Press "Enter" to skip to content

திருமண மண்டபங்களில் மது பரிமாற அனுமதியா? அமைச்சர் விளக்கம் தந்த பிறகும் தீராத சந்தேகங்கள்

பட மூலாதாரம், Getty Images

12 மணி நேர வேலைக்கான சட்டத்திருத்த மசோதாவால் எழுந்த கொந்தளிப்பு அடங்குவதற்குள் தமிழ்நாடு அரசு அடுத்த சிக்கலை எதிர்கொண்டுள்ளது. விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் மது பரிமாற அனுமதி என்று தமிழ்நாடு அரசிதழில் வெளியான அறிவிப்பு பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்த பிறகும் கூட சந்தேகங்கள் தீரவில்லை. எதிர்க்கட்சிகள் பலவும் தமிழ்நாடு அரசைக் கண்டித்திருப்பதுடன் பல கேள்விகளையும் முன்வைத்துள்ளன.

தமிழ்நாட்டில் விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி என்று காட்சி ஊடகங்களில் வெளியான செய்தியால் மாநில அரசியல் உடனே பற்றிக் கொண்டது.

அந்த செய்திகளுக்கு அடிப்படையான, மார்ச் 18-ம் தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பில், மாவட்ட ஆட்சியர்கள் அனுமதியுடன், மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம், கட்டணம் செலுத்தி உரிய அனுமதி பெற்று இனி திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் விவரமும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதியா?
திருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதியா?

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதே அரசின் கொள்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள், திமுக மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் என அனைவருமே பேசி வந்த நிலையில், இந்த அறிவிப்பு மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்க, பொதுமக்கள் பலரும் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டனர். அரசு அறிவித்தபடி நடந்தால், என்னவெல்லாம் நடக்கக் கூடும் எனறு பலரும் தங்களது கவலைகளை பதிவிட்டு வந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்து விளக்கம் வந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி தந்த விளக்கம் என்ன?

காலை 11 மணியளவில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஐ.பி.எல். உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுகள், முதலீட்டாளர்கள் மாநாடு போன்ற சர்வதேச நிகழ்வுகளின் போது மட்டுமே பிற மாநிலங்களில் உள்ள நடைமுறைப்படி மதுபானம் பரிமாற அனுமதிக்கப்படும் என்று அவர் விளக்கம் அளித்தார்.

திருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதியா?

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி கிடையாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டமாக கூறியுள்ள போதிலும், அரசிதழ் அறிவிப்பால் எழுந்த அதிருப்தியும், கொந்தளிப்பும் அடங்குவதாக இல்லை.

எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை அரசு வீசியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணி நேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பதாக அரசை அவர் சாடியுள்ளார்.

‘எங்கும் மது வெள்ளம், எப்போதும் மது வெள்ளம்’ – அன்புமணி ராமதாஸ்

மதுவுக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ், “தமிழக அரசின் இந்த முடிவு மிக மோசமான சமூக, பண்பாட்டு சீரழிவுக்கு வழிவகுக்கும்” என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது முகநூல் பதிவில், “மார்ச் 18-ஆம் தேதியிட்ட அரசிதழ் மற்றும் அது குறித்த செய்தி தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியானதைத் தொடர்ந்து தான் இந்த விஷயம் வெளியில் வந்திருக்கிறது. இது வெளியில் தெரியக்கூடாத அளவுக்கு தீய செயல் என்பதை தமிழ்நாடு அரசே உணர்ந்திருந்தும் அதற்கு அனுமதி அளித்தது ஏன்?

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தில்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

ஆனால், அதற்கு மாறாக, மதுவை வெள்ளமாக பாயச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றால், இவையெல்லாம் முதல்வருக்கு தெரிந்து, அவரது ஒப்புதலுடன் தான் நடைபெறுகிறதா? என்ற ஐயம் எழுகிறது.

மதுவிலக்கு குறித்த தமிழக அரசின் கொள்கை என்ன? என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தை திறந்தவெளி குடிப்பகம் ஆக்குவதா? என்பது அவரது கேள்வி.

திருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதியா?

பட மூலாதாரம், FB/ANBUMANI RAMADOSS

சமுதாய சீர்கேடுக்கு வழிவகுக்கும் என அண்ணாமலை விமர்சனம்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையும் இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசைக் கண்டித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், “மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

சமுதாய சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

திருமண மண்டபங்களில் மதுவுக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டமாக அறிவித்து விட்ட போதிலும் கூட, சந்தேகம் இன்னும் முழுமையாக தீரவில்லை என்பதையே எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளும், பல சந்தேகங்களை முன்வைத்து அவை எழுப்பியுள்ள கேள்விகளும் உணர்த்துகின்றன. சமூக வலைதளங்களிலும் இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »