Press "Enter" to skip to content

ரஜினியின் ஏற்பாட்டின் பேரில் திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்

நடிகர் ரஜினிகாந்த் ஏற்பாட்டின்பேரில் பொருளாதாரத்தில் சரிந்த தயாரிப்பாளர்களுக்கு சென்னையில் 2 இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன.

கொரோனா பீதி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சினிமா துறையும் கடும் சரிவை சந்தித்துள்ளது. அதேவேளை சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சார்பில் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பொருளாதாரத்தில் சரிந்து இருக்கும் சினிமா தயாரிப்பாளர்களுக்கு உதவக்கோரி நடிகர் ரஜினிகாந்திடம், தயாரிப்பாளர் சங்க முன்னாள் துணைத்தலைவர் கே.ராஜன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வேண்டுகோளை ஏற்று 1,000 பேருக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நடிகர் ரஜினிகாந்த் வழங்க முன்வந்தார். அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் மூட்டை மூட்டைகளாக சென்னை அண்ணாசாலை பிலிம் சேம்பர் வளாகத்தில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. 

இதையடுத்து பொருளாதாரத்தில் சரிந்த தயாரிப்பாளர்களுக்கு 20 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்களை கே.ராஜன் வழங்கினார். தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி முக கவசம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் ஜாக்குவார் தங்கம், திருமலை, சவுந்தர், ஜெமினி ராகவா, ஜோதி பாலாஜி, கவுரி மனோகர், கே.எஸ்.சிவராமன், வின்னர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »