Press "Enter" to skip to content

ஜெயலலிதா மரணம்: திருநாவுக்கரசர் கருத்துக்கு இளங்கோவன் கண்டனம்

சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ‘வெள்ளை அறிக்கையோ?, கருப்பு அறிக்கையோ? எதுவும் தேவையில்லை. வெள்ளை அறிக்கை வெளியிடுவதால் ஜெயலலிதா உயிரோடு திரும்பி வரப்போவதில்லை என்று கருத்து தெரிவித்தார்.

கூட்டணி கட்சியான காங்கிரஸ் இந்த மாதிரி கருத்து வெளியிட்டது தி.மு.க. தலைவர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே பல வி‌ஷயங்களில் தி.மு.க. எடுத்த நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துக்களையே திருநாவுக்கரசர் வெளியிட்டு வந்தது. இரு கட்சிகளிடையேயும் உரசலை உருவாக்கியது.

இந்த நிலையில் திருநாவுக்கரசரின் கருத்துக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போன்ற தலைவர்கள் கேட்டுள்ளதைப்போல் நானும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறேன்.

காரணம் அவர் ஒரு சாதாரண பெண்மணி அல்ல, தமிழக முதல்வராகவும், வலிமை வாய்ந்த பெண்மணியாகவும், வலிமைமிக்க அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் இருந்தவர்.

75 நாட்களாக மருத்துவமனையில் இருந்தபோது அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. வழக்கமான உணவை சாப்பிடுகிறார் என்று ஒருநாள் செய்தி. மறுநாள் தொண்டை வழியாக உணவு செலுத்தப்படுகிறது என்கிறார்கள். எழுந்து நடக்க பயிற்சி அளிக்கப்படுகிறது, எழுந்து உட்கார்ந்து இருக்கிறார், செல்போனில் பேசினார் என்றெல்லாம் தெரிவித்தார்கள்.

மறுநாளே பிசியோதெரபி சிகிச்சை, பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்கள். இப்படி முன்னுக்குப்பின் முரணாக பல தகவல்களை வெளியிட்டு வந்தார்கள்.

முதல்வராக இருந்த அண்ணாவும், எம்.ஜி.ஆரும் மருத்துவமனையில் இருந்த போது அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்கள் அவ்வப்போது உடல்நிலை பற்றிய தகவல்களை நாட்டு மக்களுக்கு வெளியிட்டு வந்தார்கள்.

ஆனால் மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சரோ, செயலாளரோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

எனவே தமிழக மக்களுக்கும், அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் சந்தேகம் எழுவது நியாயமானதுதான். அந்த சந்தேகத்தை போக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

மடியில் கனமில்லை என்றால் ஏன் அறிக்கை வெளியிட தயங்க வேண்டும்? மர்மம் இல்லை என்றால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், என்ன நோய் என்பதை தெளிவுபடுத்த வேண்டியதுதானே.

ஜெயலலிதாவின் திடீர் மரணத்தை அந்த கட்சி தொண்டர்கள் தாங்கிக் கொள்ள முடியாமலும், ஒட்டுமொத்த மக்களும் சந்தேகத்துடனும் பார்க்கின்றனர். இந்த நேரத்தில் உண்மையை வெளியிட வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் ‘வெள்ளை அறிக்கையோ, கருப்பு அறிக்கையோ தேவையில்லை. அதனால் அவர் உயிரோடு வருவாரா? என்று கொச்சைப்படுத்தி இருப்பது மனதை காயப்படுத்துகிறது. இது காங்கிரசின் கருத்து அல்ல. அவரது சொந்த கருத்து.

அப்படி பார்த்தால் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு இன்னமும் நடக்கிறது. என்ன நடந்தாலும் ராஜீவ்காந்தி இனி உயிரோடு வரப்போவதில்லை. எனவே ராஜீவை கொன்றவர்களை தண்டிக்க வேண்டாம் என்று கூற முடியுமா?

திருநாவுக்கரசர் தெரிவித்துள்ள கருத்து மக்கள் விரோத கருத்து. யாரையோ காப்பாற்ற அவர் முயற்சிக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

More from செய்திகள்More posts in செய்திகள் »