Press "Enter" to skip to content

தோட்டத்து பண்ணை குட்டையில் 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே தோட்டத்து பண்ணை குட்டையில் வளர்க்கப்பட்ட 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கொக்கரகுண்டி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(49), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் அரை ஏக்கர் பரப்பளவில் மீன் வளர்ப்பதற்காக பண்ணை குட்டை அமைத்து அதில் ரோகு, கட்லா, மிருகால் வகைகளை சேர்ந்த 3 ஆயிரம் குஞ்சுகள் வாங்கி குட்டையில் விட்டு வளர்த்து வந்தார். குட்டையில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு 3 மாதங்கள் ஆன நிலையில் நேற்று காலை குட்டையில் இருந்த மீன்கள் அனைத்தும் செத்து மிதந்தன.

இதைக்கண்ட விவசாயி கனகராஜ் அதிர்ச்சியடைந்தார். இப்பகுதியில் செயல்பட்டு வரும் 8க்கும் மேற்பட்ட காகித ஆலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதால், விவசாய தோட்டங்களில் உள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் கழிவுநீர் கலந்து மாசுபட்டுள்ளதோடு, குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், ஆழ்குழாய் கிணற்று நீரை மீன் வளர்ப்பு குட்டையில் விட்டதால் மீன் குஞ்சுகள் அனைத்தும் இறந்துள்ளதாகவும் விவசாயி கனகராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் காகித ஆலையிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் கழிவு நீர் வெளியேற்றப்படுவதால், நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டுள்ளது. கழிவுநீரை வெளியேற்றும் காகித ஆலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »