Press "Enter" to skip to content

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும்…! சென்னை உயர்நீதி மன்றம்…!!

நீர் பிடிப்பு பகுதிகள், நீர்நிலைகள், நீர்வழித்தடங்களை ரியல் எஸ்டேட்களாக மாற்ற அனுமதிக்காமல் ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை ஒட்டி அமைந்துள்ள ஆனைபாளையம் ஏரியில் இயல்பு அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்தால், சந்திரசேகரபுரம் கிராமத்தில் நீர் புகுந்து விடுவதால், ஏரியில் கூடுதல் நீரை திறந்து விட உத்தரவிடக் கோரி சந்திரசேகரபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர் பழனிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஏற்கனவே இந்த கிராமவாசிகளுக்கு பட்டா வழங்கும் போது நீர்பிடிப்புக்கு தடை ஏற்படுத்த கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக கட்டுமான பணிகளை அரசு அனுமதித்துள்ளதாக அதிருப்தி தெரிவித்தது.

நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை குடியிருப்புகளுக்காக வகைமாற்றம் செய்ய அனுமதித்ததால், தற்போது அதற்கு பெரிய விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், இயற்கையோடு இயைந்த வாழ்வில் இருந்து நாம் விலகி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஏரியில் இருந்து கூடுதல் நீரை திறந்து விட மறுத்து வருவாய் கோட்ட ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நீர்நிலைகள், நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் நீர் வழித்தடங்களை ரியல் எஸ்டேட்களாக மாற்ற அனுமதிக்காமல், ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »