Press "Enter" to skip to content

குடமுழுக்கு விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயில் வளாகம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை

தஞ்சை: குடமுழுக்கு விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயில் வளாகம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா வருகிற 5ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கைசிறப்பாகவும் , அதே வேளையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் உடைமைகள் ஆகியவற்றை நுழைவுவாயில் முன்பே மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சரக டிஐஜி லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் உத்தரவின்படி போலீசார் தஞ்சை பெரிய கோயிலுக்கு சச்சின், சீசர் என்ற 2 மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் மற்றும் நவீன கருவிகளுடன் நேற்று வந்தனர். பின்னர் பெரிய கோயில் முழுவதும் அங்குலம் அங்குலமாக மோப்ப நாயை வைத்து போலீசார் சோதனை நடத்தினர். 2 மோப்ப நாய்களும் பெரிய கோயில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் சென்று வெடிகுண்டு மற்றும் அசம்பாவித பொருட்கள் ஏதும் உள்ளதா என மோப்பம் பிடித்தது. மெட்டல் டிடெக்டர் மற்றும் நவீன கருவிகள் மூலம் போலீசார் பெரிய கோயில் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இதுகுறித்து வெடிகுண்டு சோதனை நடத்திய போலீசார் கூறும்போது, பெரிய கோயில் குடமுழுக்கு முடியும் வரை பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் மோப்பநாய் மற்றும் மெட்டெல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு உள்ளிட்ட அசம்பாவித பொருட்கள் உள்ளனவா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை குடமுழுக்கு முடியும் வரை தொடர்ந்து நடைபெறும். நவீன கருவிகள் மூலம் பூமிக்கடியில் வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தால் கூட கண்டு பிடித்து விடலாம். மேலும் கண்ணுக்கு தெரியாத வெடிபொருட்களை கண்டுபிடித்து அதை செயலிழக்க செய்ய முடியும். சந்தேகத்துக்குரிய நபர்கள் பெரிய கோயிலில் சுற்றி திரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »