Press "Enter" to skip to content

ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி மீதான நடவடிக்கை..! உயர் நீதிமன்றம் தடை…!!

ஸ்ரீபெரும்புதூர் துணை காவல் கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் போலிவாக்கத்தை சேர்ந்த கலையரசி என்பவரின் கணவருக்கும், முருகன் என்பவருக்கும் தொழில் ரீதியாக பணம் கொடுத்து வாங்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பட்டியல் இனத்தை சேர்ந்த தன்னை சாதி பெயரை சொல்லி முருகன் தரக்குறைவாக திட்டியதாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம்  கலையரசி புகாரளித்துள்ளார். 

இந்த புகார் மீது போலிசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் கலையரசி புகார் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரித்த ஆணையம் டி.எஸ்.பி  உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆக்டோபர் மாதம் டி.ஐ.ஜி.

க்கு உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஸ்ரீபெரும்புதூர் துணை காவல் கண்காணிப்பாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, ஆணையம் விசாரணை மேற்கொண்ட மறுநாளே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும், இதனை கவனத்தில் கொள்ளாமல் இயற்கை நீதிக்கு மாறாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். எனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதற்கும், இந்த விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கவும் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும், டிஎஸ்பி மீது மேல் நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »