மோதி கூறியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரலில், ஜம்மு-காஷ்மீரில் கிரு நீர்மின்சார திட்டத்துடன் தொடர்புடைய அரசு ஊழியர்களுக்கான குழு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் மற்றும் ₹2,200 கோடி மதிப்பிலான சிவில் பணிக்கான ஒப்பந்தங்களை வழங்கியதில் ஊழல் முறைகேடு நடந்ததாக சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக சிபிஐ இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை ஏற்கெனவே பதிவு செய்து விசாரித்து வருகிறது.

சத்யபால் மாலிக் முன்பு ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது இரண்டு கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். அரசு ஊழியர்களுக்கான குழு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்கான கோப்புகள் அவை. இந்த விவகாரத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜெனரல் காப்பீடு நிறுவனம் மற்றும் டிரினிட்டி ரீ-காப்பீடு ப்ரோக்கர்ஸ் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

முன்னதாக வெள்ளிக்கிழமை மாலையில், சிபிஐ சம்மனுக்கு பதிலளித்த மாலிக் ஒரு ட்வீட்டில், “உண்மையைப் பேசியதன் மூலம் சிலரின் பாவங்களை நான் அம்பலப்படுத்திவிட்டேன். நான் ஒரு விவசாயியின் மகன். பயப்பட மாட்டேன். நான் உண்மையின் பக்கம் நிற்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, சத்யபால் மாலிக்கின் செயல்பாடுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

செய்தி சேனல்கள் முதல் நாளழிதழ்களின் தலைப்புச் செய்திகள் வரை… ஃபேஸ்புக் முதல் ட்விட்டர் வரை.

கடந்த பல நாட்களாக, பெருமளவில் பேசுபொருளாகியிருப்பது ஒரு செய்தி. அது பிரயாக்ராஜ் அதீக் கொலை வழக்கு.

ஆனால் இதைத் தவிர, அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாகக் கூர்ந்து நோக்கப்படுவது ஒரு நேர்காணல். இருப்பினும், இந்தச் செய்தி நாட்டின் முக்கிய செய்தித்தாள்கள் மற்றும் முக்கிய ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியது.

இதை வைத்துக்கொண்டு, மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசு குறித்துக் கேள்வி எழுப்பும் பணியில் எதிர்க்கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இதுவரை 35 லட்சத்திற்கும் அதிகமானோர் சத்யபால் மாலிக் அளித்த பேட்டியை யூடியூப்பில் பார்த்துள்ளனர்.

நான்கு மாநிலங்களின் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், ‘த வயர்’ என்ற செய்தி இணையதளத்தின் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு இந்தப் பேட்டியை அளித்துள்ளார்.

அதில், புல்வாமா தாக்குதலுக்கு மத்திய அரசைக் குற்றம்சாட்டிய சத்யபால் மாலிக், ஊழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக நேரடியாகப் பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், பல முக்கிய பதவிகளில் இருப்பவருமான ஒருவர், பிரதமரை நேரடியாகத் தாக்குவது இதுவே முதல் முறை.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பாரதிய ஜனதா கட்சி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், இந்தப் பேட்டிக்குப் பிறகு சத்யபால் மாலிக் மீதும் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

சத்யபால் மாலிக்கின் அறிக்கைகள் சலசலப்பு ஏற்படுத்துவது இது முதல் முறையன்று. இதற்கு முன்பும் கூட, அவரது அறிக்கைகளால் அவர் சார்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சியே சங்கடங்களைச் சந்தித்த சந்தர்ப்பங்கள் அதிகம்.

அரசியல் பயணத்தில் பல கட்சிகள் தாவல்

சத்யபால் மாலிக், அஜித் தோவல்

பட மூலாதாரம், Getty Images

சத்யபால் மாலிக் தன்னை ‘லோஹியாவாதி’ என்று அழைத்துக் கொள்கிறார். லோஹியாவின் சோஷலிசத்தால் ஈர்க்கப்பட்ட அவர், மீரட் கல்லூரி மாணவர் சங்கத்தில் மாணவர் தலைவராகத் தம் பயணத்தைத் தொடங்கினார்.

1946 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி உத்தரப்பிரதேசம், பாக்பத்தில் உள்ள ஹிசாவதா கிராமத்தில் பிறந்தார். அவர் தனது இரண்டு வயதில் தந்தையை இழந்துவிட்டதாகக் கூறுகிறார்.

சத்யபால் மாலிக்கை அரசியலுக்குக் கொண்டுவரும் பணியை சௌத்ரி சரண் சிங் செய்ததாக மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி கூறுகிறார். 1974 இல், சௌத்ரி சரண் சிங்கின் பாரதிய கிராந்தி தளத்தின் சார்பில், பாக்பத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 28 வயதில் சட்டமன்ற உறுப்பினரானார்.

முதல் சட்டமன்றத் தேர்தலில் சத்யபால் மாலிக் சுமார் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

1980 இல், அவர் லோக் தளம் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினரானார். ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர், எந்தக் கட்சியின் அவசரநிலையை எதிர்த்துச் சிறை சென்றாரோ அதே காங்கிரஸில் சேர்ந்தார்.

1987 இல், ராஜீவ் காந்தி போஃபர்ஸ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டார், அதற்கு எதிராக வி.பி. சிங் ஒரு முன்னணியைத் தொடங்கினார். அவருக்கு சத்யபால் மாலிக் ஆதரவளித்தார். காங்கிரசை விட்டு வெளியேறிய சத்யபால் மாலிக், ஜன் மோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கினார். 1988ல் அக்கட்சியை ஜனதா தளத்துடன் இணைத்தார்.

1989 இல், நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. சத்யபால் மாலிக் உ.பி.யின் அலிகார் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1996ல் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து அலிகார் தொகுதியில் போட்டியிட்டார்.

மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி, “ஒரு ஜாட் தலைவராக இருந்த சத்யபால் அலிகாரில், வெறும் நாற்பதாயிரம் வாக்குகள் பெற்று, நான்காவது இடத்தைப் பிடித்துப் படுதோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற வேட்பாளர் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் வாக்குகள் பெற்றார். இதன் மூலம் ஜாட் தலைவராக சத்யபால் செல்வாக்கை இழந்ததாக கருதப்பட்ட தேர்தல் ஆக அது ஆனது,” என்கிறார்.

மோதி மீதான தீவிர குற்றச்சாட்டு

சத்யபால் மாலிக்

பட மூலாதாரம், @SATYAPALMALIK6

சத்யபால் மாலிக் பல ஆண்டுகளாக அரசாங்கத்துடன் ஒத்துப்போகாமல் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்து வந்த நிலையில், ஏப்ரல் 14 அன்று த வயர் என்ற செய்தி இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், மத்திய பாஜக அரசுக்கு மட்டுமல்ல, பிரதமருக்கும் சிக்கலை உருவாக்கக்கூடிய சில சம்பவங்களை விரிவாக விவரித்தார்.

14 பிப்ரவரி 2019 அன்று, ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் சி ஆர் பி எஃப் -ன் 70 பேருந்துகளின் தொடரணியில் ஒரு பேருந்தின் மீது வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் மோதியது. இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று சத்யபால் மாலிக் இப்போது குற்றம் சாட்டியுள்ளார். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் செல்ல, சி ஆர் பி எஃப்-க்கு ஐந்து விமானங்கள் தேவைப்பட்டன என்றும் அதைத் தாம் உள்துறை அமைச்சகத்திடம் கோரியதாகவும் ஆனால் விமானங்கள் வழப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். விமானம் மூலம் சென்றிருந்தால், இந்தச் சாலை வழித் தாக்குதல் நடந்திருக்காது என்பது அவரது வாதம்.

சத்யபால் மாலிக் பேட்டியில் கூறியதாவது: “இந்த தகவலைப் பிரதமரிடம் கூறி, குற்றத்தைச் சுட்டிகாட்டியதும் பிரதமர் இது குறித்து அமைதி காக்கும்படி எனக்கு அறிவுறுத்தினார்”

பிப்ரவரி 17 அன்று, தைனிக் பாஸ்கர் நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரியும் தனது செய்தியறிக்கையில் இதைக் குறிப்பிட்டிருந்தார்.

அதில் அவர், “பிப்ரவரி 4 முதலே, பனிப்பொழிவு காரணமாக ஜம்முவில் சிக்கித் தவிக்கும் சிஆர்பிஎஃப் வீரர்கள் விமானம் மூலம் ஸ்ரீநகர் செல்ல அனுமதி கோரப்பட்டது. சிஆர்பிஎஃப் இந்தக் கோரிக்கையைத் தலைமையகத்திற்கு அனுப்பியது.

அங்கிருந்து அது உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது, ஆனால் எந்தப் பதிலும் கிடைக்காததால், சிஆர்பிஎஃப் கான்வாய் பிப்ரவரி 14 அன்று பிற்பகல் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்குப் பேருந்தில் புறப்பட்டு 3.15 மணிக்கு பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொண்டது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்துக் கருத்து தெரிவித்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி, “புல்வாமா சம்பவத்தின் போது சத்யபால் மாலிக் துணிச்சலுடன் செயல்பட்டு இதையெல்லாம் வெளிப்படுத்தியிருந்தால், வி.பி.சிங் போல ஒரு சக்தியாக உருவாகியிருப்பார். ஆனால் இரண்டு தலைவர்களின் ஆணைகளை வாய் மூடி மௌனியாக ஏற்றுச் செயல்பட்டதன் விலையை நாடு இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.” என்றார்.

மேலும் அவர், “புல்வாமா தாக்குதலின் போது, இணைக்கும் சாலையில், ஜவான்கள் நிறுத்தப்படவில்லை என்று அவர் கூறுகிறார். அப்போது காவல்துறை அவர் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அவருக்கு ஏன் இது தெரியவில்லை? தெரிந்திருந்தால் என்ன நடவடிக்கை எடுத்தார்? அதன் மீது என்ன விசாரணையை ஏற்பாடு செய்தார்?” என்று அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார்.

‘பாகிஸ்தான் மீது குற்றச்சாடு மடை மாற்றம்’

“இந்தப் பழி அனைத்தும் பாகிஸ்தானை நோக்கிச் செல்ல வேண்டும், எனவே அமைதியாக இருங்கள்” என்றார்.

11 நாட்களுக்குப் பிறகு, புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத அமைப்பின் ‘பயிற்சி முகாம்கள்’ மீது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி, தொடர் ‘செங்குறித் தாக்குதல் (சர்ஜிக்கல் வேலை நிறுத்தத்ம்)’ நடத்தியதாக இந்திய அரசு கூறியது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது ஏப்ரல் 2019 இல், நாட்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், பாலகோட் தாக்குதலை ஒரு முக்கிய தேர்தல் பிரச்சார ஆயுதமாக மாற்றியது பாஜக. பாலகோட் தாக்குதல் குறித்த பிரச்சாரம் வலுவடைந்தது.

மே 2019 இல் பொதுத் தேர்தல் முடிவுகள் வந்தபோது, பாரதிய ஜனதா கட்சி, மீண்டும் வெற்றி பெற்று, 300 தொகுதிகள் என்ற இலக்கையும் தாண்டி, பெரும்பான்மையுடன் மத்தியில் தனது அரசாங்கத்தை அமைத்தது.

தனது பேட்டியின் போது சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதலை பாரதிய ஜனதா கட்சி தேர்தலுக்குப் பயன்படுத்திக் கொண்டது என்று பூடகமாகக் குறிப்பிட்டார்.

படகு

பட மூலாதாரம், Getty Images

தொலைநோக்கு பார்வை குறைவு

2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி, மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை நீக்கியது.

முந்தைய தினம் தான் இவ்வளவு பெரிய முடிவு அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. “எனக்கு எதுவும் தெரியாது, ஒரு நாள் முன்னர், மாலை உள்துறை அமைச்சரிடமிருந்து ‘சத்யபால், நான் ஒரு கடிதம் அனுப்புகிறேன், அதற்கு உங்கள் குழுயில் ஒப்புதல் பெற்றுக் காலை11 மணிக்கு முன் அனுப்பவும்’ என்று எனக்கு அழைப்பு வந்தது.” என்று அவர் நினைவு கூர்ந்தார்.

மூத்த அரசியல் பத்திரிகையாளர் அஜோய் ஆஷிர்வாத் கூறுகையில், “சத்யபால் மாலிக்கின் குற்றச்சாட்டுகள் ஒருதலைப்பட்சமானது, ஆனால் மத்திய அரசின் வெளிப்படைத்தன்மையற்ற அணுகுமுறை கவலை அளிக்கிறது. அவர்கள் தங்கள் மூத்த தலைவருக்குத் தகவல் தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்துள்ளனர்.” என்றார்.

ஊழல் குறித்துப் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் மற்றும் கோவா கவர்னராக இருந்தபோது, பிரதமரிடம் பலமுறை ஊழல் பிரச்னையை எழுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

பிரதமருக்கு நெருக்கமானவர்கள் ஜம்மு காஷ்மீரில் இடைத் தரகர் வேலையைத் தன்னிடம் கொண்டு வந்ததாகவும் அதில் தனக்கு ரூ.300 கோடி தருவதாகக் கூறியதாகவும் சத்யபால் மாலிக் கூறினார். இதற்கு உடன்பட மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

சத்யபால் மாலிக், “பிரதமருக்கு ஊழல் குறித்த எந்த வெறுப்பும் இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார்.

மூத்த அரசியல் பத்திரிகையாளர் அஜோய் ஆஷிர்வாத், “இவை பாஜக மூத்த தலைவர் ஒருவரால் கூறப்படும் கடுமையான குற்றச்சாட்டுகள். நிர்வாக அமைப்பின் அங்கமாக நான்கு மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்தவர் அவர். ஐரோப்பாவில் இப்படி ஒரு பேட்டி வந்திருந்தால், பிரதமர் ராஜிநாமா செய்திருப்பார்.” என்று கூறினார்.

மறுபுறம், மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி, “சத்யபால் மாலிக் இதை அதிகாரபூர்வமாகப் பதிவு செய்திருக்க வேண்டும். அவர் அதைச் செய்யவில்லை.” என்று குற்றம்சாட்டுகிறார்.

சத்யபால் மாலிக்

பட மூலாதாரம், @SATYAPALMALIK6

சர்ச்சை கருத்து தெரிவிப்பது புதிதல்ல

22 ஆகஸ்ட் 2022- அப்போது சத்யபால் மாலிக் மேகாலயா ஆளுநராக இருந்தார்.

பாக்பத், கேக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்ட வேளாண் தொழிலாளர் கூட்டத்தில், “டெல்லியின் எல்லையில் 700 விவசாயிகள் இறந்துள்ளனர், ஒரு நாய்க்குட்டி இறந்தால் கூட இரங்கல் செய்தி வெளியிடும் பிரதமர், 700 விவசாயிகளின் இறப்புக்கு ஒரு இரங்கல் செய்தி வெளியிடவில்லை.

அவருக்கு விவரம் புரியக் கால தாமதம் ஆனது. அதன் பிறகு மன்னிப்பு கோரி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றார். ஆனாலும் அவரது செயலில் ஒரு நேர்மை இல்லை” என்று உரையாற்றினார்.

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

ஜனவரி 2022- “விவசாயிகள் விஷயத்தில் பிரதமரைச் சந்திக்கச் சென்றபோது, ஐந்து நிமிடங்களில் வாக்குவாதம் தொடங்கிவிட்டது. எங்கள் தரப்பில் ஐநூறு பேர் இறந்துவிட்டார்கள் என்று நான் அவரிடம் சொன்னபோது அவர் மிகவும் ஆணவத்துடன் இருந்தார்.

“ஒரு நாய்க்குட்டி இறந்தால் கூட இரங்கல் செய்தி அனுப்புகிறீர்களே என்று நான் கேட்டபோது, எனக்காகவா இறந்தார்கள் என்றார். அவர்களால் தானே அரசு நடத்துகிறீர்கள் என்று நான் கேட்டேன். அவர் என்னை அமித்ஷாவைச் சந்திக்கச் சொன்னார். நான் அமித் ஷாவைச் சந்தித்தேன். மக்கள் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருங்கள். ஒரு நாள் புரியும் என்றார்.” என்று அவர் பேசினார்.

ஆனால், இறுதியில் தனது கருத்தைத் திரும்பப் பெற்றார்.

கரண் தாபருடனான நேர்காணலில் கூட, “அமித் ஷா குறித்த விஷயம் நான் முற்றிலும் தவறாகக் கூறியுள்ளேன். அவர் அப்படி எதுவும் கூறவில்லை. எனது பேச்சை நான் திரும்பப் பெறுகிறேன். அது என் தவறு” என்று அவர் மீண்டும் மீண்டும் கூறினார்.

ஜனவரி 2019- “ஜம்மு-காஷ்மீரும் நாட்டின் மற்ற மாநிலங்களைப் போல் தான். இங்கு ஆணவக் கொலைகள் நடக்கவில்லை. இங்கு ஒரு வாரத்தில் எத்தனை மரணங்கள் நடக்கின்றனவோ, அத்தனை கொலைகள் பாட்னாவில் ஒரு நாளில் நடக்கின்றன. இப்போது காஷ்மீரில் கல் வீச்சு மற்றும் பயங்கரவாத அமைப்புகளில் சேர்வதை இளைஞர்கள் நிறுத்திவிட்டார்கள்.”

“இங்குள்ள சிறுவர்கள் ஆயுதங்களுடன் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள், மாநிலக் காவல்துறையினரைக் கொல்கிறார்கள். ஏன் அவர்களைத் தாக்குகிறீர்கள். கொல்ல வேண்டும் என்றால் உங்கள் நாட்டையும் காஷ்மீரையும் சூறையாடியவர்களைக் கொல்லுங்கள். அப்படிப்பட்டவரைக் கொன்றதுண்டா?”

ஜூன் 2022-ல் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக

“அக்னிபத் திட்டம் நமது ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் வகையில் தான் அமையும். அது அவர்களின் வாழ்க்கையை முடித்துவிடும். நான்கு ஆண்டுகளில் ஆறு மாதங்கள் பயிற்சி அளிப்பார்கள். ஆறு மாதங்கள் விடுமுறையில் இருப்பார்கள். மூணு ஆண்டுகள் மட்டும் வேலை செய்துவிட்டு அதன் பிறகு எங்கு செல்வார்கள்? திருமணமும் ஆகியிருக்காது. அவர்களுக்கு நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்யும் உணர்வு எப்படி வரும். இது மிகவும் தவறான திட்டம், இதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று கூறியிருந்தார்.

மார்ச், 2020- மது அருந்துகிறார் ஆளுநர்

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் நகருக்கு வருகை தந்து ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “ஆளுநருக்கு வேலை இல்லை, காஷ்மீரில் உள்ள ஆளுநர் மது அருந்திவிட்டு கோல்ப் விளையாடுகிறார்,” என்றார்.

தாக்குதலுக்கு என்ன காரணம்?

சத்யபால் மாலிக்கின் அரசியலை உன்னிப்பாக அவதானிப்பவர்கள், அவர் மிகவும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்றும், மனதில் பட்டதைச் சொல்லக்கூடியவர் என்றும் கூறுகிறார்கள்.

மூத்த பத்திரிகையாளர் அஜோய் ஆஷிர்வாத், “அவர் ஒளிக்கருவி (கேமரா) முன்னிலையில் கருத்து கூறுவது இது முதல் முறையன்று. கோவா ஆளுநராகப் பதவியில் இருந்தபோதே, ஊழல் பிரச்னையை எழுப்பினார்” என்கிறார்.

மறுபுறம், மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி, “இன்று தகவலறியும் உரிமையுள்ள காலம். சத்யபால் மாலிக் பதவியில் இருந்தபோது, அவர் இந்த விஷயங்களை எங்காவது பதிவு செய்திருக்கலாம். வரும் காலங்களில் அவரிடம் விசாரணை செய்திருக்கலாம், ஆனால் அப்படி ஒரு முறை கூடச் செய்யவில்லை. 300 கோடி ரூபாய் ஊழல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தபோது, அந்த நபர்களை அவர் அங்கேயே கைது செய்திருக்கலாம்.” என்று கூறுகிறார்.

“ஊழலுக்கு எதிராக அவர் போராட வேண்டும் என்று அவர் விரும்பியதாகத் தான் நான் கருதுகிறேன். ஆனால் யாரும் அவரது பேச்சைப் பொருட்படுத்தவில்லை. ராஜ் பவனில் ஏற்பட்ட தலையீட்டால் அவருக்கு அந்தப் பதவியின் மீதே ஆசை போய்விட்டது.” என்று மேலும் அவர் தெரிவிக்கிறார்.

சத்யபால் மாலிக்கின் செல்வாக்கு

சத்யபால் மாலிக், ஜாட் சமூகத்தினரும் ஏராளமான விவசாயிகளும் தனக்குப் பின்னால் நிற்கிறார்கள் என்றும், பாஜக தனக்கு இடையூறு செய்தால், கட்சி அழிந்துவிடும் என்றும் கூறுகிறார்.

அது உண்மையா? மேற்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சத்யபால் மாலிக், களத்தில் எந்த அளவுக்குச் செல்வாக்கு பெற்றிருக்கிறார்?

இது குறித்து, மூத்த பத்திரிகையாளர் பிரிஜேஷ் சுக்லா கூறுகையில், “விவசாயிகள் போராட்டத்தின் போது, மேற்கு உத்தரபிரதேசத்தில் பெரிய அளவில் மறுசீரமைப்பு நடக்கும் என்று அவர் கூறியிருந்தார், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, சமாஜ்வாதி கட்சிக்கும் விவசாயிகளின் கட்சி என்று அறியப்பட்ட ராஷ்ட்ரிய லோக்தள் கட்சிக்கும் இடையே வலுவான கூட்டணி இருந்தது” என்கிறார்.

மேலும் அவர், “சத்யபால் மாலிக் தன்னை ஒரு ஜாட் மற்றும் விவசாயிகள் தலைவர் என்று அடையாளப் படுத்திக் கொள்கிறார்.” என்று கூறுகிறார்.

சத்யபால் மாலிக் ஆர்எல்டியின் உதவியின்றி பாக்பத்தில் போட்டியிட்டால் அவருக்குச் சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்.

மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் அத்ரி, “அவரது உரையை மக்கள் நிச்சயம் கேட்பார்கள், ஆனால், அவையனைத்தும் வாக்குகளாக மாறுவது கடினம்” என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »