Press "Enter" to skip to content

கடவுளே…. ஏன் என் கண்ணை எடுத்தாய் என்று இரவெல்லாம் அழுதேன் – செல்வராகவனின் உருக்கமான கடிதம்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், தான் இளம் வயதில் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன். இவர் அடுத்ததாக தனுஷை வைத்து புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 14 வயது சிறுவனாக இருந்தபோது எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தேன் என்பதை மனமுறுகி பதிவிட்டுள்ளார். அதில், “அன்புள்ள செல்வா(வயது14), இந்த உலகம் உன்னுடைய கண்ணில் உள்ள குறைபாட்டை கண்டு சிரித்தது. ஒவ்வொரு இரவும் நீ அதை நினைத்து அழுதிருக்கிறாய். சில நேரங்களில் கடவுளிடம், ஏன்? எதற்காக என்னுடைய கண்ணை எடுத்தீர்கள் என்று கேட்டிருக்கிறேன்.

ஆனால், அதற்கு அவர் கவலைப்படாதே செல்வா, சரியாக இன்னும் 10 ஆண்டுகளில் நீ எழுதி இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பாய். அது உன் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றும். அப்போது இதே உலகம் உன்னை கேலி செய்யாமல், மரியாதையுடன் பார்க்கும். அடுத்த பத்து ஆண்டுகளில் நீ எடுக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டிங்காக அமையும். மக்கள் உன்னை “மேதை” என்று அழைப்பார்கள். 

மக்கள் இப்போது உன்னைப் பழையபடி பார்க்க மாட்டார்கள். திரைப்படங்கள் மூலம் தங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய மனிதராக பார்ப்பார்கள். கடவுள் உன்னிடம் இருந்து மதிப்புமிக்க ஒன்றை எடுத்துவிட்டார் என்றால், அதைவிட மிகுதியான ஒன்றைத் திருப்பி கொடுத்துவிடுவார். அதனால், கவலைப்பாடாதே. புகைப்படங்களுக்குச் சிரி, எதிர்காலத்தில் பல புகைப்படங்களுக்குச் சிரிக்க வேண்டிய நிலை வரும். உன்னை நேசி. இயக்குனர் செல்வராகவன்(வயது 45)” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »