Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எதிரொலி: சீன பங்குச் சந்தைகள் கடும் சரிவு

உள்ளூர் புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) வணிகம் தொடங்கிய சீன பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடே பதற்றத்துக்கு உள்ளாகி இருப்பதே இந்த சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, இன்று ஒரே நாளில் ஷாங்காய் பங்குச்சந்தை குறியீட்டு எண் கிட்டதட்ட எட்டு சதவீதம் குறைந்தது. கடந்த நான்கு ஆண்டு காலத்தில், ஒரே நாளில் ஏற்பட்ட மிகப் பெரிய வீழ்ச்சி இதுதான்.

உற்பத்தித்துறை, மூலப்பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில், சுகாதாரத்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு உயர்ந்தது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சீனாவின் மத்திய வங்கி அறிவித்துள்ள நிலையிலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக சிக்கலில் இருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், குறுகிய கால வட்டி வீதத்தை குறைப்பதாக சீனாவின் மத்திய வங்கியான பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சீனா அறிவித்துள்ளது.

அது மட்டுமியின்றி, வங்கித்துறையில் பணப்புழக்கத்தை உறுதிசெய்யும் வகையில், இன்று கூடுதலாக 150 பில்லியன் யுவான்களை புழக்கத்தில் விட்டுள்ளது சீனா.

ஏற்கனவே திட்டமிட்டபடி, ஒட்டுமொத்தமாக 1.2 ட்ரில்லியன் யுவான்களை நிதித்துறையில் புழக்கத்தில் விடுவதற்கு சீனாவின் மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முன்னதாகவே, பொருளாதார மந்தநிலையில் சிக்கி இருந்த சீனா, அதை “குறுகியகால” பிரச்சனை என்று கூறிவரும் நிலையில், மேலதிக பணத்தை வரும் வாரங்களில் புழக்கத்தில் விடவுள்ளதாக சீனாவின் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நிகழ்ந்து வந்த வர்த்தகப் போரை தொடர்ந்து, சமீப மாதங்களாக சீனாவின் பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவி வரும் சூழ்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஆட்டம் கண்டுள்ளது சீனப் பொருளாதாரம்.

கடந்த ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதம், ஆனால் இது அந்நாட்டின் கடந்த முப்பதாண்டுகால வரலாற்றில் பதிவான குறைந்தபட்ச வளர்ச்சி ஆகும்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவின் முக்கிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் செயல்பாடு பகுதியளவோ அல்லது முழுவதுமாகவோ நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வைரஸின் தாக்கம் நீண்டகாலத்திற்கு தொடரும் பட்சத்தில் அது சீனாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சீனாவின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கம் உணரப்படும் என்றும், ஆனால் அது கடந்த 2003ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் பாதிப்பின்போது இருந்ததை போன்று குறுகியகால பிரச்சனையாகவே இருக்கும் என்றும் ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் என்னும் சந்தை ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

“சீனாவின் பெரும்பாலான பகுதிகளையும், மக்கள் தொகையையும் கொரோனா வைரஸ் பாதிப்பதால், அதன் தாக்கம் சார்ஸை விட அதிகமாகவே இருக்கும்” என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »