Press "Enter" to skip to content

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலிப் போராட்டம்… வேல்முருகன் அழைப்பு !

சென்னை: குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெறக் கோரி நாளை தமிழகம் தழுவிய அளவில் நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு பாஜகவுக்கு சேவகம் செய்யும் அரசாகவே உள்ளதாகவும், அது தமிழக மக்களுக்கான அரசாக செயல்படவில்லை என்றும் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்புச் சட்டங்களை பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்கள் நிறைவேற்ற மாட்டோம் என அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு மட்டும் அதை நிறைவேற்றுவோம் என அறிவித்திருப்பதாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருபதாவது;

ஒன்றிய ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசு கொண்டுவந்திருப்பதும், அதனை அதிமுக எடப்பாடி பழனிசாமி அரசு அமல்படுத்த இருப்பதுமான குடியுரிமைத் திருத்த சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து நாளை (30.01.2020) அதாவது தேசத் தந்தை காந்தியடிகள் ஆர்எஸ்எஸ்சின் தாய் அமைப்பான இந்து மகா சபையின் கோட்சேயால் கொல்லப்பட்ட கொடுந்துயர நாளான ஜனவரி 30 அன்று ‘தமிழக மக்கள் ஒற்றுமை மேடை’ சார்பில் தமிழகம் தழுவிய மனித சங்கிலிப் போராட்டம் நடக்கவுள்ளது.

இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கிது. அதுபோல் தமிழக மக்களும் இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டு நம் எதிர்ப்பை மத்திய, மாநில அரசுகளுக்குக் காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்தக் குடியுரிமைத் திருத்த சட்டத்தை (சிஏஏ) மட்டுமல்ல; தேசிய மக்கள்தொகை பதிவேட்டையும் (என்பிஆர்) நிறைவேற்றுவோம் என அறிவித்துள்ளது அதிமுக அரசு. அரசமைப்புச் சட்டத்துக்கும் மக்களுக்கும் விரோதமான இந்த இரு கருப்புச் சட்டங்களையும் பாஜக கூட்டணிக் கட்சி உள்ளிட்டவை ஆட்சியிலிருக்கும் மாநிலங்களே நிறைவேற்ற மாட்டோம் என்று அறிவித்திருக்கும் நிலையில், தமிழக அதிமுக அரசோ நிறைவேற்றுவோம் என்கிறது.

இதன் மூலம் அதிமுக அரசு பாஜகவுக்கு சேவகம் செய்யும் அடிமை அரசே தவிர தமிழக மக்களுக்கான அரசல்ல என்பதைக் காட்டிக்கொண்டுள்ளது.

எனவே மத்திய, மாநில அரசுகளையும் அவற்றின் கருப்புச் சட்டங்களையும் எதிர்க்கும் வண்ணம் நாளை (30.01.2020) நடக்கவுள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழக மக்கள் அனைவரையும் அன்போடும் உரிமையோடும் அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »