Press "Enter" to skip to content

இசையால் என்றென்றும் வாழ்வார்… எஸ்.பி.பி. ஒரு சகாப்தம்

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரைப்பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை காணலாம்.

ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். இதுவரை எஸ்.பி.பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறனுக்கு சான்று.

40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் உலகின் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்க்க முடியாத சாதனை ஒன்றையும் தன்வசப்படுத்தி இருக்கிறார்.

ஆரம்பத்தில் மோசமான தமிழ் உச்சரிப்புக்காக புறந்தள்ளப்பட்ட எஸ்.பி.பி, பின்னர் எம்எஸ்வி-யின் ஆலோசனைக்கு இணங்க ஓராண்டு பயிற்சி பெற்று தமிழ் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பை பெற்றார். அதன்பின் கிடைத்த முதல் வாய்ப்பில் இருந்து இன்றுவரை 54 ஆண்டுகளாக எல்லா மொழிகளிலும் சரியான உச்சரிப்புடன் பாடும் பாடகர் என்ற சிறப்பைப் பெற்றார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழ் திரைப்படத்தில் கோலோச்சி வந்த காலகட்டத்தில் அறிமுகமான எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையராஜா இசையமைப்பாளராக வலம் வந்த நேரத்தில் உச்சத்தில் இருந்து வந்தார். பின்னர் ஏ.ஆர்.ரகுமான் தலைமுறையிலும் தன்னை தக்க வைத்துக்கொண்டு தற்போது இளம் இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளரை கடந்தும் தனது தன்னிகரில்லாத கம்பீரக்குரலால் ரசிகர்களை வசீகரித்தவர்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பாடகராக தமிழ் திரைப்படத்தில் உச்சத்தில் வலம் வந்தபோது நடிகராக பல திரைப்படங்களில் நடித்துள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் புதிய முயற்சிகளை முயன்று பார்ப்பதில் எப்பொழுதும் ஆர்வம் காட்டியவர். கேளடி கண்மணி திரைப்படத்தில் மண்ணில் இந்த காதலன்றி பாடலையும், அமர்க்களம் திரைப்படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலையும் மூச்சுவிடாமல் பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.

இதுபோக பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய இந்திய அரசின் மிக உயரிய விருதுகள் எஸ்.பி.பி-யின் திரை பயணத்தை அலங்கரிக்கின்றன. அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக தமிழ்திரைப்படத்தை ஆக்கிரமித்துள்ள எஸ்பிபியின் காந்தக் குரல் மீண்டும் நலமுடன் எழுந்து வந்து அதே வசீகரத்துடன் ஒலிக்க வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமாகவும் இருந்தது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதில் இருந்து, திரைப்படம் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், உலகெங்கும் இருக்கும் ரசிகர்கள் எஸ்.பி.பி. நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள். அவரின் குரல் மீண்டும் ஒலிக்காதா என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர் இன்று (செப் 25) பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார். அவர் இறந்தாலும், அவர் பாடிய பாடல்கள் பல தலைமுறைகள் கேட்கும்… 

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »