Press "Enter" to skip to content

தடுத்து நிறுத்திய காவல் துறையினர்… பணியை தொடர்வேன் என்று கூறிய சோனு சூட்

பாந்திரா டெர்மினசில் வெளிமாநில தொழிலாளர்களை சந்திக்க சென்ற இந்தி நடிகர் சோனு சூட்டை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு உண்டானது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மும்பையில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு இந்தி நடிகர் சோனுசூட் தனது ஏற்பாட்டில் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்.

இதுதொடர்பாக அவரை ஆளும் சிவசேனா கடுமையாக விமர்சித்தது. சோனுசூட்டை பாரதீய ஜனதா பின்னால் இருந்து இயக்குவதாகவும், அதனால் அவர் சிவசேனா தலைமையிலான மாநில அரசாங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக திடீர் மகாத்மாவாக மாறியுள்ளார் என்று தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாடியது.

இதை தொடர்ந்து, அன்றைய தினம் இரவு திடீரென நடிகர் சோனுசூட் பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். அப்போது, வெளிமாநில தொழிலாளர்களுக்கு அவர் செய்து வரும் உதவிக்காக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவரை பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், பாந்திரா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு ஷராமிக் சிறப்பு ரெயில் புறப்பட இருந்தது. அந்த ரெயிலில் பயணம் செய்யும் அம்மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை சந்திப்பதற்காக நடிகர் சோனுசூட் ரெயில் நிலையத்துக்கு சென்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடிகர் சோனுசூட்டை ரெயில் நிலையத்திற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் வெளிமாநில தொழிலாளர்களை சந்திக்கவும் அனுமதி மறுத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதையடுத்து நடிகர் சோனுசூட் அங்கிருந்து திரும்பி சென்றார். அதன்பின் சோனு அளித்த பேட்டியில், ‘என்னுடைய செயலில் அரசியல் எதுவும் இல்லை. புலம்பெயர் தொழிலாளர்கள் மீதுள்ள உண்மையான அன்பின் காரணமாகவே நான் இதனைச் செய்து கொண்டிருக்கிறேன். கடைசி புலம் பெயர் தொழிலாளர் தன்னுடைய சொந்த வீட்டிற்குச் சென்று சேரும் வரை நான் எனது பணியை தொடர்வேன்’ என்றார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »