Press "Enter" to skip to content

சபரிமலை வழக்கு விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும் – சுப்ரீம் நீதிமன்றம் தலைமை நீதிபதி கருத்து

சபரிமலை வழக்கு விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்தார்.

புதுடெல்லி:

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பில் இருந்து 61 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்தையும் விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விவகாரத்தை 9 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு நவம்பர் 14-ந்தேதி உத்தரவிட்டது.

சபரிமலை வழக்குடன், மசூதிகளில் முஸ்லிம் பெண்களை அனுமதிப்பது பற்றியும், பிற மதங்களை சேர்ந்த ஆண்களை திருமணம் செய்த பார்சி பெண்களை தங்கள் வழிபாட்டு தலங்களில் அனுமதிப்பது குறித்தும், தாவூதி போரா இன பெண்கள் தொடர்பான சில பிரச்சினைகளையும் இந்த நீதிபதிகள் குழு அமர்வு விசாரிக்கும் என்று அந்த உத்தரவில் கோர்ட்டு கூறி இருந்தது.

இதைத்தொடர்ந்து புதிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன், இந்த வழக்கு கடந்த 13-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, “இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வக்கீல்கள் ஒன்று கூடி அமர்ந்து பேசி மத அடிப்படையிலான நம்பிக்கை மற்றும் ஒருவருடைய அடிப்படை உரிமை ஆகியவை பற்றிய முக்கியமான அம்சங்கள் குறித்து விவாதிக்கலாம். விசாரணையின்போது ஒவ்வொரு தரப்பு வாதமும் கேட்கப்படும்.

சுப்ரீம் கோர்ட்டின் செகரட்டரி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வக்கீல்களான அபிஷேக் சிங்வி, ராஜீவ் தவான், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் கூடி பேசி 3 வாரங்களில், வழிபாடு பிரச்சினையில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் உள்ளிட்ட சில விஷயங்கள் குறித்து முடிவு செய்ய வேண்டும்.

ஏற்கனவே 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்வைத்துள்ள 7 அம்சங்களில் எதையாவது கூட்டவோ, நீக்கவோ, மறுவடிவமைக்கவோ தேவை இருக்கிறதா? ஒவ்வொரு அம்சம் குறித்து விவாதிக்க தேவைப்படும் கால அவகாசம் எவ்வளவு? ஒவ்வொரு தரப்பு வாதத்துக்கும் எவ்வளவு நாள் தேவைப்படும்? என்பது பற்றியும் தீர்மானிக்கவேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

அப்போது அவர் இந்த வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நம்பிக்கை மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்த விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்கள் குறித்து வக்கீல்கள் இடையில் இதுவரை ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று கூறினார்.

ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை கோர்ட்டே முடிவு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தார். மேலும், அது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய வரைவு ஒன்றையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, சொலிசிட்டர் ஜெனரலின் இந்த வேண்டுகோளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கு விசாரணையை மொத்தம் 10 நாட்களில் முடிக்க வேண்டும் எனவும் அவ்வாறு விசாரணை முடியும் வகையில் தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »