Press "Enter" to skip to content

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து நிறக்கப்பட்ட நீர் நிறுத்தம்: அறுவடை பணி தீவிரம்

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான தேவை குறைந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர் இருப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜுன் 12ம் தேதி முதல் ஜன.28ம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். கடந்தாண்டு 2 மாதம் தாமதமாக ஆக.13ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டாவில்  அறுவடை பணிகள் முடிவதால் இன்று மாலையுடன் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

நடப்பு நீர் பாசன ஆண்டில் மேட்டூர் அணைக்கு 259 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. டெல்டா பாசனத்திற்கு 151 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், மேட்டூர் அணை 4 முறை நிரம்பியதால் உபரிநீராக 27.7 டிஎம்சி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டுள்ளது. நடப்பாண்டில், மேட்டூர் அணை 79 நாட்கள் 120 அடியாக இருந்துள்ளது. கடந்த ஆக.13 தேதி முதல் இன்று வரை 169 நாட்கள் 100 அடிக்கு மேலே நீர்மட்டம் தொடர்ந்து நீடித்துள்ளது. 1947ம் ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்ட போது, அணையின் நீர்மட்டம், 114.50 அடியாக இருந்துள்ளது. அணையின் வரலாற்றில் நீர்திறப்பு நிறுத்தப்பட்ட போது, நீர் மட்டம் மிக அதிகபட்சம் இருந்தது அந்த ஆண்டு தான்.

1946ல் தண்ணீர் நிறுத்தப்பட்ட போது, அணையின் நீர்மட்டம் மிக குறைந்த பட்சமாக 8.9 அடி மட்டுமே இருந்தது. நடப்பாண்டில், இன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.55 அடியாக உள்ளது. இதற்கு முன்பாக 2011ம் ஆண்டு தண்ணீர் நிறுத்தப்பட்ட போது, அணையின் நீர்மட்டம், 109.39 அடியாக இருந்தது. 2011 பிறகு இந்தாண்டு தான் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டபோது 100 அடிக்கு மேலே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »