Press "Enter" to skip to content

மனிதம் போற்றும் மிகச்சிறந்த மனிதர் ஜெ.அன்பழகன் – ஜெயம் ரவி இரங்கல்

கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் மறைவிற்கு நடிகர் ஜெயம் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் நேற்று மரணமடைந்தார். கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி மரணமடைந்ததால் அவரது உடல் தமிழக சுகாதாரத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு கண்ணம்மாபேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த ஜெ.அன்பழகன் அரசியலைத் தாண்டி சினிமாவில் தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக இருந்தவர். எனவே திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “திரு J.அன்பழகன் அவர்களது மறைவு செய்தி கேட்டு கடும் துயருற்றேன். அவர் ஒரு நம்பிக்கை தரும் அரசியல் தலைவர் மட்டுமல்ல, நல்லிதயம் கொண்ட, மனிதம்  போற்றும்  மிகச்சிறந்த மனிதர். 

மக்களுக்காகவே தன் வாழ்வை அர்பணித்து வாழ்ந்தவர். எனது திரைப்படம் “ஆதிபகவன்” படத்தை தயாரித்தபோது,  விலைமதிப்பற்ற மிகச்சிறந்த நேரத்தை அவருடன்  கழித்திருக்கிறேன். அந்த நினைவுகள் எப்போதும் மனதில் இனிமையானதாக நீங்காது இருக்கும். அவரோடு உரையாடியபோது கலை மீதும் திரைப்படங்கள் மீதும் அவரது பார்வை பலமுறை என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

பெருமை மிக்க அவரது அரசியல் பணிகள் மற்றும் அயராத மக்கள் பணிகள் மேலும் அவரது திரைப்பணிகளுக்காகவும் என்றென்றும் மக்கள் மனதில் நீங்காது அவர் குடியிருப்பார் என்பதில் ஐயமில்லை. கடும் துயர் மிக்க இந்த covid-19 சூழலில் அவரது உடல்நலத்தையும் பொருட்படுத்தாது அவர் மக்கள் பணிகளில் தொடர்ந்து இயங்கியது அவரது மனிதத்தை என்னென்றும் சொல்லும்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் படத்தை ஜெ.அன்பழகன் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »