Press "Enter" to skip to content

படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட தேவாலய செட் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு

கேரளாவில் சினிமா படப்பிடிப்புக்காக போடப்பட்ட பிரம்மாண்டமான கிறிஸ்துவ தேவாலய செட்டை சிலர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் டோவினோ தாமஸ். கொரோனா பாதிப்பு தொடங்கும் முன்பே டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் மின்னல் முரளி என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இதற்காக கேரளாவின் காலடி பகுதியில் ரூ.50 லட்சம் செலவில் கிறிஸ்தவ தேவாலயம் செட் போடப்பட்டது. 

அதில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதனால் அந்த செட்டும் அகற்றப்படாமல் அங்கேயே இருந்தது. காலடி கோவில் அருகே இந்த செட் அமைக்கப்பட்டதற்கு அப்பகுதி இந்து அமைப்பினர் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்தவ தேவாலய செட்டை யாரோ மர்ம நபர்கள் இடித்து சேதப்படுத்தினர். இதை அறிந்து படத்தயாரிப்பாளர் கடும் அதிர்ச்சி அடைந்தார். ஊரடங்கால் படப்பிடிப்பை நடத்த முடியாத நிலையில் இப்போது படப்பிடிப்பு செட்டும் சேதப்படுத்தப்பட்டு இருப்பது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில் சினிமா படப்பிடிப்பு செட்டை சேதப்படுத்தியது தாங்கள் தான் என்று ஒரு அமைப்பினர் பொறுப்பேற்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் மந்திரி பினராய் விஜயன் அறிவித்து இருந்தார். அதன்படி, இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுல், ரதீஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »