Press "Enter" to skip to content

கொரோனாவால் ‘அவதார் 2’ வெளியீடு தேதி மாற்றம் – ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவதார் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. இந்த சாதனையை கடந்த வருடம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. அடுத்து இந்த படத்தின் 4 பாகங்கள் ரூ.7,500 கோடி செலவில் தயாராக உள்ளன. 2 மற்றும் 3ம் பாகங்களுக்கான படப்பிடிப்புகள் நியூசிலாந்தில் தொடர்ந்து நடந்து வந்தன. கொரோனா பரவலை தடுக்க நியூசிலாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் அவதார் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படக்குழுவினர் வெளியேறினார்கள்.

பின்னர் கொரோனா பரவல் நியூசிலாந்தில் குறைந்ததால், கடந்த ஜூன் மாதம் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர். இருப்பினும் அவதார் படத்தை திட்டமிட்டபடி அடுத்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிட முடியாது என இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஜேம்ஸ் கேமரூன் கூறியதாவது: “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவதார் அடுத்த பாகத்தின் படப்பிடிப்பை குறித்த நேரத்தில் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது நியூசிலாந்தில் படப்பிடிப்பில் நடத்தி வருகிறோம். கொரோனாவுக்கு முன்பு வரை டிசம்பர் 2021-ல் வெளியிட்டுவிடலாம் என திட்டமிட்டு இருந்தோம். தற்போதைய தாமதங்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

அவதார் அடுத்த பாகங்களின் புதிய வெளியீட்டு தேதி: அவதார் 2ம் பாகம் 2022ம் ஆண்டு டிசம்பர் 16ந் தேதியும், அவதார் 3ம் பாகம் 2024ம் ஆண்டு டிசம்பர் 20ந் தேதியும், அவதார் 4ம் பாகம் 2026ம் ஆண்டு டிசம்பர் 18ந் தேதியும், அவதார் 5ம் பாகம் 2028ம் ஆண்டு டிசம்பர் 22ந் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »