Press "Enter" to skip to content

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதில் ஏதோ உள்நோக்கம் இருக்கு…. ராஜ்கிரண் சாடல்

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதில் யாருக்கோ, ஏதோ, உள்நோக்கம் இருப்பதாக நடிகர் ராஜ்கிரண் சாடியுள்ளார்.

கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக நடிகர்கள் நட்ராஜ், பிரசன்னா, சௌந்தரராஜா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகர் ராஜ்கிரணும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவனது சுதந்திரம். முருகப்பெருமானை நம்புவோர்க்கு, “கந்தர் சஷ்டி கவசம்” என்பது, “ஒரு பாதுகாப்பு அரண்”. இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல்பூர்வமான, மனோதத்துவரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன.

இறைவனை நம்பாதோர்க்கு, “நம்பாமை” என்பது, அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு, “நம்புதல்” என்பது, அவர்களின் சுதந்திரம். இதில், அவரவர் எல்லையோடு அவரவர்கள் நின்று கொள்வது தான், மேன்மையானது. தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது, மிகவும் கீழ்மையானது.

இந்த கொடிய கொரோனா காலகட்டத்தில், நோயோடும், நோய் பயத்தோடும், பொருளாதார சீர்கேட்டோடும், உண்ண உணவின்றி கோடிக்கணக்கான நம் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் சூழலில், இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில், யாருக்கோ, ஏதோ, உள்நோக்கம் இருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »