Press "Enter" to skip to content

குரூப் 4 தேர்வு முறைகேடு: இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி

சென்னை: குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு எழுதிய சிவராஜ் உட்பட 2 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தியது. விசாரணையில் அந்த தேர்வில் தவறுகள் நடந்திருப்பது உறுதியானது. அதன்படி, 99 தேர்வர் கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை டி.என்.பி.எஸ்.சி. கண்டுபிடித்தது.

அவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் டி.என்.பி. எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், சார்புச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த முறைகேடு வழக்கில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள், முறைகேடு செய்து சேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்த்த சிவராஜ் என்பவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

 இதனையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். கைது செய்யப்பட்ட அனைவரிடமும் ரகசிய அறையில் வைத்து விசாரணை நடைபெற்று வந்தது. அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் முறைகேட்டில் முக்கிய நபராக இருந்து வரும் ஜெயக்குமார் என்பவரை பிடிப்பதற்காக 2 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது 2 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு எழுதிய சிவராஜ் உட்பட 2 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »