Press "Enter" to skip to content

நடிகர் சூர்யாவுக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஆதரவு

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று உயர்நீதிநீதி மன்றம் நீதிபதிகளுக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா தனது அறிக்கையில், உயிருக்குப் பயந்து காணொளி கான்பரன்சில் செயல்படும் நீதிமன்றம் மாணவர்களை மட்டும் நேரில் தேர்வு எழுதச் சொல்கிறது என்று தெரிவித்திருந்தார். இந்தக்கருத்தை நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், சூர்யாவிற்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பானுமதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கொரோனா காலகட்டத்தில் நீதிமன்றங்கள் இயங்காமல் இருந்தது. பல வழிகளில் நீதிமன்றம் நடைமுறைகள் நடத்தப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. இதனால் பொது மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் நீதிமன்றம்கள் மூடப்பட்டுதான் இருக்கின்றன.

மத்திய- மாநில அரசு அலுவலகங்கள் இயங்கினாலும் நீதிமன்றங்களை பொறுத்தவரை இதே நிலை தான் நீடிக்கிறது. எனவே சூர்யா கூறிய கருத்துகள் மக்கள் பலரிடமும் இருக்கிறது. நீதிமன்ற நடவடிக்கைகள், தீர்ப்புகள் குறித்து கருத்துச் சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது. 

கருத்துச் சுதந்திரத்திற்கு உட்பட்டு, நேர்மையான, வெளிப்படையான, யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத விமர்சனமாக சூர்யாவின் கருத்துகளை எடுத்துக் கொள்ளாமல் நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக் கொண்டது தவறு. நடிகர் சூர்யா மீதும் இது போன்ற கருத்துகளைத் தெரிவிக்கும் நபர்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு முற்போக்கு பெண் வழக்கறிஞர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோல, சூர்யாவின் கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர். பிரசாத், சுதா ராமலிங்கம் உள்பட 25-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »