Press "Enter" to skip to content

12 மணி நேர வேலை அமலுக்கு வந்தால் பெண்களின் பணியிட பங்கேற்பு குறையுமா? – ஓர் அலசல்

பட மூலாதாரம், Getty Images

32 வயதான செல்வி ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

தமிழ்நாடு அரசு, தனியார் நிறுவனங்களில் தினமும் 12 மணிநேர வேலை செய்வதற்கான சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளதால், தனது வேலை நேரமும் அதிகரிக்குமோ என்ற அச்சஉணர்வில் இருப்பதாக கூறுகிறார்.

”வீட்டில் இருந்து ஆலைக்கு வந்து சேருவதற்கு 1.5 மணி நேரம் ஆகும் என்பதால், காலை 7 மணிக்கு கிளம்புவேன். என் குழந்தைகள் தூக்கத்தில் இருந்து எழும்போது வீட்டில் இருந்து கிளம்புவேன். 12 மணி நேர வேலை என்ற திருத்தம் அமல்படுத்தப்பட்டால், அவர்கள் விழிக்கும் முன்பே நான் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும்.

மீண்டும் அவர்கள் உறங்கிய பின்னர்தான் நான் வீட்டுக்கு செல்ல முடியும்,” என்று வேதனையுடன் பேசுகிறார் செல்வி.

தினமும் போரூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் வேலைக்குச் சென்று வரும் செல்வி, 12 மணிநேர வேலை என்ற முடிவை தனது பணியிடத்தில் செயல்படுத்தினால், வேலைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டிவரும் என்கிறார்.

ஒரு வாரத்தில்,நான்கு நாட்கள் 12 மணிநேரம் வேலை, மூன்று நாட்கள் ஓய்வு என்ற முறையில் ஆலை செயல்பட்டால் குடும்பத்துடன் செலவிடும் நேரம் மிகவும் குறைந்து விடும் என்கிறார் செல்வி.

”தற்போது காலை 8:30மணிக்கு வேலை தொடங்கி 4:30மணிக்கு வேலை முடித்து மாலை ஆறு மணிக்கு நான் வீடு திரும்புகிறேன். 12 மணி வேலை என்றால் நான் வீடு திரும்ப இரவு 10 மணி ஆகிவிடும்.

என்னால் என் இரண்டு குழந்தைகளை கவனிக்கமுடியாது. கடுமையான வேலை செய்துவிட்டு வந்து வீட்டில் எந்த வேலையும் செய்யமுடியாது. ஐந்து லட்சம் கடன் இருப்பதால்தான் பலசிக்கல்கலுக்கு மத்தியில் இந்த வேலைக்குப் போகிறேன்.

ஆனால் 12 மணி வேலை எங்களைப் போன்ற ஏழ்மை நிறைந்த குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு ஒரு சாபம்தான். வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனிப்பது என எந்த வேலையையும் சரியாக செய்யமுடியாது,” என்கிறார் செல்வி.

மூன்று நாட்கள் ஓய்வு பற்றி கேட்டபோது, ”வாரத்தில் ஐந்து நாட்களுக்கு என் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று விடுவார்கள். இந்த மூன்று நாள் விடுப்பு என்பதை உண்மையாக எல்லா நிறுவனங்களிலும் செயல்படுத்துவார்களா என்று நம்பமுடியாது.

அதனால், குடும்பத்துடன் செலவிடும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும். உடல் நலன் மோசமாகும்,”என்கிறார் செல்வி.

மாதவிடாய் காலங்களில் 12 மணிநேரம் தொடர்ந்து வேலைசெய்வதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்கிறார் செல்வி. ”பணியிடங்களில் மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை என்ற ஒன்றை அரசாங்கம் கொண்டுவந்தால் எத்தனை பெண்களின் வலி குறையும் தெரியுமா? தொடர்ந்து 12 மணிநேரம் நாங்கள் வேலை செய்தால், நடைப்பிணமாகதான் வாழவேண்டியிருக்கும்,”என்கிறார் அவர்.

வறுமை காரணமாக ஓய்வைத் தள்ளிப்போடும் பெண்

12 மணி நேர வேலை, பெண்கள், தமிழ்நாடு, தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

22 வயதான சியாமளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)அதீதமான மூட்டு வலி மற்றும் கால்வலிக்கு சிகிச்சை எடுத்துவருகிறார்.

காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை செய்துவரும் சியாமளா, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குடும்ப வறுமை காரணமாக பணிச்சுமைக்கு மத்தியில் வேலைசெய்துவருகிறார்.

தற்போது தமிழ்நாடு அரசாங்கம் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தினமும் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளதால், அது செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில், தன்னைப் போன்ற ஆயிரக்கணக்காக பெண்களின் உடல் மற்றும் மனநிலை மிகவும் மோசமானதாகிவிடும் என்று வருந்துகிறார்.

”எட்டு மணிநேர வேலை என்று இருக்கும்போதே அதிக பணிச்சுமையில் தவிக்கிறோம். தற்போது அரசாங்கமே 12 மணிநேர வேலையை உறுதி செய்துள்ளது என்பதால், எங்களின் உடல்நிலை இளவயதிலேயே மோசமாகிவிடும்.

நாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்குப் பயணம் செய்து வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும். விடுதியில் உள்ள உணவும் தரமானதாக இல்லை. ஓய்வு எடுக்கும் நேரமும் குறையும் என்பதால், இளவயதில் எங்களுக்கு உடல்சோர்வு மற்றும் மனச்சோர்வு ஏற்படும்,”என்கிறார் சியாமளா.

தனக்கு ஏற்பட்டுள்ள கால்வலி பற்றி பேசும்போது, ”காலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லை என்பதால், கீழ் பாதம் கருப்பு நிறமாகிவிட்டது. சிகிச்சைக்குச் சென்றபோது, ஓய்வு கட்டாயம் தேவை என்று மருத்துவர் சொன்னாலும், இந்த வேலையில் எனக்கு கிடைக்கும் ரூ.15,000 சம்பளத்திற்காக நான் ஓய்வு எடுக்கவில்லை.

ஆனால் எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தினால், இந்த நிலைமை இன்னும் மோசமாகும். ஒரு வாரத்தில் 48 மணிநேரம் வேலை ஆனால் நான்கு நாட்களில் அந்த 48 மணிநேரத்திற்கான வேலையை வாங்கிக்கொள்கிறோம் என்கிறார்கள்.

12 மணி நேர வேலை, பெண்கள், தமிழ்நாடு, தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

எங்களை போன்ற ஏழை தொழிலாளர்களின் உடல்நலனை பற்றிய அக்கறை யாருக்கும் இல்லை. இயந்திரங்களுடன் வேலை செய்யும் இயந்திரமாகிவிடுவோம் நாங்கள்,”என்கிறார் சியாமளா.

சியாமளா பணிபுரியும் ஆலையில் , சுமார் 10,000 மேற்பட்ட பெண்கள் வேலைசெய்வதாகவும், தொழிற்சங்கம் அமைக்கமுடியாது என்றும் கூறுகிறார். ”தொழிலாளர் நலக் குழு என்ற குழு இருந்தாலும், அதில் நிறுவனத்திற்குச் சாதகமான நபர்கள்தான் அந்த குழுவில் இருக்கிறார்கள். அதனால், 12 மணி நேர வேலை ஆபத்தானது.

குறைந்தபட்சம் ஓவர் டைம் வேலை பார்த்தால், அதற்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும். ஆனால், 12 மணிநேரம் வேலை என்றால் அதிக நேரம் வேலைவாங்குவார்கள், ஆனால் அதிக சம்பளம் தரமாட்டார்கள். மூன்று நாட்கள் விடுப்பு தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. தற்போது வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு, அவ்வப்போது, அவரச வேலை என்று விடுப்பு நாளில் பாதி நாளில் வேலை செய்யவைப்பார்கள். அதனால் மூன்று நாள் விடுப்பு கிடைக்காது.எங்கள் பிரச்சனைக்கு தீர்வு இருக்காது,”என்கிறார் சியாமளா.

கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாகும் பெண்கள்

12 மணி நேர வேலை, பெண்கள், தமிழ்நாடு, தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

செல்வி மற்றும் சியாமளா போன்ற பெண்களின் நிலை குறித்து அரசாங்கம் யோசிக்கவேண்டும் என்றும் 12 மணி நேர வேலை என்பது தொழிற்சாலைகளின் லாபத்திற்காக மட்டும் பயன்படும் என்றும் தொழிலாளர்களின் தினசரி வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்கிறார் பெண்ணிய செயற்பாட்டாளர் ரேணுகா.

”பணிபுரியும் இடங்களில் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும், அவர்களுக்கான வசதிகளை தரவேண்டும் என்ற உலக அளவில் விவாதிக்கப்பட்டுவருகிறது.

ஆனால் தமிழ்நாடு அரசாங்கம் தற்போது 12 மணிநேர வேலை நேரத்தை கொண்டுவருவதால், பணியிடங்களில் இருந்து கொத்துக்கொத்தாக பெண் பணியாளர்களை இழக்கப்போகிறோம். ஆலைகளில் இளம் பெண்கள் பலர் கொத்தடிமையாக வேலை செய்யப்போகிறார்கள். பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் திட்டங்களை கொண்டுவந்ததாக சொல்லும் தமிழ்நாடு அரசு, தற்போது மிகவும் பிற்போக்குத்தனமான முடிவை எடுத்துள்ளது,” என்று விமர்சிக்கிறார் ரேணுகா.

மேலும், மூன்று நாட்கள் விடுப்பு இருப்பதால், ஒரு சில பெண்கள் மற்றொரு வேலைக்கு செல்ல பெண்கள் முயற்சிப்பார்கள் என்றும் சொல்கிறார் ரேணுகா. ”மூன்று நாட்கள் வீட்டில் இருப்பதற்கு பதிலாக ஏற்கனவே செய்யும் வேலையுடன் மற்றொரு வேலைக்கு செல்லலாம் என்ற யோசனை வந்துவிடும். ஏற்கனவே பொருளாதாரச் சுமையை தாள முடியாத நடுத்தரக்குடும்பங்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், ஓய்வின்றி மேலும் ஒரு வேலைக்கு செல்வார்கள்,”என்கிறார்.

12 மணி நேர வேலை, பெண்கள், தமிழ்நாடு, தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Renuka

மீண்டும் வரும் சுமங்கலி திட்டம்

12 மணி நேர வேலை, பெண்கள், தமிழ்நாடு, தொழிலாளர்கள்

தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள வேலைநேரம் தொடர்பான சட்டத்திருத்தம் குறித்து, திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செயல்படும் மகளிர் ஆய்வுத்துறையின் தலைவரான பேராசிரியர் மணிமேகலையிடம் பேசினோம்.

கூடுதலான நேரம் ஆலைகளில் பெண்கள் வேலையில் இருப்பது என்பது அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தும் என்கிறார்.

”12 மணிநேரம் வெளியில் பார்த்துவிட்டு, வீட்டு வேலைகளை கவனிக்காமல் இருக்கவேண்டாம் என்று கூறி பல நடுத்தரக்குடும்பங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதை தடுப்பார்கள்.

வறுமைகோட்டிற்கு கீழ்வாழும் குடும்பங்களில் உள்ள பெண்கள், கட்டாயம் வருமானம் ஈட்டவேண்டும் என்ற நிலையில் இருப்பதால், மேலும் மோசமான உழைப்புச் சுரண்டலுக்கு பழக்கப்படுத்தபடுவார்கள். அதோடு, பெண்கள் வேலைக்கு சென்று திரும்பும் நேரத்தில் அவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழும் என்பதால், பல வித புதிய சிக்கல்களை அவர்களை சந்திப்பார்கள்,”என்கிறார் மணிமேகலை.

மேலும், தமிழ்நாட்டில் பல ஆண்டுகள் போராடி தடைசெய்யப்பட்ட சுமங்கலித்திட்டம் புதிய முறையில் உருவெடுக்க இந்த சட்டத்திருத்தம் வழிவகுக்கும் என்கிறார் அவர்.

”வறுமையான குடும்பத்தில் உள்ள பெண்கள் பணியாற்றும் ஆலைகளில் 12 மணிநேரம் என்பதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டால், அது மீண்டும் சுமங்கலித் திட்டம் போன்ற நடைமுறையை பரவலாக்கும். பெண்களின் பங்கேற்பை உறுதிசெய்ய வளர்ந்த நாடுகளில் தினசரி வேலை நேரத்தை ஆறு மணிநேரமாக மாற்றமுடியுமா என்று யோசித்துவருகிறார்கள். நாம் பின்னோக்கி செல்லும் முடிவை எடுத்திருக்கிறோம். பெண்களின் முன்னேற்றத்தை இது தடை செய்யும்,”என்கிறார் அவர்.

நெகிழ்வுத்தன்மையை எதிர்பார்க்கும் தொழிற்சாலைகள்

12 மணி நேர வேலை, பெண்கள், தமிழ்நாடு, தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

காஞ்சிபுரம் மாவட்டம் சிஐடியு தலைவர் கண்ணன் பேசும்போது, இந்த சட்டத்திருத்தம் பணியாளர்களை கொத்தடிமைகளாக மாற்றும் என்கிறார். பல பெருநிறுவனங்கள் பணியாளர்களின் நலனில் அக்கறை காட்டுவதில்லை என்றும் தற்போது அரசங்காமே 12 மணி நேர வேலை என விதிகளை தளர்த்தினால், தொழிலாளர்களின் நிலை இன்னும் மோசமாகிவிடும் என்கிறார் கண்ணன்.

”காஞ்சிபுரத்தில் எட்டு மணி நேர வேலையில் உள்ள பல ஊழியர்கள், உண்மையில் 10 மணி நேரம் வேலை செய்கிறார்கள். குறிப்பாக கைபேசி உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனங்களில் பெரும்பாலும் பெண்கள்தான் வேலைசெய்கிறார்கள். அவர்களின் பிரச்சனைகளை பற்றிப் பேசுவதற்குக்கூட பலநேரம் அவர்கள் முன்வருவதில்லை. அதனால், தொழிற்சாலைகளின் லாபத்தை மட்டும் பார்க்காமல், தொழிலாளர்கள், குறிப்பாகப் பெண் தொழிலாளர்களின் நிலையைப் பற்றியும் அரசாங்கம் யோசிக்கவேண்டும்,”என்கிறார் கண்ணன்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் கொண்டுவந்தபோது, திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தபோதும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்திருத்தம் குறித்து பேசிய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் தொழிலாளர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்வது என்ற தற்போதைய நிலையே நீடிக்கும் என்றார்.

“திருத்தி அமைக்கப்பட்டுள்ள 65-ஏ பிரிவின் படி, நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகள் தொழிலாளர்கள் நலன் பாதிக்காத வகையில், அவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே இதை நடைமுறைப்படுத்த முடியும். ஒரு வாரத்தில் 48 மணி நேரம் வேலை நேரம்தான் வேலை பார்க்க முடியும். அதில் மாற்றம் ஏதும் இல்லை. எந்த தொழிற்சாலை விரும்புகிறதோ, அந்த தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே இந்த சட்டம் பொருந்தும்” என்றார்.

சட்டத்திருத்தம் குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருகின்ற நிறுவனங்கள் பணி நேரத்தில் ஒரு நெகிழ்வுத் தன்மையை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

“தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் வேலை நேரத்தில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது.

குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தும். மின்னணுவியல் துறை, தோல் பொருட்கள் இல்லாமல் காலணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், மின்னணுவியல் தொகுப்புத் தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்றுபவர்கள், அவர்கள் வேலை பார்க்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம்” என்றார் தங்கம் தென்னரசு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »