Press "Enter" to skip to content

ஏ.ஆர்.ரகுமானுக்கு முதன் முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் மரணம்

ஏ.ஆர்.ரகுமானுக்கு முதன் முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் உடல் நலக்குறைவால் காலமானார்.

பிரபல மலையாள இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87. கேரளாவில் பிறந்த அர்ஜுனன் பழனியில் உள்ள ஜீவகாருண்யானந்தா விடுதியில் வளர்ந்தார். அங்கு இசை கற்றுக்கொண்டார். பின்னர் பிரபல இசையமைப்பாளர் ஜி.தேவராஜிடம் உதவியாளராக சேர்ந்தார். அவர் இசையமைத்த பல படங்களுக்கு இவர்தான் ஆர்மோனியம் வாசித்துள்ளார்.

1968-ல் கறுத்த பவுர்ணமி என்ற மலையாள படத்தின் மூலம் அர்ஜுனன் இசையமைப்பாளராக அறிமுகமானார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி உள்ளார். 500-க்கும் மேற்பட்ட சிறந்த பாடல்கள் இவரது இசையில் வெளிவந்துள்ளன. கேரளாவில் இன்றைக்கும் அவரது பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கின்றன. ஏராளமான மேடை நாடகங்களுக்கும் இசையமைத்துள்ளார். 

2017-ம் ஆண்டு பயானகம் என்ற படத்துக்காக கேரள அரசிடம் விருது பெற்றார். ஏ.ஆர்.ரகுமானின் தந்தை இவருடன் இணைந்து பணியாற்றி உள்ளார். ஏ.ஆர்.ரகுமானுக்கு முதன் முதலில் கீ-போர்டு வாசிக்கும் வாய்ப்பை வழங்கியவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜுனன் மறைவுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மலையாள நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »