Press "Enter" to skip to content

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒரு சிங்கம் உயிரிழப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் அடுத்தடுத்து சிங்கங்கள் உயிரிழந்துள்ளதால் பூங்கா மருத்துவர்கள், அதிகாரிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வண்டலூர்:

சீனாவின் உகான் நகரத்தில் தோன்றிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி மனிதர்களை ஆட்டி படைத்து வருகிறது. விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 26-ந்தேதி வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் சிங்கங்கள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. மேலும் சரியான முறையில் உணவுகளை உண்ணாமல் இருந்தது. இதனையடுத்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் மூலம் சிங்கங்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு மத்தியபிரதேசம் போபாலில் அமைந்துள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது.

இதன் பரிசோதனை முடிவு கடந்த ஜூன் 3-ந்தேதி வெளியானது. இதில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அன்றைய தினமே நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் தொற்றால் உயிரிழந்தது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்ட மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து சிங்கங்களை கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையில் சிகிச்சை பெற்று வந்த கவிதா (23), புவனா (19) என்ற பெண் சிங்கங்கள் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறது. இந்த 2 சிங்கங்களுக்கும் மருத்துவ குழுவினர் சிகிச்சைகளை அளித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூங்காவில் 4 வங்கபுலிகள் மற்றும் மேலும் 3 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 19 வயதுடைய ராகவ் என்ற ஆண் சிங்கத்திற்கு மட்டும் கொரோனா கோவிட்-2, டிஸ்டெம்பர் என்ற புதிய வகை நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த சிங்கத்தை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்கனவே கடந்த ஜூன் 3-ந்தேதி சார்ஸ் கோவிட் – 2, கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டு பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12 வயதுள்ள பத்பநாதன் என்ற ஆண் சிங்கம் நேற்று காலை 10.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த சிங்கத்தை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பிறகு வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்திலுள்ள நவீன எரி மேடையில் தகனம் செய்யப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 2 சிங்கங்களும் மிகவும் இளைய வயதுடைய சிங்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் அடுத்தடுத்து சிங்கங்கள் உயிரிழந்துள்ளதால் பூங்கா மருத்துவர்கள், அதிகாரிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

கொரோனா தொற்று காரணமாக இளம் வயது உடைய 2 சிங்கங்கள் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதால், பூங்காவில் உள்ள புலிகள் உள்பட பல்வேறு விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து விலங்குகளையும் தினந்தோறும் ஊழியர்கள் மூலம் உன்னிப்பாக மருத்துவ குழுவினர் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

சிகிச்சையில் உள்ள மற்ற சிங்கங்களுக்கு உயிரிழப்பு ஏற்படாதவாறு நவீன முறையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »