Press "Enter" to skip to content

விமான நிலையத்தில் அவமதிப்பு- சுதா சந்திரனிடம் மன்னிப்பு கோரியது மத்திய பாதுகாப்பு படை

பாதுகாப்பு சோதனைகளுக்காக எப்போதும் எனது செயற்கை கால் விமான நிலைய அதிகாரிகளால் சோதனை செய்யப்படுவது வேதனையாக உள்ளது என சுதா சந்திரன் கூறி உள்ளார்.

புதுடெல்லி:

பிரபல நடன கலைஞரும் நடிகையுமான சுதா சந்திரன், 1981ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் தனது காலை இழந்தார். இதனால் செயற்கைக் கால் பொருத்தி தனது கலைப் பயணத்தை தொடர்கிறார். தமிழ், இந்தி தொடர்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருவதோடு நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார்.

இந்நிலையில், சுதா சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில், பாதுகாப்பு சோதனைகளுக்காக எப்போதும் எனது செயற்கை கால் விமான நிலைய அதிகாரிகளால் சோதனை செய்யப்படுவதும், ஒவ்வொரு முறையும் செயற்கை காலை கழற்றி காட்டுவதும் வேதனையாக உள்ளது என கூறி உள்ளார்.

‘நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு இது எனது தனிப்பட்ட கடிதம். மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை. நான் சுதா சந்திரன், நான் ஒரு நடிகை, நாட்டியக் கலைஞர். செயற்கைக் கால்களைக் கொண்டு நடனமாடி வரலாறு படைத்திருக்கிறேன். எனது நாடு என்னை நினைத்துப் பெருமிதம் கொள்ளுமாறு செய்திருக்கிறேன்.

ஆனால், தொழில்முறைப் பயணமாக நான் ஒவ்வொரு முறை விமானம் ஏறுவதற்கு முன்பும், விமான நிலையத்தில் என்னைப் பாதுகாப்பு சோதனையில் தடுத்து நிறுத்தும்போது எனது செயற்கைக் காலை வெடிகுண்டு பரிசோதனைக் கருவியை வைத்துப் பரிசோதிக்கும்படி மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரிடம் கேட்கிறேன். ஆனால், அவர்கள் எனது செயற்கைக் காலை கழற்றி காட்டச் சொல்கின்றனர்.

மோடி அவர்களே, இது மனிதச் செயல்தானா? இதுதான் நமது தேசம் பேசுகிறதா? இந்தச் சமூகத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்குத் தரும் மரியாதை இதுதானா? மோடி அவர்களே, மூத்த குடிமக்கள், அவர்கள் மூத்தவர்கள்தான் என்பதைத் தெரிவிக்கும் வண்ணம் ஒரு அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.” என சுதா சந்திரன் கூறியிருந்தார்.

சுதா சந்திரனின் காணொளி பதிவு மிகுதியாக பகிரப்பட்ட நிலையில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்புப் படை டுவிட்டரில்  பதிவிட்டுள்ளது.

“உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு மிகவும் வருந்துகிறோம் சுதா சந்திரன். விதிமுறைகளின் படி, குறிப்பிட்ட சில சமயங்களில் மட்டுமே செயற்கை உறுப்பு பாகங்களை நீக்கிப் பரிசோதிக்க வேண்டும். உங்களை ஏன் அப்படிச் செய்யச் சொன்னார் என்று, சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியை நாங்கள் விசாரிக்கிறோம். இதுபோன்று எந்தப் பயணிக்கும் அசவுகரியம் ஏற்படாது இருப்பதை உறுதி செய்வோம்” என மத்திய தொழிலக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »