Press "Enter" to skip to content

பாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் – பட அதிபர்கள் மனு

பாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்கக்கோரி பத்திரப்பதிவு துறை தலைவருக்கு பட அதிபர்கள் மனு அனுப்பி உள்ளனர்.

இயக்குனர் பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கியதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் நடத்துவதாக இருந்த ஆலோசனை கூட்டத்தை பிரதமரின் அயோத்தி நிகழ்ச்சி காரணமாக தள்ளி வைத்து நேற்று நடத்தினர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்தது. இதில் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, முரளி, ராதாகிருஷ்ணன், கே.ராஜன், கலைப்புலி சேகரன், கமீலா நாசர், அழகன் தமிழ்மணி, சோழா பொன்னுரங்கம், திருமலை, நளினி சுப்பையா, கே.ஜே.ஆர், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாரதிராஜாவை பலரும் கண்டித்து பேசினர். பின்னர் பத்திரப்பதிவு துறை தலைவருக்கு பட அதிபர்கள் மனு அனுப்பினர். 

அதில் கூறியிருப்பதாவது: “பாரதிராஜாவும் சிலரும் சேர்ந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்குவதாக அறிவித்து பத்திரப்பதிவு துறையில் பதிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தனி அதிகாரி சங்கத்தின் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்.

தனி அதிகாரி சிறப்பாக செயல்படவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி பாரதிராஜா உள்பட சில தயாரிப்பாளர்கள் புதிய சங்கத்தை உருவாக்கி இருப்பது சங்க விதியின்படி சங்கத்துக்கு விரோதமான நடவடிக்கை. எனவே பாரதிராஜாவையும் அவருக்கு துணையாக உள்ளவர்களையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் பதிவையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.” இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »