Press "Enter" to skip to content

ராணிப்பேட்டை பாலாற்று பாலம் அருகில் இருநகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை சந்திப்பில் நீரூற்றுடன் கூடிய பூங்கா

வேலூர்: ராணிப்பேட்டை, ஆற்காட்டை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் சந்திப்பு சர்க்கிளில் நீரூற்றுடன் கூடிய பூங்காவும், விபத்துகளை தவிர்க்க தானியங்கி போக்குவரத்து சிக்னலும் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும், ஆற்காடு-திண்டிவனம் சாலையும், ஆற்காடு பஸ் நிலையம் அருகில் இருந்து வரும் வேலூர் சாலையும், ராணிப்பேட்டை பழைய பாலாற்று பாலம், புதிய பாலாற்று பாலத்தில் இருந்து வரும் சாலைகளும் சந்திக்கும் ராணிப்பேட்டை பாலாற்று பாலம் அருகில் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள சர்க்கிள் பகுதியில் உள்ள காலியிடத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை வெட்டவெளியாகவே வைத்துள்ளது. சென்னை-பெங்களூரு சாலையில் ஆற்காடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் மற்றொரு சாலை பிரிந்து மீண்டும் புதிய பாலாற்று பாலம் அருகில் உள்ள சர்க்கிளில் இணைகிறது.

நேராக வரும் சாலையும் இங்கு வந்து இணைகிறது. இதில் இருந்து பிரியும் ஒரு பாதை புதிய பாலாற்று பாலத்தின் ஊடாக செல்கிறது. இத்தகைய குழப்பமிக்க சாலை சந்திப்பில் அமைந்துள்ள சர்க்கிள் பகுதி வெட்டவெளியாகவே உள்ளது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்ட தலைநகருக்குள் நுழையும் பாலாற்று பாலத்தின் அருகில் உள்ள இப்பகுதி ஆற்காடு நகருக்கும் நுழைவுப்பகுதியாக அமைந்துள்ளது. இரண்டு வளர்ச்சியடைந்த நகருக்குள் நுழையும் இப்பகுதியில் நீரூற்றுடன் கூடிய பூங்கா அமைக்க வேண்டும். மேலும் அங்குள்ள பாலாற்றங்கரையை ஒட்டிய பகுதியிலும் குப்பைகள் கொட்டப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து பூங்கா நிறுவ வேண்டும். அத்துடன், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை நகரங்களின் வரலாற்று தகவல்கள், சின்னங்கள் உள்ள இடங்கள் குறித்த வழிகாட்டி தகவல்கள் அடங்கிய பலகைகளை தமிழ், ஆங்கில மொழிகளில் வைக்க வேண்டும்.

இதன் மூலம் சுற்றுலா பயணிகளையும் இந்நகரங்களுக்கு வரவழைக்க முடியும். அதோடு இரு நகரங்களின் வரலாற்று தொடர்புடைய சின்னங்களையும் அங்கு நிறுவ வேண்டும். மேலும் அங்கு சாலை சந்திப்புகளில் வாகன ஓட்டிகளின் குழப்பத்தால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தானியங்கி போக்குவரத்து சிக்னலை அமைப்பதுடன், ேபாக்குவரத்து போலீசாரையும் நிறுத்த வேண்டும் என்று ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »