Press "Enter" to skip to content

தயாரிப்பாளர் சங்க தேர்தல் – வாக்குக்கு தங்க காசு…. ரூ.4 ஆயிரம் கொடுக்கப்பட்டதாக புகார்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்குக்கு தங்க காசு மற்றும் ரூ.4 ஆயிரம் பணம் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கியுள்ளார்.

இந்த தேர்தலில் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். இன்றைய தேர்தலில் 1303 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 1050 பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். நடிகை குஷ்பு, எஸ்.வி.சேகர், டி.ராஜேந்தர், சமுத்திரக்கனி உள்ளிட்ட திரையுலக முக்கிய பிரமுகர்களும் இன்று ஓட்டுப்போட்டனர்.

இதற்கு முன்பு நடைபெற்றுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில் வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தேர்தலில் இன்று பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இதற்கிடையே தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பணம் மற்றும் தங்க காசுகள் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக திரைப்படம் தயாரிப்பாளரும், இயக்குனரும் நடிகருமான பிரவீன் காந்த் அளித்த பேட்டி வருமாறு: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் முறைகேடு செய்ய சிலர் திட்டமிட்டுள்ளனர். ஒரு கவரில் ரூ.4 ஆயிரம் பணம் வைத்து ஒருவர் கொடுத்துள்ளார். தங்க காசும் கொடுத்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் தேர்தல் நேர்மையாக நடைபெறுவதில் பாதிப்பு ஏற்படும். எனவே பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்.வி.சேகர் கூறுகையில், “தமிழக சட்டமன்ற தேர்தலை விட பரபரப்பாக தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது. எல்.இ.டி. டி.வி. ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் தங்க காசுகள் கொடுப்பதாகவும் கூறுகிறார்கள். சட்டமன்ற தேர்தலின் போது ஆரத்தி தட்டில் 10 ரூபாய் கூட போடாமல் வெற்றி பெற்றவன் நான்.

எனக்கு இவை எதுவுமே தேவை இல்லை. யார் ஜெயித்து வந்தாலும் தயாரிப்பாளர் சங்க நலனில் அக்கறையோடு செயல்பட வேண்டும். சங்கத்தில் ரூ.13 கோடி ஊழல் நடந்துள்ளது. யார் வெற்றி பெற்று வந்தாலும் அதனை வெளிக்கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »