Press "Enter" to skip to content

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்றது: கனிமொழி

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை தரும். எனவே, அந்த பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

உடன்குடி :

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை தரும். எனவே, அந்த பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது“ என்று கனிமொழி எம்.பி. கூறினார். இதுகுறித்து அவர் உடன்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நான் உள்பட தி.மு.க. எம்.பி.க்கள் பலமுறை வலியுறுத்தி பேசி உள்ளோம். இதுதொடர்பாக மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியும்கூட முன்பு பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

வளர்ந்த நாடுகளில் 2 அல்லது 3 இடங்களில் ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. ஆனால், நமது நாட்டில் ஒரு இடத்தில்தான் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. இது பல சிக்கலை ஏற்படுத்தும். எனவே, இங்கு கூடுதலாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பது அவசியமானது. இது இப்பகுதி வளர்ச்சி அடையவும் உதவும். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம்.

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தரும். இதனை அரசு மூர்க்கத்தனமாக, கட்டாயமாக திணிப்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதையே பலரும் எதிர்த்து வரும் நிலையில், 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தேவையற்றது. இதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »