Press "Enter" to skip to content

குழந்தைகள் இப்படி வளர்வது சமுதாயத்தின் சாபக்கேடு- உயர்நீதிநீதி மன்றம் நீதிபதி வேதனை

ஒற்றை பெற்றோருடன் குழந்தைகள் வளர்வது சமுதாயத்தின் சாபக்கேடு என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் வேதனை தெரிவித்தார்.

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் நடந்த தமிழ் வார இதழ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், நீதிபதி என்.கிருபாகரன் பேசியதாவது:-

தற்போது மக்களின் வாழ்வு மருத்துவமனையை சார்ந்தே உள்ளது. முன்பு விடுமுறை காலத்தில் சுற்றுலா தலங்களுக்கு செல்வோம். இப்போது மருத்துவ சிகிச்சைக்காக சென்று கொண்டிருக்கிறோம். ஆரம்ப காலத்தில் வெளியே விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளைகளை இழுத்து பிடித்துக்கொண்டு வீட்டிற்கு கூட்டி வருவார்கள். அந்த நடைமுறை மாறி, வீட்டில் இருக்கும் குழந்தைகளை விளையாடுவதற்காக பெற்றோர் வெளியே அழைத்து செல்கிறார்கள். இந்த நிலை வருத்தம் அளிக்கிறது.

பிள்ளைகளுக்கு விளையாட கற்றுக்கொடுங்கள். அதேபோல், உடற்பயிற்சியையும் சொல்லிக்கொடுங்கள். நாளைய தலைமுறையினர் நோயற்ற வாழ்வு வாழ இன்றைய குழந்தைகளை ஆரோக்கியமானவர்களாக உருவாக்குங்கள். எந்திரங்களுடன் பேசாமல், சொந்த பந்தங்களுடன் பேசி சிரித்து மகிழ குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

வாழ்க்கை துணையிடம் விட்டுக்கொடுக்காததுடன், அனுசரித்து போகாததும், அன்பாக பேசாததுமே விவாகரத்துக்கு காரணமாக அமைகின்றன. மனம் விட்டு சிரித்து பேசினாலே பாதி பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். கணவன்-மனைவி இடையேயான விவாகரத்தால் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். தாயிடம் செல்வதா?, தந்தையிடம் செல்வதா? என்று பரிதவிக்கும் குழந்தையின் நிலைமை பெரும் சோகத்திற்கு உரியது.

ஒற்றை பெற்றோருடன் குழந்தைகள் வளர்வது சமுதாயத்தின் சாபக்கேடு. திருமணம் என்னும் பந்தத்தின் மீது தற்போது மரியாதை குறைந்து வருகிறது.

நாம் காணும் கனவை குழந்தைகளின் மீது திணிப்பதும் தவறு. குழந்தைகள் எதைப் படிக்க ஆசைப்படுகிறார்களோ, அதை படிக்க வையுங்கள். எந்த இலக்கை நோக்கி அவர்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு, அதற்கான பாதையை காட்டும் கலங்கரை விளக்கமாக பெற்றோர் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »