Press "Enter" to skip to content

தீவிர அரசியலுக்கு பிரேக்… ஓய்வில் கமல்… திகைப்பில் நிர்வாகிகள்

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக தீவிர அரசியலுக்கு பிரேக் கொடுத்துவிட்டு ஓய்வில் உள்ளதால் அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி மாதம் மக்கள் சந்திப்பு பயணத்தை கமல் தொடங்குவார் என கடந்தமாதம் கூறப்பட்ட நிலையில் அது தொடர்பான முன்னெடுப்பு பணிகளை அப்படியே நிறுத்தியுள்ளனர் நிர்வாகிகள். காரணம் கமலிடம் இருந்து இன்னும் உறுதியான உத்தரவுகள் ஏதும் வரவில்லை.

ஏற்கனவே ஊரக உள்ளாட்சித் தேர்தலை மக்கள் நீதி மய்யம் புறக்கணித்துவிட்ட நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆவது போட்டியிடலாம் என தொண்டர்களும், நிர்வாகிகளும் வலியுறுத்தியும் கமல் இன்னும் அது குறித்து முடிவெடுக்கவில்லை.

imageஅது புலிகள் நிரம்பிய காடு.. ரஜினியின் மேன் vs வைல்ட் நிகழ்ச்சிக்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

சுறுசுறுப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அரசியலில் தொடக்கத்தில் இருந்த தீவிரத்தையும், சுறுசுறுப்பையும் படிபடியாக கமல் குறைத்து வருவதால் அவரை நம்பி உள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். மண்டல வாரியாக கட்சியை வலுப்படுத்த வேண்டும் என நினைத்த கமல், மக்களவை தேர்தலுக்கு பின்னர் புதிய நிர்வாகிகளை மண்டல வாரியாக நியமித்தார். பல புதிய முகங்களை தேடி அழைத்து வந்து கட்சியில் இணைத்தார். உதாரணத்துக்கு தொழிலதிபர்களான அருப்புக்கோட்டை உமாதேவி, திருச்சி முருகானந்தம் ஆகியோருக்கு மாநில பதவி அளித்தார்.

திருச்சி கூட்டம்

குடியுரிமைச் சட்டத்துக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்யும் பொருட்டு கடந்த டிசம்பரில் தனது அலுவலகத்திற்கு செய்தியாளர்களை அழைத்து தனது கருத்தை கூறியதோடு சரி, அதன் பின்னர் எந்த கட்சி நிகழ்ச்சிகளிலும் கமலை காண முடிவதில்லை. அதற்கு பிறகு ஒரேயொரு முறை திருச்சியில் வைத்து மாநில முழுவதும் இருந்து நிர்வாகிகளை வரவழைத்து கூட்டம் நடத்தினார். அதிலும் சொல்லிக்கொள்ளும் வகையில் கட்சி வளர்ச்சிப்பணிகள் தொடர்பாக கமல் தீவிரமாக எதுவும் பேசவில்லை.

ஓய்வு

கடந்த இரண்டுமாத காலமாக கமல் ஓய்வில் இருப்பதற்கான காரணம் பற்றி கேட்டால், அறுவைச் சிகிச்சையை மட்டுமே காரணமாக கூறுகின்றனர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள். அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் பிஸியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக ஒரு மாதத்திற்கு முன்பே கூறப்பட்டது. ஆனால் மீண்டும் அறுவைச் சிகிச்சையையே கமலின் ஓய்வுக்கான காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டணி

இதனிடையே ரஜினியுடன் இணைந்து அரசியல் செய்யும் எண்ணம் கமலுக்கு உள்ளதால் அவர் அமைதி காத்து வருவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை என்றாலும், மக்கள் நீதி மய்யத்தில் உள்ள மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் கமலின் திடீர் பதுங்கலை நினைத்து குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் சந்திப்பு பயணத்தை பிப்ரவரி மாதம் கமல் தொடங்க இருந்த நிலையில் அந்த பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »