Press "Enter" to skip to content

மகளிர் தின சிறப்பு – கோலிவுட்டில் கோலோச்சிய பெண் இயக்குனர்கள்

திரைப்படம் இயக்குனர்களாக பெரும்பாலும் ஆண்களே கோலோச்சிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் திரைப்படத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கிய பெண் இயக்குனர்கள் பற்றிய சிறப்பு தொகுப்பை காணலாம்.

தமிழ் திரைப்படத் துறையில் நடிப்பு, ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம் போன்ற துறைகளில் மட்டுமே பெரும்பான்மையான பெண்களின் பங்களிப்பு உள்ளன. ஆண் இயக்குனர்களுக்கு நிகராக பெண் இயக்குனர்கள் இடம்பெறவில்லை என்றாலும், வெற்றிப்படங்களை கொடுத்தவர்கள் பட்டியலில் சில பெண் இயக்குனர்களும் இடம்பெற்றுள்ளனர். 

டி.பி.ராஜலட்சுமி

அவர்களில் முதன்மையானவர் டி.பி.ராஜலட்சுமி, தமிழ் திரைப்படத்தில்ும், தெலுங்கிலும் முதல் பெண் நடிகை இவர். தமிழ் திரைப்படத்தில் ஆக்‌ஷன் கட் சொன்ன முதல் பெண் இயக்குனரும் இவரே. 1936-ம் ஆண்டு வெளிவந்த மிஸ் கமலா, 1939-ல் வெளிவந்த மதுரைவீரன் போன்ற படங்கள் இவரது இயக்கத்தில் வெளிவந்தன. 

பானுமதி 

1953-ம் ஆண்டு என்.டி.ராமாராவ், எஸ்.பி.ரங்காராவ் சண்டிராணி என்கிற தமிழ் திரைப்படத்தை நடிகை பானுமதி இயக்கினார். அதன் பின்னர் தமிழ் திரைப்படத்தில் பெண் இயக்குனர்களின் வருகை என்பது அத்தி பூத்தாற் போன்று இருந்தது. 

சுஹாசினி மணிரத்னம்

இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியான சுஹாசினி, வெற்றிகரமான நடிகையாக வலம்வந்த இவர், 1995-ல் இந்திரா எனும் வெற்றிப் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனரானார். 

சுஹாசினி மணிரத்னம்

இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்திய அவர் நீண்ட இடைவெளிக்கு பின் கடந்தாண்டு வெளியாகிய ‘புத்தம் புது காலை’ எனும் ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்ற ‘காஃபி எனி ஒன்’ எனும் குறும்படத்தை இயக்கியதன் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். 

சுதா கொங்கரா

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கொங்கரா, 2010-ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான துரோகி படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படத்தினை இயக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

சுதா கொங்கரா

இவரது திரைப்பயணத்தில் இறுதிச்சுற்று, ஒரு அடையாளமாக மாறியது. இதையடுத்து சூர்யாவை வைத்து இவர் இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம், இவருக்கு முன்னணி இயக்குனர் என்கிற அந்தஸ்தை பெற்றுத் தந்தது.

லட்சுமி ராமகிருஷ்ணன்

2012-ம் ஆண்டில் ஆரோகணம் படம் மூலம் இயக்குனரான லட்சுமி ராமகிருஷ்ணன், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் சொந்தக்காரர் போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார். குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வருகிறார். 

லட்சுமி ராமகிருஷ்ணன்

இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் குடும்ப உறவுகளை பற்றிய படங்களாகவே இருந்தன. குறிப்பாக இவர் இயக்கிய ஹவுஸ் சொந்தக்காரர் திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

பிரியா 

2005-ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரியா. 2007-ம் ஆண்டு கண்ணாமூச்சி ஏனடா என்கிற படத்தை இயக்கிய இவர், இயக்குனர் மணிரத்னத்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். 

பிரியா, அனிதா உதீப்

அனிதா உதீப்

2009-ம் ஆண்டு குளிர் 100 டிகிரி என்கிற படத்தினை இயக்கி பிரபலமானவர் அனிதா உதீப். இதையடுத்து 90 எம்.எல் எனும் திரைப்படத்தை இயக்கி, தமிழ் திரையுலகில் பல சர்ச்சைகளில் சிக்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஐஸ்வர்யா தனுஷ்

நடிகர் ரஜினியின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், தனது கணவர் தனுஷ் நடித்த 3 படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து வை ராஜா வை போன்ற படங்களை இயக்கினார். 

ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா ரஜினி

சவுந்தர்யா ரஜினி

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, ரஜினியை வைத்து கோச்சடையான் எனும் அனிமேஷன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனரானார். இதுதவிர வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார்.

ஹலீதா ஷமீம்

இயக்குனர்கள் மிஷ்கின், புஷ்கர் காயத்ரி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஹலீதா ஷமீம். 2014-ம் ஆண்டில் பூவரசம் பீப்பி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனரானார். 2019-ம் ஆண்டு சமுத்திரக்கனி, சுனைனா ஆகியோரை வைத்து இவர் இயக்கிய சில்லு கருப்பட்டி எனும் ஆந்தாலஜி படம் விமர்சன ரீதியாக பேசப்பட்டது. அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான ஏலே திரைப்படமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. 

ஹலீதா ஷமீம்

அதுமட்டுமின்றி இவர் தற்போது இயக்கி வரும் மின்மினி எனும் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஏனெனில் மின்மினி படத்தில் குழந்தை பருவ காட்சிகளில் நடித்திருந்தவர்களே, பதின்ம வயது காட்சிகளிலும் நடிக்க வேண்டும் என்பதால், அவர்கள் வளர்வதற்காக 5 ஆண்டுகள் காத்திருந்து எஞ்சியுள்ள காட்சிகளை அவர் படமாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர, வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி, கே.டி.படத்தை இயக்கிய மதுமிதா, மாலினி 22 பாளையங்கோட்டை படத்தை இயக்கிய நடிகை ஸ்ரீபிரியா, ராஜா மந்திரி படத்தை இயக்கிய உஷா கிருஷ்ணன் என இன்னும் சில பெண் இயக்குனர்கள் தமிழ் திரையுலகில் பல சாதனைகளை படைக்க தயாராகி வருகின்றனர். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »