Press "Enter" to skip to content

கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே- நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி

நிர்பயா வழக்கில் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி:

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் (வயது 32), தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். 

முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி கடந்த 17-ம் தேதி நிராகரித்து உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று விசாரணை நடத்தியது.

கருணை மனுவை ஜனாதிபதி  தள்ளுபடி செய்த நடைமுறைகளில் குறைபாடுகள் இருந்ததாக, முகேஷ் சிங்கின் வழக்கறிஞர் வாதிட்டார். சிறையில் முகேஷ் சிங்கை மோசமாக நடத்தியதை காரணமாக காட்டி, கருணை காட்டும்படி கேட்கப்பட்டது. மரண தண்டனை தொடர்பான தீர்ப்புகளையும், கருணை வழங்குவது தொடர்பான ஜனாதிபதியின் அதிகாரம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

அதன்பின்னர் மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடும்போது, குற்றவாளிகள் செய்த குற்றங்கள் மன்னிக்க முடியாதவை என்றும், அவருக்கு கருணை காட்டக்கூடாது என்றும் தெரிவித்தார். கருணை மனு பரிசீலனைக்காக, வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், முகேஷ் சிங்கின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், முகேஷ் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே என்றும் கூறி உள்ளனர்.

கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதியின் முடிவும், உள்துறை அமைச்சகத்தின் ஆவணங்களும் திருப்தியாக இருந்தன  என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »