Press "Enter" to skip to content

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நவீன புற்றுநோய் சிகிச்சை மையம்

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ரூ.30 கோடி மதிப்பில் நவீன புற்றுநோய் சிகிச்சை வளாகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை:

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ரூ.30 கோடி மதிப்பில் அதிநவீன எந்திரங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை மைய தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, புதிய மையத்தை திறந்து வைத்து அதில் உள்ள கருவிகளை தொடங்கி வைத்தார். மேலும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.22 கோடியே 21 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை மையத்தையும் காணொலிக்காட்சி மூலம் அவர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச்செயலாளர் க.சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் பி.உமாநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவிலேயே முதன்முறையாக ஏழை மக்களும் சர்வதேச அளவிலான புற்றுநோய் சிகிச்சை பெறக்கூடிய வகையில் ரூ.20 கோடி மதிப்பிலான புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (லீனியர் ஆக்சிலேட்டர்) கருவி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த சிகிச்சையை திட்டமிடக்கூடிய ரூ.2 கோடி மதிப்பிலான ‘சி.டி.ஸ்டுமிலேட்டர்’ என்ற கருவியும் இந்த மையத்தில் பயன்பாட்டுக்கு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த சிகிச்சையை முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் செய்து கொள்ளலாம். உடலின் மற்ற பகுதியை பாதிக்காத வகையில், புற்றுநோய் பாதிப்பை துல்லியமாக கண்டறிந்து, அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் அழிப்பது இந்த கருவியின் சிறப்பு அம்சமாகும்.

நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கோவை, தஞ்சை, காஞ்சீபுரம், சேலம் உள்பட 10 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதேபோல் நவீன புற்றுநோய் சிகிச்சை மையம் நிறுவும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு இந்த சிகிச்சை மையங்கள் கொண்டுவரப்படும். மேலும் புற்றுநோயை கண்டறியும் ‘பெட் ஸ்கேன்’ கருவியை 7 இடங்களில் நிறுவும் பணியும் நடந்து வருகிறது.

சீனாவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. இந்தியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை. மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் தினமும் தமிழகத்தில் கொரனோ வைரஸ் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »